அண்ணாவை கை வண்டியில் இழுக்கும் ஈவிகே சம்பத்.. முழு பின்னணி தெரியாமல் பதிவிட்ட தினமலர் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கில் சுமந்து செல்வதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து இருந்தது பல்வேறு கண்டனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், ” வண்டியில் அமர்ந்திருப்பவர் அண்ணாதுரை என்னும் மனிதர், இழுப்பது மாடோ, குதிரையோ அல்ல மனிதர் ஈ.வெ.கி.சம்பத் ” எனப் இப்புகைபடத்தை மீம் ஆக பதிவிட்டு இருக்கிறார்கள்.
இதை தினமலர் நாளிதழ், ” திமுகவை தோற்றுவித்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை கைவண்டியில் வைத்து இன்னொரு திராவிட தலைவரான ஈவிகே சம்பத் இழுத்து செல்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு மீம்களை பரப்பி வருகின்றனர் ” என வெளியிட்டு இருக்கிறது. தற்போது தினமலரின் செய்தியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவை கை வண்டியில் அமர வைத்து ஈவிகே சம்பத் அவர்கள் இழுப்பது போன்ற புகைப்படத்தை அவரது மகனும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் 2011-ல் பதிவிட்டு இருக்கிறார்.
அண்ணாதுரை அவர்கள் வண்டியில் அமர்ந்து இருக்க ஈவிகே சம்பத் வண்டியை இழுப்பது போன்ற புகைப்படத்தை மட்டும் வைத்து முழு பின்னணி தெரியாமல் தினமலர் உள்ளிட்டோர் பகிர்ந்து வருகிறார்கள்.
மற்றொரு படத்தில், ஈவிகே சம்பத் வண்டியில் அமர்ந்து இருக்க அண்ணா இழுப்பது போன்று இடம்பெற்று இருக்கிறது. ஒருவர் அமர, இன்னொரு இழுக்க என இருவரும் அவர்களுக்குள் இப்படி செய்துள்ளனர் என பார்க்க முடிகிறது.
அன்றைய காலக்கட்டத்தில், கை வண்டி இழுப்பது நடைமுறையில் இருந்து வந்தது. 1973-ல் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது கை ரிக்சா வண்டி தடை செய்யப்பட்டது. அதற்கு பதிலாக, சைக்கிள் ரிக்சா அளிக்கப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், அண்ணாதுரையை வண்டியில் வைத்து இழுக்கும் ஈவிகே சம்பத் என அவர்களுக்குள் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்து தருமபுரம் ஆதீனம் விவகாரத்துடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஈவிகே சம்பத் அமர்ந்து இருக்க அண்ணா கை வண்டியை இழுப்பது போன்ற படமும் உள்ளது என்பதை அறிய முடிகிறது.