4 லட்சம் இளைஞர்களுக்கு அரசு பணி அளிப்பதாக ஜெகன் மோகன் அறிவித்தாரா ?

பரவிய செய்தி
அக்டோபர் 2-ல் அப்பாயின்மென்ட் ஆர்டர். 4 லட்சம் இளைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெகன் மோகன் ரெட்டி.
மதிப்பீடு
விளக்கம்
புதிதாக பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி ஆரம்பம் முதலே அதிரடியான அறிவிப்புகளை அளித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் புதிய அறிவிப்பாக 4 லட்சம் இளைஞர்களுக்கு வருகிற அக்டோபர் 2-ல் அப்பாயின்மென்ட் ஆர்டர் அளிப்பதாக மீம்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. உண்மையில், ஆந்திராவில் 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஜெகன் மோகன் ஏற்படுத்தி தருகிறாரா ? அந்த பணி எத்தகையது என்பது குறித்து தேடினோம்.
மே 2019-ல் ஜெகன் மோகனின் குறித்த செய்தியில், புதிய ஆந்திர அரசின் நோக்கம் ஊழல் இல்லாத அரசை உருவாக்க வேண்டும் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி பெரியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நன்மைகளை அதிகரிக்கச் செய்வது என இடம்பெற்று இருக்கிறது. அன்றைய செய்தியிலேயே, 4 லட்சம் இளைஞர்களுக்கு கிராமப்புற ஆர்வ ஊழியர் பணி தொடர்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
முந்தைய சந்திரபாபு நாயுடு அரசு நியமித்த ஜன்ம பூமி கமிட்டி மீது குற்றம்சாட்டிய ஜெகன் மோகன், அரசின் நலத் திட்டங்கள் எந்தவித ஊழல் முறைகேடும் இல்லாமல் மக்களுக்கு நேரடியாக சென்றடைய கிராமப்புற ஆர்வ ஊழியர்களாக இளைஞர்களை நியமிக்க முடிவு செய்தார் . இந்த திட்டத்தின் கீழ் 4 லட்சம் இளைஞர்களுக்கு அரசு பணி கிடைக்கும் என கூறினார். ஒவ்வொரு கிராமப்புற ஆர்வ ஊழியரும் 50 வீடுகளுக்கு அரசின் நலத் திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்கு ஊதியமாக ரூ.5,000 வழங்கப்படும்.
இது குறித்து ஜெகன் மோகன் கூறுகையில், ஒவ்வொரு கிராமப்புற செயலகங்களுக்கு 10 பேர் நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம் 1.6 லட்சம் பேருக்கு அரசு பணி கிடைக்கும். அவர்கள் அனைவரும் வருகிற அக்டோபர் 2-ம் தேதிக்குள் நிரப்பப்படுவார்கள் என தெரிவித்து இருக்கிறார்.
ஆகஸ்ட் 15-ல் கிராமப்புற ஆர்வ ஊழியராக 4 லட்சம் பேருக்கும் , அக்டோபர் 2-ம் தேதி கிராமப்புற செயலகங்களுக்கு 1.6 லட்சம் அரசு பணி என மொத்தம் 5.6 லட்சம் வேலைவாய்ப்பை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.