குண்டூரில் நாக தெய்வம் கோவிலை இஸ்லாமியர்கள் இடித்ததாகப் பரப்பப்படும் வதந்தி வீடியோ !

பரவிய செய்தி

குண்டூரில் நடந்தது. நாளை உங்கள் ஊரில். இது எள்ளுண்டி நா வுரியில் நடக்கிறது இந்த காணொளி சிறுபான்மையினர் பெரும்பான்மையாகவோ அல்லது சமூகத்தில் பலம் வாய்ந்தவர்களாகவோ மாறும் அபாயம், இந்த காணொளி எதிர்காலத்தில் நமது நிலையை காட்டுகிறது.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 40 வருட பழமையான நாகா கோவிலின் சுவரை இஸ்லாமியர் ஒருவர் இடிப்பதாகச் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. மேலும், சமூகத்தில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக மாறினால் இது போன்ற அபாயங்கள் ஏற்படும் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

Tweet Link

Facebook link 

உண்மை என்ன ?

வைரலான வீடியோவை நன்கு கவனித்தால், நாகா கோவிலின் சுவர் எனச் சொல்லப்படுவதில் இஸ்லாம் மதத்தின் சின்னம் இருப்பதை நம்மால் காண முடிகிறது.

இதுகுறித்து இணையத்தில் தேடியபோது 2022 அக்டோபர் 16ம் தேதி ஜீ நியூஸ்(Zee News) செய்தித்தளம் Guntur: Attempt to demolish the Dargah எனும் தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவும் செய்தியில் வந்த வீடியோவும் ஒன்றாக இருப்பதை நம்மால் காண முடிகிறது. அதில், தர்காவை இடிப்பதற்கு மக்கள் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதாகக் குறிப்பிட்டுள்ளது. தர்காவை இடிப்பதற்கு எதிராகப் பாஜக பிரதிநிதிகளும் குரல் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News Link

“இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சிறிய தர்காவை இடித்துவிட்டு பெரிய மசூதியை கட்ட முயற்சி செய்கிறார்கள். இதனை ஆந்திர பாஜக அனுமதிக்காது” என  பாஜகவின் தேசிய செயலாளர் சுனில் தியோடர்(Sunil Deodhar) தனது ட்விட்டர் கணக்கில் வைரலான வீடியோ குறித்து அக்டோபர் 16ம் தேதிப் பதிவிட்டிருந்தார்.

Twitter Link | Archive Link

மேலும், அக்டோபர் 17ம் தேதி “Miscreants tries to demolish place of worship in AP’s Guntur” எனும் தலைப்பில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்(New Indian Express) ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதிலும் இஸ்லாமியர்களால் இடிக்கப்பட்டது பாஜி பாஷா நிஷானி தர்கா (Bhaji Bhasha Nishani) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 40 வருடங்களாக அனைத்து சமூகத்தினரும் அந்தத் தர்காவில் வழிபட்டு வந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News Link

“வைரலான வீடியோவில் இருக்கும் பாஜி பாஷா நிஷானி தர்கா ரத்னம் என்கிற ரஹ்மான் என்பவரால் கட்டப்பட்டது. இவர் கடந்த 40 வருடங்களாக அங்கு வசித்து வந்துள்ளார். 15 வருடங்களுக்கு முன்பு மறைந்த தன் மனைவியின்( நாக ரத்தினம்) நினைவாக இந்த இடத்தில ஒரு சமாதியைக் கட்டியுள்ளார். அவரின் நினைவாக தான் பாம்பின் சிலை அங்கே வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், தான் இறந்த பிறகு அதே இடத்தில் ஒரு மசூதி கட்ட வேண்டும் என தன் மகள் மற்றும் சுற்றி இருந்தவர்களிடம் கூறியுள்ளார். 2020ல் கொரோனா தொற்று ஏற்பட்டு ரஹ்மான் இறந்துவிட்டார். இதனையடுத்து அவருடைய மகள் அந்த இடத்தில் மசூதி கட்ட ஏற்பாடு செய்துள்ளார். இதனை அங்கிருந்த சில குடும்பங்கள் எதிர்த்துள்ளனர்” என லாலாபேட் காவல் ஆய்வாளர் கூறியுள்ளதாக இந்தியா டுடே-வில் வெளியாகி இருக்கிறது.

இதிலிருந்து, குண்டூரில் 40 வருட பழமையான நாகா கோவிலை இஸ்லாமியர்கள் இடித்ததாகப் பரப்பப்படும் வீடியோவில் இருப்பது கோவில் அல்ல, சிறிய தர்கா என்பது நமக்குத் தெரிய வருகிறது.

முடிவு :

நம் தேடலில், ஆந்திராவின் குண்டூரில் உள்ள 40 வருட பழமையான நாகா கோவிலை இஸ்லாமியர்கள் இடித்ததாக வலதுசாரிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோவில் இருப்பது அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு சிறிய தர்கா என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader