This article is from Mar 30, 2021

அனிதா நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தாரா ?

பரவிய செய்தி

அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் – ஸ்டாலின்

Twitter link

மதிப்பீடு

விளக்கம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு நீட் ரத்து செய்வோம் என நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு, அனிதா பெயரில் நீட் பயிற்சி மையம் அமைக்கப்படும் என அறிவித்து இருப்பதாக நியூஸ் 7  உடைய நியூஸ் கார்டு  சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, ட்ரோல் மீம்களும் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தேர்தல் பரப்புரையின் போது, ” இவர்கள் நீட் வேணாம் என்பார்களாம், அவர்கள் நீட் வேணும் என்பார்களாம் இருவரும் கூட்டணி வச்சுப்பாங்களாம். நீட் தேர்வை ஒழிப்பார்களாம், அப்புறம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனிதா பெயரிலேயே நீட் தேர்வு பயிற்சி முகாம் வைப்பார்களாம் ” எனப் பேசியது வைரலாகி வருகிறது(வீடியோவில் 13.20வது நிமிடத்தில்) .

Facebook link | Archive link

உண்மை என்ன ?

நீட் தேர்வு ரத்து செய்ய முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தனர். நீட் தேர்வை ரத்து செய்வது சாத்தியமா என பல கேள்விகள் ஒருபுறம் இருக்க, நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி விட்டு எப்படி அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையம் அமைப்பதாக கூறுகிறார்கள் என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என வைரல் செய்யப்படும் நியூஸ் 7 தமிழ் உடைய செய்தி குறித்து தேடுகையில், மார்ச் 24-ம் தேதி ஸ்டாலின் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் போது வெளியிட்ட லைவ் வீடியோ கிடைத்தது. அதில், அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் – ஸ்டாலின் என வெளியாகி இருக்கிறது.

Facebook link | Archive link 

ஆனால், அந்த வீடியோவில் ஸ்டாலின் பேசுகையில், என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி எனும் பெயரில் ஒரு மையத்தை உருவாக்கி கடந்த 2 வருடத்தில் ஏறக்குறைய ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கேன். 2 மாதங்களுக்கு முன்பு அந்த அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், இது கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் அல்ல, ஆட்சிக்கு வந்த உடன் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டத்திலும் தொடங்குவேன் என அறிவித்தேன். அதைத்தான் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையமாக, அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாவட்டந்தோறும் தொடங்கப்படும் என தேர்தல் அறிக்கையிலும் உறுதி மொழியாக அளிக்கப்பட்டு இருக்கிறது ” எனக் கூறி இருக்கிறார். நீட் பயிற்சி மையம் என அவர் குறிப்பிடவில்லை. ஆனால், செய்தியில் நீட் பயிற்சி மையம் என குறிப்பிட்டு விட்டனர்.

ஸ்டாலினின் இதே பரப்புரை குறித்து இந்து தமிழ் திசையில் வெளியான செய்தியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்றே கூறப்பட்டுள்ளது, ” நீட் பயிற்சி அளிப்பதாக ” ஏதும் குறிப்பிடவே இல்லை.

2021 ஜனவரியில் வெளியான கலைஞர் செய்தியில், ” திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் அனைத்து தொகுதிகளிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மையம் அமைக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி முடித்த 197 மகளிருக்கு தையல் இயந்திரம் மற்றும் டேலி பயிற்சி முடித்த மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியதாகவும் ” கூறப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டிலேயே அனிதா பெயரில் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை அனைத்து தொகுதிகளிலும் தொடங்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்பட்டது.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் முகநூல் பக்கத்தில், சென்னை கொளத்தூரில் செயல்பட்டு வரும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் மாணவர்களுக்கு டேலி, ஜிஎஸ்டி மற்றும் பேங்கிங் குறித்த பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டு வருவதாகவும், வேலை வாய்ப்பு திறன் பயிற்சி அளிப்பதாகக் ” கூறப்பட்டுள்ளது. அங்கு நீட் பயிற்சி அளிப்பதாக எந்த தகவலும் இல்லை.

முடிவு :

நம் தேடலில், மு.க.ஸ்டாலின் அனிதா பெயரில் நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும் என கூறவில்லை. ஸ்டாலினின் பரப்புரையை வெளியிட்ட நியூஸ் 7 தமிழ் சேனலில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்பதை குறிப்பிடுவதற்கு பதிலாக  அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என ஸ்டாலின் கூறியதாக தவறான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்தே சீமானும் பேசி இருக்கிறார்.

ஆனால், மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட அனிதா அச்சீவர்ஸ் அகாடமி ஆனது டேலி, பேங்கிங், தையல் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பிற்கான கூடுதல் திறன் பயிற்சிகளை அளிக்கும் மையம் மட்டுமே. அதையே தமிழகம் முழுவதும் அமைப்பதாக அறிவித்து உள்ளனர். அதை நீட் தேர்விற்கான பயிற்சி மையம் என தவறாக புரிந்து கொண்டு பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

MK-Stalins-speech-that-Anita-Achievers-Academy-will

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்- மு.க.ஸ்டாலின்

dmk-chief-mk-stalin-said-dmk-will-set-up-anitha-achievers-academy-in-234-constituencies

அனிதா பெயரில் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் : அனைத்து தொகுதிகளிலும் தொடங்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Anitha-Achievers-Academy

முதல்வர் பழனிசாமி கொத்தடிமையாக மோடிக்கு அடங்கி ஆட்சி நடத்துகிறார்: ஸ்டாலின் பேச்சு

Back to top button
loader