This article is from Jun 30, 2019

89 தரமற்ற கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதா ?

பரவிய செய்தி

அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட தரமற்ற கல்லூரிகளின் பட்டியல்…தரமற்ற கல்லூரிகள் என்று வகைப்படுத்தப்பட்ட 89 இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் 12 கல்லூரிகள் காஞ்சிபுரத்திலும், 7 கல்லூரிகள் கோவையிலும் உள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த கல்லூரிகளை கவுன்சிலிங்கின் போது தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தரமற்ற கல்லூரிகள் மீது 25 முதல் 100 சதவீத மாணவர் சேர்க்கையை நிறுத்தும் அளவிலான நடவடிக்கைகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு

சுருக்கம்

சமூக வலைதளங்களில் பரவும் 89 கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடவில்லை. போதிய உள்கட்டமைப்பு இல்லை என நடவடிக்கை எடுக்கப்பட்ட கல்லூரிகள் பற்றி தொடர்ந்து படிக்கவும

விளக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா பொறியியல் கல்லூரிகளில் நடத்திய ஆய்வுகளுக்கு பிறகு 92 கல்லூரிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, ஆசிரியர் பற்றாக்குறை எனக் கூறி சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களின் சீட்களை குறைந்ததாக கூறப்பட்டன. ஆனால், நடவடிக்கை எடுக்கப்பட்ட கல்லூரிகளின் விவரங்கள் இணையத்தில் வெளியிடாமல் இருந்தது.

அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்து மாணவர்களின் சீட்களை குறைத்து இருப்பதாக கூறப்படும் பொறியியல் கல்லூரிகளின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது சர்ச்சையாகியது. மேலும், பொறியியல் மாணவர்கள் கலந்து கொள்ள இருக்கும் பொறியியல் கவுன்சிலிங்-ல் இடம்பெறும் 539 கல்லூரிகளில் 92 கல்லூரிகளின் பெயர்களை தனியாக எடுத்து இருந்தால் மாணவர்கள் கல்லூரிகள் பற்றி எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.

” கவுன்சிலிங்கில் மாணவர்களுக்கு எவ்வித குழப்பமும் ஏற்படாது. ஏனெனில், ஆய்வு நடத்தியபிறகு 92 கல்லூரிகளில் மாணவர்களின் சீட்கள் குறைக்கப்பட்ட பட்டியலைத்தான் கவுன்சிலிங்கிலில் காண்பிக்கப்படும் ” என தமிழக தொழிற்நுட்ப கல்வி இயக்குநரக அதிகாரி தெரிவித்து இருந்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளமான https://www.annauniv.edu-ல் சென்று சில கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களின் சீட்கள் குறித்து ஆராய்கையில், 1.punitive action against the institute taken by University என கீழே குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில், முந்தைய ஆண்டை விட சில சீட்கள் குறைக்கப்பட்டு உள்ளன.

எனினும், ஒரு கல்லூரிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், 2019-20-க்கு அனுமதிக்கப்பட்ட சீட்கள் 30-ல் இருந்து 45 ஆக உயர்ந்து உள்ளது. இது இணையதளத்தின் தவறு என்கிறார்கள். இணையதளத்தின் தவறாக இருந்தால் ஏன் சரி செய்யவில்லை ?

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் 89 பொறியியல் கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுத்து உள்ளதாக அதன் பட்டியல் ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவியது. சமூக வலைதளங்களில் 89 பொறியியல் கல்லூரிகள் என குறிப்பிட்டு இருந்தனர், ஆனால் ஊடகச் செய்திகளில் 92 கல்லூரிகளின் மீது அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்து உள்ளதாக செய்தியை வெளியிட்டு இருந்தனர்.

ஆனால், அதற்கு அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்து உள்ளது. ஜூன் 28-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள் தலைவர்களுக்கு ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்தி குறித்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதில், பல்கலைக்கழக்தின் மூலம் அப்படியான எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை என கூறப்பட்டுள்ளது.

” சமூக வலைதளங்களில் பரவும் 89 கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடவில்லை “.

அண்ணா பல்கலைக்கழகத்தின் செயல் கவுன்சிலிங் செல்லும் மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தரமான கல்லூரிகளின் விவரங்களை அறிந்தால் தானே மாணவர்களும் தகுதியான கல்லூரிகளை தேர்வு செய்ய முடியும்.

ஏற்கனவே, பொறியியல் படித்தால் வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. ஆகையால், பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு. இப்படி இருக்க அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களை குழப்பும் விதத்தில் செயல்பட்டால் அது பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்கச் செய்யும்.

 

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader