கட்சியில் இருந்து நீக்கம்: அண்ணாமலையை பற்றி காயத்ரி ரகுராம் கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !

பரவிய செய்தி

ஆகாசப் புளுகர் அண்ணாமலை… அனுபவத்தில் சொல்லுது போல…

இதற்கு என்னத்த சொல்ல 

மதிப்பீடு

விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராமன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதற்காக, கட்சியில் அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்குவதாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து காயத்திரி ரகுராமன் தான் உண்மையைப் பேசியதால் தான் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக  நியூஸ் 7 கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Archive twitter link

மேலும், உண்மையைப் பேசுபவர்களுக்கு அங்கு (பாஜக) இடமில்லை. அண்ணாமலை போன்ற ஆகாச புளுகர்களுக்குத்தான் அங்கே இடம் உண்டு என அவர் பேசியதாக அந்த நியூஸ் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், காயத்ரி ரகுராமன், தந்தி டிவி நியூஸ் கார்டில் “பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை” என்றும், புதியதலைமுறை நியூஸ் கார்டில், பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை” எனக் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த நியூஸ் கார்டுகளில் திமுக மற்றும் அதன் ஆதரவளார்கள் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ?

காயத்ரி ரகுராமன் அண்ணாமலையை ஆகாச புளுகர் எனக் கூறியதாக நியூஸ் 7 தமிழ் கார்டில் பரவும் செய்தி குறித்து அதன் பூர்வ சமூக வலைத்தளங்களில் தேடினோம். அப்படி எந்த நியூஸ் கார்டும் அவர்கள் பதிவிடவில்லை.

நியூஸ் 7 தமிழில் “சூர்யா சிவா மீது கைது நடவடிக்கை தேவை” என்ற தலைப்பில் மட்டுமே நியூஸ் கார்டு பதிவிட்டுள்ளதைக் காண முடிகிறது.

அதேபோல், தந்தி டிவி “உண்மையை பேசினேன், அதனால் நீக்கப்பட்டு உள்ளேன்”, “கட்சிக்காகக் கடுமையாக உழைத்துள்ளேன்; வெளிநாடுகளில் சிக்கியவர்களைச் சொந்த செலவில் மீட்டுள்ளேன்”, “ஒரு பெண்ணை தவறாகப் பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது”, “கட்சி பொறுப்பு இல்லையென்றாலும் நான் பாஜக தொண்டர் தான்” என நான்கு நியூஸ் கார்டுகளை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Twitter link

புதியதலைமுறையும் பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை” என காயத்ரி ரகுராமன் கூறியதாக எந்தவொரு நியூஸ் கார்டினையும் பதிவிடவில்லை. அந்த நியூஸ் கார்டின் கீழே ‘3.02pm’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், புதியதலைமுறை நியூஸ் கார்டில் 03.00 pm, 03.30 pm என அரை மணி நேர வித்தியாசத்தை மட்டுமே குறிப்பிட்டு நியூஸ் கார்டுகள் வெளியாகி இருக்கிறது.

இதிலிருந்து இவை அனைத்தும் எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டுகள் என்பதை அறிய முடிகிறது.

செய்தியாளர் சந்திப்பில் காயத்ரி ரகுராமன் பேசியது : 

பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராமனுக்கும், அக்கட்சியின் தொழிற் பிரிவு துணைத் தலைவர் செல்வ குமாருக்கும் இடையே டிவிட்டரில் கருத்து மோதல் நிகழ்ந்தது. 

மேலும், பாஜக சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்சி சரணை, அதன் OBC அணி மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா ஆபாசமாகப் பேசிய ஆடியோ குறித்த செய்தியை ரீ-டிவீட் செய்திருந்தார்.

அதில், திருச்சி சூர்யா சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், “இந்த ஹைனாக்களுக்கு (கழுதைப்புலி) அழகு பார்க்கக் கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து காயத்ரி ரகுராமன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால், கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார்.

அண்ணாமலையின் அந்த அறிவிப்பினை தொடர்ந்து காயத்ரி ரகுராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், தன்னை செல்வகுமார் சமூக வலைத்தளங்களில் செய்த தனிப்பட்ட தாக்குதல் குறித்த பிரச்சனைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். 

மேலும், தன்னிடம் எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் கட்சித் தலைமை  இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுவும் கட்சிக்குக் களங்கம் எனக் குறிப்பிட்டு இருப்பது மன வருத்தத்தையும், மன உளைச்சலையும் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அண்ணாமலை இரண்டு வருடமாக பாஜகவின் தலைவராக உள்ளார். ஆனால், இந்த விஷயத்தில் விசாரிக்காமல் முடிவு எடுத்திருப்பதால் அவரை தகுதியற்ற தலைவராகப் பார்க்கிறீர்களா? எனச் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு காயத்ரி ரகுராமன் “அது எல்லாம் எனக்குத் தெரியவில்லை. அங்கிருந்து என்ன அறிவிப்பு வந்தது, இவர் என்ன பின்பற்றியுள்ளார் என எனக்குத் தெரியாது. இன்னொருத்தரைப் பற்றி விமர்சிக்க நான் இங்கு வரவில்லை. எனக்கு என்ன நடந்ததோ அதனைக் குறிப்பிடவே வந்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, “I will not accept that I’m against BJP party. I will smack anyone who says that.” என காயத்ரி ரகுராம் செய்த டிவிட்டினை குறிப்பிட்டு, நீங்கள் கட்சிக்கு எதிராக இருக்கிறீர்கள் என அண்ணாமலைதான் கையெழுத்துப் போட்டுள்ளார். அப்படியெனில் மேற்கண்ட டிவிட்டில் அண்ணாமலையைக் குறிப்பிடுகிறீர்களா? எனச் செய்தியாளரால் கேள்வி எழுப்பப்பட்டது. “அப்படி யார் பேசினாலும் (கட்சிக்கு  காயத்ரி ரகுராமன் கலங்கள் விளைவித்ததாக) நான் எதிர்ப்பேன்” எனப் பதில் அளித்துள்ளார். 

பெண்களுக்கு பாஜகவில் பாதுகாப்பு இல்லையா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, நாங்கள் பாதுகாப்பாகத் தான் இருக்கிறோம். இந்த சம்பவத்திற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனப் பதில் கூறியுள்ளார்.

அண்ணாமலை சொன்ன பொய்கள் : 

மேலும் படிக்க : கோவை கார் வெடிப்பு வழக்குப் பதிவு பற்றி அண்ணாமலை சொன்ன பொய் !

மேலும் படிக்க : உளவுத்துறையின் உயர் பதவிகளில் 60% மேல் கிறிஸ்தவர்கள் உள்ளதாக அண்ணாமலை பரப்பும் அவதூறு

மேலும் படிக்க : அன்று 20,000 புத்தகங்கள், இன்று 2 லட்சம் வழக்குகள்.. பொய் பேசி சிக்கும் அண்ணாமலை.. முழுமையான ஆதாரங்கள் !

மேலும் படிக்க : இதுவரை இந்தியா காமன்வெல்த் பதக்கப் பட்டியல்களில் கடைசியில் இருந்ததாக பொய் சொன்ன அண்ணாமலை !

மேலும் படிக்க : மணிப்பூரில் 52 சதவீத வாக்குகள் பெற்ற பாஜக.. அண்ணாமலையின் அடுத்த பொய் !

முடிவு : 

நம் தேடலில், பாஜக மாநில தலைவரை காயத்ரி ரகுராமன் “ஆகாசப் புளுகர் அண்ணாமலை” என்றோ, “பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை” என்றோ கூறவில்லை. அவை எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டுகள் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader