This article is from Apr 26, 2018

ஆந்திரா அரசு இணையத்தளத்தில் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் கசிந்தது.!

பரவிய செய்தி

அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் 1.3 லட்சம் பேரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தனிப்பட்ட விவரங்கள் கசிந்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

ஆதார் எண் உள்ளிட்ட  ஒரு தனி மனிதனின் அனைத்து விவரங்களும் ஆந்திராவின் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளத்தில் கசிந்ததை ஆராய்ச்சியாளர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

விளக்கம்

ஆதார் ” ஒரு தனி மனிதனின் அடையாளமாக கருதப்படுகிறது. எதற்கெடுத்தாலும் தற்போது ஆதார் மயமாக மாறி வருகிறது. மக்களின் அனைத்து காரியங்களுக்கும் ஆதார் எண் மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதனின் கை ரேகை, கண் பார்வை பதிவு செய்து அவரின் முழு விவரத்தையும் அறியவே ஆதார் எண் பயன்படுகிறது.

ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் எளிதில் கசிந்து விட வாய்ப்புள்ளது என ஆதார் அறிமுகப்படுத்திய போதே பல எதிர்ப்புகள் உண்டாகின. ஆனால், ஆதார் பற்றிய விவரங்களை யாராலும் ஹக் செய்ய இயலாது என்றும், மேலும் 8 அடி, 10 அடி உயர சுவர் அமைத்து ஆதார் விவரங்களை பாதுகாப்பதாகத் தெரிவித்தனர்.

இத்தகைய சூழ்நிலையில் ஆதார் தகவல்கள் எளிதாக மக்கள் பார்க்கும்படி கசிந்துள்ளது. Andhra Pradesh state housing corporation என்ற ஆந்திர அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சுமார் 1,34, 193 பேரின் தனிப்பட்ட ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளரான ஸ்ரீனிவாஸ் கோடாலி என்பவர், அரசு இணையத்தளத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தகவல்கள் வெளியானதை தன் ட்விட்டர் கணக்கில் வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு மனிதனின் தனிப்பட்ட விவரத்துடன் சாதி, மத விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டு, Unique Identification Authority of India ஒவ்வொரு குடிமகனின் ஆதார் தகவல்களுடன் சாதி, மதம், தொழில் பற்றிய தகவல்களை இணைக்கவில்லை. ஆனால், மற்ற அரசு துறைகளில் நிகழ்ந்திருக்க கூடும் என்கிறார்.

இணையத்தில் வெளியான தகவலை ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து தன் ட்விட்டர் கணக்கில், உங்களின் தனிப்பட்ட ஆதார் எண்ணுடன் எந்தெந்த விவரங்களை UIDAI இணைத்துள்ளது என்பதற்கான ஆதாரம் இதோ எனக் எழுதியுள்ளார்.

“  கோடாலி வெளியிட்ட ஸ்க்ரீன்ஷார்ட் படத்தின் அட்டவணையில், ஆதார் எண், வங்கி கிளை, வங்கி கணக்கின் எண், தந்தை பெயர், முகவரி, கிராம பஞ்சாயத்து, அலைப்பேசி எண், ரேஷன் அட்டை விவரம், தொழில், சாதி மற்றும் மதம் குறித்த தகவல்கள் இடம்பெற்றன. மேலும், அவரின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களும் உள்ளதாக ” தெரிவித்துள்ளார்.

ஒருவரின் தனிப்பட்ட விவரம் வெளியானாலும், அதில் இருந்த பெயர், முதல் எண்ணைத் தவிர மற்ற ஆதார் எண் உள்ளிட்டவற்றை மறைத்தே ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த விவரங்கள் இணையத்தளத்தை ஹக் செய்தோ அல்லது தவறான முறையில் உள்நுழைந்தோ எடுக்கப்படவில்லை என Medianama அறிக்கை தெரிவிக்கின்றன.

1.3 லட்சம் இந்திய குடிமகன்களின் தனிப்பட்ட ஆதார் விவரங்கள் அரசு இணையத்தளத்தில் வெளியானது குறித்து யாரும் பொறுப்பேற்கவில்லை. மே 2017-ல் 20  மில்லியன் மக்களின் ஆதார் விவரம் கசிந்த பிறகு ஒருவரின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு குறித்து ஆந்திராவில் சட்டம் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனி மனிதனின் விவரங்கள் வெளியானது பெரிய விசயமில்லை என பலரும் நினைக்கலாம். ஆனால், இதில் இருக்கும் ஆபத்தை அறிவது முக்கியமானதாகும். ஆதார் விவரங்களை எளிதாக யாரும் ஹக் செய்ய இயலாது என்று கூறிய அரசு, தற்போது அரசின் இணையத்தளத்தில் தனி மனிதனின் விவரங்கள் வெளியாகியுள்ளதற்கு என்ன பதில் கூறப் போகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader