அண்ணாமலை பணியில் இருந்த போது ஏழைகளுடன் இருப்பதாகப் பரப்பப்படும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி
அண்ணாமலை அவர்கள் பணியிலிருந்தபோது ஏழை பங்காளனாக எளிய மக்களோடு மனிதநேயத்துடன்!…
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பணியிலிருந்த போது “ஏழை பங்காளனாக எளிய மக்களோடு ” இருப்பதாகக் குறிப்பிட்டு காவலர் ஒருவர் சிறிய ஓட்டு வீட்டின் வாசலில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பாஜகவினரால் பரவலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
அண்ணாமலை கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வில் வெற்றிப் பெற்று இந்தியக் காவல் பணியைத் தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து 2013 -இல் கர்நாடகா காவல் துறை அதிகாரியாக உதவி காவல் கண்காணிப்பாளர் பணியை கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் தொடங்கினார். 2018 வரை கர்நாடகாவில் பணியாற்றிய அவர் பெங்களூர் தெற்கு காவல் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டு அவர் தன்னுடைய காவல்துறைப் பணியை ராஜினாமா செய்து தமழ்நாடு திரும்பினார். இந்நிலையில் 2021-இல் இருந்து அவர் தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2019-இல் காவல் பணியை ராஜினாமா செய்தது தொடர்பான செய்திகளை The Hindu மற்றும் The News Minute போன்ற தளங்களில் காணலாம்.
இந்நிலையில் தற்போது அண்ணாமலை குடிசையின் வாசலில் காவல்துறை சீருடையில் அமர்ந்திருப்பதாகப் பரவும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், பரப்பப்படும் புகைப்படம் கடந்த 2019-இல் இருந்தே சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளதை அறிய முடிந்தது.
ஏழ்மையான நிலையில் இருந்து காவல் அதிகாரி, லஞ்சம் வாங்காத போலீஸ் என இந்தி முதல் தமிழ் வரை வெவ்வேறு தலைப்புடன் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு உள்ளது.
மேலும் 2019-இல் இருந்து பரப்பப்படும் புகைப்படத்தில் உள்ள காவல்துறை அதிகாரியின் முக தோற்றத்தையும், அண்ணாமலை காவல் துணை ஆணையராக இருந்தபோது எடுத்த புகைப்படத்தையும் ஆய்வு செய்து பார்த்ததில், அது அண்ணாமலை அல்ல என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: KGF தங்கம், அண்ணாமலை பற்றிய நையாண்டிக் கார்டை உண்மை என நினைத்துக் கருத்துப் பகிரும் பாஜகவினர் !
மேலும் படிக்க: அண்ணாமலை வாழும் காமராஜரா ?.. GoBack AmitShah பதாகையை எடிட் செய்து பரப்பிய பாஜகவினர் !
இதற்கு முன்னர் அண்ணாமலை பரப்பிய மற்றும் அவர் தொடர்பாக தவறாகப் பரப்பப்பட்ட செய்திகளையும் நம் தளத்தில் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: அண்ணாமலை சிபிஐயில் புகார் அளிப்பேன் என்றதும் அமைச்சர் உதயநிதி ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்ததாகப் பரப்பப்படும் பொய்
முடிவு:
நம் தேடலில், அண்ணாமலை பணியில் இருந்த போது ஏழை, எளிய மக்களோடு இருப்பதாக சமூக வலைதளங்களில் பாஜகவினர் பரப்பும் புகைப்படம் தவறானது என்பதையும், இது வேறொரு காவல்துறை அதிகாரியின் புகைப்படம் என்பதையும் அறிய முடிகிறது.