மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்ததற்கு எதிராக அண்ணாமலை கூறிய கருத்தா ?

பரவிய செய்தி
வாராக்கடனுக்குத் தீர்வு சீல் வைப்பதுதான் என்றால் குபேரனிடம் கடன்வாங்கிய வெங்கடேசப்பெருமாளின் ஆலயத்துக்கு சீல் வைக்க முடியுமா ? மதுவந்தியை அவமானப்படுத்துவதற்காகவே வீடியோ எடுத்து வெளியிட்டுருக்கிறார்கள் – அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவர்
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினரான மதுவந்திக்கு சொந்தமான சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆசியானா அப்பார்ட்மெண்ட் வீட்டிற்கு வந்த ஃபைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மதுவந்தி அளிக்க வேண்டிய 1.21 கோடி கடனுக்காக வீட்டிற்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஃபைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் மதுவந்தி கெஞ்சி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டது.
ஆனால், ” தனது வீட்டை அதிகாரிகள் சீல் வைக்கவில்லை என்றும், இது தவறான தகவல். இதுகுறித்து பேச விரும்பவில்லை ” என மதுவந்தி விசித்திரமாக பேசி இருக்கிறார் என செய்திகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், மதுவந்தியை அவமானப்படுத்துவதற்காகவே வீடியோ எடுத்து வெளியிட்டுருக்கிறார்கள் என குபேரன் மற்றும் பெருமாள் கடனை ஒப்பிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்ததாக பிபிசி செய்தி கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
மதுவந்தி வீட்டிற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த அக்டோபர் 14-ம் தேதி வெளியான செய்தி குறித்து பிபிசி தமிழ் முகநூல் பக்கத்தை ஆராய்கையில், ” மாநிலத் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினருக்கு காட்டிய எஜமான விசுவாசம் தமிழக காவல் துறையையே மிஞ்சிவிட்டது. திமுகவின் இந்த தற்காலிக வெற்றி, ஜனநாயகத்தின் தற்காலிக தோல்வி ” என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாகவே செய்தி கார்டு வெளியாகி இருக்கிறது.
மதுவந்தி வீட்டிற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அந்த சம்பவத்திற்கு எதிராக அண்ணாமலை பேசியதாக எடிட் செய்யப்பட்ட செய்தியை உருவாக்கி பரப்பி வருகிறார்கள். வைரலாகும் போலி செய்தி கார்டு குறித்து அண்ணாமலையும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், வாராக்கடனுக்குத் தீர்வு சீல் வைப்பதுதான் என்றால் குபேரனிடம் கடன்வாங்கிய வெங்கடேசப்பெருமாளின் ஆலயத்துக்கு சீல் வைக்க முடியுமா ? மதுவந்தியை அவமானப்படுத்துவதற்காகவே வீடியோ எடுத்து வெளியிட்டுருக்கிறார்கள் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக வைரலாகும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.