ஆந்திராவில் கிரிவலத்தின் போது காற்றில் உக்ர நரசிம்மராக காட்சியளித்த மரம் எனப் பரவும் வதந்திகள் !

பரவிய செய்தி
ஒரு அர்ச்சகர் எனக்கு அனுப்பியது: சிம்ஹாசலம் கிரி பிரதக்ஷணத்தின் போது ஒரு மரம் காற்றில் உக்ர நரசிம்மராக காட்சியளித்த அந்த அரிய தருணம். இதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்.
மதிப்பீடு
விளக்கம்
ஆந்திராவில் விசாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள சிம்ஹாசலம் கோவிலின் மலை கிரிவலத்தின் போது மரம் காற்றில் உக்ர நரசிம்மராக காட்சியளித்ததை அர்ச்சகர் ஒருவர் படம்பிடித்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் அந்த வீடியோவில் பல மரங்களுக்கு இடையில், ஒரு மரம் மட்டும் காற்றில் பயங்கரமாக ஆடுவதையும் காணமுடிகிறது.
மேலும் இந்த வீடியோவானது முகநூலிலும், யூடியூப் பக்கங்களிலும் கூட வைரலாகப் பரவி வருவதைக் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2022-இல் இருந்தே மற்ற நாடுகளின் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவதைக் காண முடிந்தது.
SPOOKY TREE … pic.twitter.com/iFhpp4P8bv
— ROBERT (@roberticu) October 31, 2022
எனவே இந்த வீடியோ குறித்து மேலும் தேடியதில், OMSHREE SHORTS என்னும் யூடியூப் பக்கம் கடந்த 2022 நவம்பர் 24 அன்று “இந்தோனேசியாவின் சுமத்ராவில் நடனமாடும் மரம்” என்னும் தலைப்பில் இதே வீடியோவை வெளியிட்டுள்ளது.
இதே போன்று Univision என்னும் ஸ்பானிஷ் ஊடகம் பரவி வரும் இந்த வீடியோ குறித்து கட்டுரை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அந்தக் கட்டுரையில் “சமூக வலைதளங்களில் Thewani Dewni என்னும் பயனர் அக்டோபர் 2022 இல் இந்தோனேசியாவின் சுமத்ராவில் ஒரு மரம் நடனம் ஆடுவதை படம் பிடித்தார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் Thewani Dewni என்ற பயனரின் விபரங்கள் குறித்து தேடியதில் எந்த விபரங்களும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே பரவி வரும் இந்த வீடியோ, எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
ஆனால் இது இந்தியாவில் பரவுவதற்கு முன்பே, கடந்த 2022-இல் இருந்தே பல்வேறு நாடுகளில் வைரலாகப் பரவியுள்ளது. எனவே இது ஆந்திராவில் எடுக்கப்பட்டது அல்ல என்பது தெளிவாகிறது.
மேலும் படிக்க: மடகாஸ்கரில் சிவலிங்க வடிவ மரம் எனப் பட்டைய போட்டு பகிரும் புகைப்படம் !
இதற்கு முன்பும் மரங்கள் குறித்து மத ரீதியாக பல்வேறு வதந்திகள் பரவின. அதனையும் ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: பனை மரம் பறக்கிறதா ?
மேலும் படிக்க: இலந்தைப் பழ மரத்தின் வயது 2,000 ஆண்டுகள் என அமர் பிரசாத் பதிவிட்ட பொய் தகவல் !
முடிவு:
நம் தேடலில், காற்று பயங்கரமாக வீசியதன் காரணமாக மரம் ஆடியதை, ஆந்திராவில் காற்றில் உக்ர நரசிம்மராக காட்சியளிக்கும் மரத்தை அர்ச்சகர் படம் எடுத்ததாகக் கூறி தவறாகப் பரப்பிவருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.