அசைவம் சாப்பிடுபவர்களை அயோக்கியர்கள் என அண்ணாமலை பேசியதாகப் பரவும் பொய் செய்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை அசைவ உணவு உண்பவர்களை அயோக்கியர்கள் எனக் கூறியதாகத் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஏம்பா இந்த நாயோட வாயை யாராவது
தைச்சு விடுங்கப்பா தாங்க முடியல
எதையாவது உளறிட்டே இருக்கான் @annamalai_k @BJP4TamilNadu pic.twitter.com/tjpVpyI4hg— ஆதிரன் ❤️ (@Aathiraj8586) March 24, 2023
அதில், “சைவ உணவு உண்பவர்கள் அன்பானவர்கள், நல் ஒழுக்கம் உடையவர்கள். அசைவம் சாப்பிடுபவர்கள் அனைவரும் அயோக்கியர்கள், காட்டுமிராண்டிகள். நான் காட்டுமிராண்டி அல்ல” என அண்ணாமலை கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன்டா முட்டாள் @annamalai_k அசைவம் சாப்பிடுறவங்க எல்லாம் அயோக்கியர்கள்னு எந்த மடையன்டா சொன்னது😡😡 pic.twitter.com/PGA1oKbt81
— தேனிகாரன் 𓁆 🖤❤️𓀥 (@Karthikbalan84) March 24, 2023
உண்மை என்ன ?
பரப்பப்படும் நியூஸ் கார்டில் தந்தி டிவி வழக்கமாகப் பயன்படுத்தும் எழுத்துருக்கள் (Font) இல்லை. அந்த கார்டில் ‘24.03.2023’ என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அத்தேதியில் தந்தி டிவி ஏதேனும் நியூஸ் கார்டு வெளியிட்டதா எனத் தேடினோம். அப்படி எந்த கார்டும் வெளியிடப்படவில்லை.
ஆனால், அந்த தேதியில் அண்ணாமலை பேசியது தொடர்பாக வேறொரு நியூஸ் கார்டினை பதிவிடப்பட்டிருந்தது. “சட்டத்தின் அடிப்படையில் ராகுல் மீது நடவடிக்கை” எனத் தலைப்பிடப்பட்டிருந்த அந்த கார்டில், ‘சாதாரண மனிதர்களுக்கு ஒரு சட்டம், அரசர்களுக்கு ஒரு சட்டம் என்றில்லை. அதன் அடிப்படையிலேயே நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தூத்துக்குடியில் அண்ணாமலை பேச்சு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#BREAKING | "சாதாரண மனிதர்களுக்கு ஒரு சட்டம், அரசர்களுக்கு ஒரு சட்டம் என்றில்லை"
"அதன் அடிப்படையிலேயே நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது"
தூத்துக்குடியில், ராகுல் காந்தியின் பதவி நீக்கம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணமலை பேச்சு#RahulGandhi #Annamalai #BJP pic.twitter.com/ctz7MHUoaJ
— Thanthi TV (@ThanthiTV) March 24, 2023
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்தும், குறிப்பிட்ட சமூக பிரிவு குறித்தும் அவதூறாகப் பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மார்ச் 23ம் தேதி தீர்ப்பும் அளிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ராகுல் காந்தி 30 நாட்கள் அவகாசமும், பிணையும் வழங்கப்பட்டது. இந்நிலையில், கேரளா வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வதாக நாடாளுமன்றச் செயலகமும் அறிவித்தது. இது பற்றி அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதையே தந்தி டிவி நியூஸ் கார்டாக வெளியிட்டுள்ளது. அதிலுள்ள தகவலினை மட்டும் தவறாக எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
The
அண்ணாமலை தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த வீடியோ ‘தந்தி டிவி’ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து மட்டுமே பேசியுள்ளார். சைவம், அசைவம் போன்ற உணவு முறைகளைப் பற்றி எந்த கருத்துக்களையும் பேசவில்லை.
மேலும் படிக்க : அசைவ உணவு சாப்பிடுபவர் ஒழுக்கம் இல்லாதவர் என ரஜினிகாந்த் பேசினாரா ?| Fact Chec
இதே போல் நடிகர் ரஜினி காந்த் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள் எனப் பேசியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. அதன் உண்மைத் தன்மை குறித்து ‘யூடர்ன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை அசைவ உணவு சாப்பிடுபவர்களை அயோக்கியர்கள் எனக் கூறியதாகப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு உண்மை அல்ல. அவர் அப்படி எந்த கருத்தையும் பேசவில்லை என்பதை அறிய முடிகிறது.