This article is from May 24, 2021

ஆந்திராவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.25,000 அறிவிப்பா ?

பரவிய செய்தி

அசத்தல் முதல்வர்.. ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டுவரி, தண்ணீர் வரி, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை தள்ளுபடி செய்ததுடன், குடும்ப அட்டைக்கு 25 ஆயிரம் உதவித் தொகையும் அறிவித்து அசத்தியுள்ளார்.

 

மதிப்பீடு

விளக்கம்

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன், கொரோனா பாதிப்பு காரணமாக  வீட்டுவரி, தண்ணீர் வரி, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை தள்ளுபடி செய்ததுடன், குடும்ப அட்டைக்கு 25 ஆயிரம் உதவித் தொகையையும் வழங்கும் அறிவிப்பை வெளியிட்டதாக தமிழக சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

Facebook link | Archive link 

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் ஒவ்வொரு நடவடிக்கைகளை பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் தமிழக சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிரந்து வைரல் செய்வதுண்டு. அதுபோலவே, இந்த செய்தியும் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

ஆந்திராவில் குடும்ப அட்டைக்கு ரூ.25000 வழங்குவது குறித்து தேடுகையில், அந்த மாதிரியான எந்த அறிவிப்பும் வெளியாகியதாக செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. தமிழிலும் முன்னணி செய்தி ஊடகங்கள் மட்டுமின்றி எந்த இணைய செய்திகளும் கூட இப்படியொரு செய்தியை வெளியிடவில்லை.

கடந்த 2020 ஏப்ரல் மாதம், ஆந்திராவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவதாக வெளியான செய்தி மட்டுமே கிடைத்தது. இதைத் தவிர்த்து, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிதி வழங்கிய செய்திகளே உள்ளன.

” ஆந்திராவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதேபோல், கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளதாக ” சமீபத்திய செய்திகளில் வெளியாகி இருக்கிறது

முடிவு :
.
நம் தேடலில், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் வீட்டுவரி, தண்ணீர் வரி, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை தள்ளுபடி செய்ததுடன், குடும்ப அட்டைக்கு 25 ஆயிரம் உதவித் தொகையும் அறிவித்து உள்ளதாக பரவும் தகவல் வதந்தியே. அப்படி எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை என அறிய முடிகிறது.
Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader