ஆந்திரா ரேஷன் கார்டுகளில் இயேசு படம் அச்சடிப்பா ?| உண்மை என்ன?

பரவிய செய்தி
ஆந்திராவில் அரசே மதம் மாற்றுகிறதா ? ஆந்திராவில் ரேஷன் கார்டில், இயேசு கிறிஸ்து படம்! ஜெகன்மோகன் ரெட்டி அரசின் மதம் மாற்றும் முயற்சி.
மதிப்பீடு
விளக்கம்
ஆந்திரப் பிரதேச மாநிலத்தை ஆளுகின்ற ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அம்மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கும் ரேஷன் கார்டுகளில் இயேசு கிறிஸ்துவின் புகைப்படத்தை அச்சடித்து வழங்கி வருவதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
Kathir website news | archived link
கதிர் நியூஸ் இணையதளத்தில் ” ஆந்திராவில் ரேஷன் கார்டில், இயேசு கிறிஸ்து படம்! ஜெகன்மோகன் ரெட்டி அரசு அடாவடி ” என்ற தலைப்பில் வெளியான செய்தி மற்றும் நியூஸ் கார்டு முகநூல் உள்ளிட்டவையில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை அறிந்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ஆந்திர மாநிலத்தில் ரேஷன் கார்டு அமைப்பு டிஜிட்டல்மயமாக்கப்பட்ட மற்றும் ஆதார் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளில் குடும்பத்தினரின் புகைப்படம், தனிப்பட்ட விவரங்கள், ஆண்டு வருமானம், சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட பல விவரங்கள் இணைக்கப்பட்டு இருக்கும். பழைய ரேஷன் கார்டுகளில் சந்திரபாபு நாயுடுவின் புகைப்படமும், மாநில அரசின் லோகோவும் இடம்பெற்று இருக்கும். தற்பொழுது, மக்களுக்கு புதிய வடிவில் ரேஷன் கார்டுகளை வழங்க தற்போதைய அரசின் முயற்சிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
ஆந்திர ரேஷன் கார்டில் இயேசுவின் புகைப்படம் அச்சடித்து விநியோகம் செய்வதாக பரவும் விநியோக அட்டை ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள வட்லமுரு-வில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அட்டையாகும்.
கிழக்கு கோதாவரியின் வட்லமுரு பகுதியின் ரேஷன் கடையில் பணியாற்றி வரும் டீலர் ரேஷன் பொருட்கள் வாங்கும் மக்களுக்கு ரேஷன் கார்டு உடன் பிரத்யேகமாக அளித்த ரேஷன் புத்தகத்தின் அட்டையில்தான் இயேசுவின் உருவம் அச்சடிக்கப்பட்டு உள்ளது. அந்த சிறிய புத்தகத்தில் மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் குறித்து வைக்கப்படுகிறது. இது அரசின் தலையீடு இல்லாமல் டீலரே தன்னிச்சையாக செய்து வந்துள்ளார்.
அவ்வாறு வழங்கப்படும் ரேஷன் புத்தக அட்டைகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புகைப்படம் இடம்பெறச் செய்வதாக டீலர் தெரிவித்து உள்ளார். அதன்படி, 2016-ல் வழங்கப்பட்ட அட்டையில் சத்ய சாய்பாபா புகைப்படம் , 2017 மற்றும் 2018-ல் வெங்கடேஸ்வர பெருமாள் புகைப்படமும், 2019-ல் இயேசு கிறிஸ்து புகைப்படத்தையும் அச்சிட்டு வழங்கியுள்ளார்.
இது குறித்து ஆந்திராவின் பொதுவிநியோக வழங்கல் துறையின் இயக்குனர் பி.அருண் பாபு கூறுகையில், ” இது உண்மையில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியைச் சேர்ந்தது. டீலர் ஒருவர் தன்னுடைய குறிப்பு தேவைக்காக சொந்தமாக அச்சடித்து உள்ளார். இந்த ரேஷன் அட்டை ஆந்திர அரசால் அச்சடிக்கப்பட்டவை அல்ல. இது ஒரு டீலரால் அச்சடிக்கப்பட்டு குறிப்பிட்ட கிராமத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது ” என இந்தியா டுடே செய்திக்கு தெரிவித்து உள்ளார்.
கதிர் இணையதளத்தில், ” ஆந்திராவின் பொதுவிநியோக வழங்கல் துறையின் இயக்குனர் அருண் பாபுவிடம் கேட்டது, டீலர் இப்படி ரேஷன் கார்டில் இயேசு கிறிஸ்து படத்தை அச்சடித்து உள்ளார். இதற்கும் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சர்வ சாதாரணமாக ” பதில் அளித்ததாக குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், கடந்த ஆண்டுகளில் அச்சிட்ட புகைப்படங்கள் குறித்து ஏதும் குறிப்பிடாமல் செய்தியை வெளியிட்டு உள்ளனர்.
ஏற்கனவே, திருமலை முதல் திருப்பதி வரையில் அரசு பேருந்தில் வழங்கப்பட்ட டிக்கெட்களில் ஜெருசேலம் பபயணம் குறித்த தகவல் இடம்பெற்று இருந்தது சர்ச்சையாகியது. இது தொடர்பாக, நெல்லூர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் படிக்க : திருப்பதி மலையில் சர்ச் கட்டப்பட்டுள்ளதா ?| வைரலாகும் கட்டிடத்தின் உண்மை என்ன ?
இதற்கு முன்பாக திருப்பதி மலையில் கிறித்தவ மிஷனரிகள் ஆலயம் அமைக்க ஜெகன் மோகன் அரசு அனுமதி அளித்ததாக தவறான புகைப்படங்கள் நாடு முழுவதிலும் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இயேசு கிறிஸ்துவின் புகைப்படம் அச்சடித்து வெளியிடுவதாக பரவும் புகைப்படம் கிழக்கு கோதாவரியில் ஒரேயொரு ரேஷன் கடையில் டீலரால் வழங்கப்பட்டவை.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புகைப்படத்தை அச்சடித்து உள்ளார். இது ஆந்திர மாநில அரசின் அதிகாரப்பூர்வ ரேஷன் அட்டை அல்ல. இந்த புகைப்படம் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.