கோவா சுதந்திர போராட்ட வீரரின் விடுதலைக்கு உதவிய பேரறிஞர் அண்ணா ?

பரவிய செய்தி
போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார். உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார் அண்ணா.
மதிப்பீடு
விளக்கம்
செப்டம்பர் 16-ம் தேதி பெரியார் 2.0 என்ற முகநூல் பக்கத்தில் பேரறிஞர் அண்ணாவின் முயற்சியால் கோவாவின் சுதந்திரப் போராட்ட வீரர் மோகன் ரானடே போர்ச்சுகல் நாட்டின் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் என்ற தகவலை வெளியிட்டு இருந்தனர். பெரும்பாலும் பலரும் அறிந்திடாத அண்ணாவின் முயற்சி குறித்து விரிவாக தெரிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.
1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்து இருந்தாலும் கோவா பகுதியானது போர்ச்சுகல் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. கோவா பகுதியை சுதந்திரமடையச் செய்ய போராடியவர்களுக்குள் ஒருவர் மோகன் ரானடே. 1929-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் சங்லி என்ற இடத்தில் பிறந்த மோகன் ரானடே வலது சாரி சித்தாந்தம் கொண்ட விநாயக் தாமோதர் சாவர்க்கர் கொள்கையின் மூலம் ஈர்க்கப்பட்டவர். போர்ச்சுகீசிய ஆதிக்கத்தின் கீழ் இருந்து கோவாவை மீட்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட துவங்கினார் மோகன் ரானடே.
1950-ல் அசாத் கோமண்டக் தள் என்ற அமைப்பை உருவாக்கிய மோகன் ரானடே போர்ச்சுகீசிய ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திய போராட்டத்தை துவங்கினார். 1955-ம் ஆண்டில் Beti என்ற இடத்தில் இருந்த காவல் நிலையத்தை ஆயுதம் ஏந்தி தாக்கிய பொழுது காயமடைந்தார். அதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, மோகன் ரானடேவிற்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு போர்ச்சுகலின் லிஸ்பன் பகுதியில் உள்ள Fort of Caxias எனும் சிறையில் அடைக்கப்பட்டார். மோகன் ரானடே 6 ஆண்டுகள் தனி சிறைவாசத்தை அனுபவித்தார். பின்னர் 6 ஆண்டுகளுக்கு பிறகு 1961-ல் கோவா பகுதி போர்ச்சுகீசிய கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரம் பெற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவா சுதந்திரம் அடைந்த பிறகும் போர்ச்சுகீசிய அரசு மோகன் ரானடேவை விடுதலை செய்யவில்லை. அதன் பிறகு எதிர்க் கட்சியில் இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் மோகன் ரானடே விடுதலை குறித்து குரல் எழுப்பினார். மோகன் ரானடே விடுதலைக்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் பலன் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் முதல்வராக இருந்த அண்ணாதுரைக்கு வாடிகன் நகரத்தில் போப் Paul VI உடன் சந்திப்பு நிகழ்ந்தது. அத்தகைய சந்திப்பில், போர்ச்சுகல் சிறையில் இருக்கும் கோவா சுந்திரப் போராட்ட வீரர் மோகன் ரானடேவை விடுதலை செய்ய போர்ச்சுகல் அரசிற்கு அழுத்தம் தருமாறு அண்ணா போப்பிடம் கோரிக்கை விடுத்தார்.
அண்ணாவின் கோரிக்கையின் பலனாக 14 ஆண்டுகளுக்கு பிறகு போர்ச்சுகல் சிறையில் இருந்து ரானடே 1969-ம் ஆண்டு ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டார். தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் முயற்சியால் மோகன் ரானடே விடுதலை அடைந்ததாகவே செய்திகளும் குறிப்பிட்டு உள்ளனர். கொள்கை ரீதியில் எதிராக இருக்கும் மோகன் ரானடேவின் விடுதலைக்கு அண்ணா முயற்சித்தது ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியா திரும்பிய ரானடே அண்ணாவை காண சென்னை வந்தாக முதன்மை செய்தி ஊடகங்களில் தகவல்கள் இல்லை. மேலும், பிற இணையதள தகவல்களை தேடிய பொழுதும் அவ்வாறான குறிப்புகள் நமக்கு கிடைக்கவில்லை.
ஆனால், Prabook என்ற இணையதளத்தில் ” மோகன் ரானடே வாழ்க்கை குறிப்பு ” பதிவில் சிறை விடுதலைக்கு பிறகு அண்ணாதுரையை காண சென்னைக்கு வந்த பொழுது, சில நாட்களுக்கு முன்பு அவர் இறந்தது குறித்து வருத்தமடைந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளனர். எனினும், இதனை உறுதியாக கூறமுடியவில்லை.
இந்தியா திரும்பிய மோகன் ரானடே புனே நகரில் வாழ்ந்து வந்தார். தன்னார்வ அமைப்பை உருவாக்கி சமூக செயல்பாடுகள் மற்றும் கல்வி உதவிகளை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 2019-ல் 90 வயதான மோகன் ரானடே உயிரிழந்தார். மோகன் ரானடேவை கெளரவிக்க 2001-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
முடிவு :
நம்முடைய தேடலில், கோவா சுந்திரப் போராட்ட வீரர் மோகன் ரானடேவின் விடுதலை பேரறிஞர் அண்ணா மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அனைத்து செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது. வரலாறு அவ்வாறே கூறுகிறது.
14 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு அண்ணாவை காண சென்னைக்கு மோகன் ரானடே வந்ததாக கூறும் தகவலானது prabook என்ற தளத்தை தவிர வேறெங்கும் நமக்கு கிடைக்கவில்லை. ஆகையால், அதனை உறுதியாக கூற முடியவில்லை.
அதேபோன்று அண்ணாவிற்கு, போப் உடன் நடைபெற்ற சந்திப்பில் ஏற்பட்ட நீண்ட உரையாடல் குறித்த தகவல் தொடர்பான செய்திகள் கிடைக்கவில்லை. பெரியார் 2.0 பதிவில் இணைக்கப்பட்ட thebetterindia இணையதள செய்தியிலும் பதிவில் கூறுவது போன்று இடம்பெறவில்லை. மோகன் ரானடே விடுதலைக்கு அண்ணா முயற்சி செய்தார் என்றே வெளியாகி இருக்கிறது.
ஆதாரம்
https://web.archive.org/save/https://prabook.com/web/mohan.ranade/2084617
Mohan Ranade, who fought for Goa’s liberation, dies at 90
The Forgotten Story of the Freedom Fighter Who Spent 14 Years in a Portuguese Prison
https://web.archive.org/save/https://m.facebook.com/story.php?
Goa freedom fighter Mohan Ranade who spent 14 years in Portuguese jail dies in Pune