‘அண்ணாமலை ஒரு மனநோயாளி’ என ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
அண்ணாமலை ஒரு மனநோயாளி. தூக்கத்தில் கனவு காண்பது இயல்பு. ஆனால் நடைப்பயணத்தில் நடக்கும்போதே கனவு காண்பது அரிய வகை நோய். அண்ணாமலை ஒரு மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் நேற்று திருச்சியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியே அவர்கள் (திமுக) ஆட்சிக்கு வந்த பிறகு 1967ல் ஒரு பலகையை வைத்திருக்கின்றார்கள். அதில் கடவுளை நம்புகிறவன் முட்டாள், ஏமாளி. அதனால் கடவுளை யாரும் நம்பாதீர்கள் என்றுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒரு கம்பத்தை வைத்து கொடியை ஏற்றி வைத்திருக்கிறார்கள்.
எனவே தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது முதல் வேலையாக அந்த கம்பத்தை அப்புறப்படுத்தி ஆழ்வார்கள், நாயன்மார்கள் சிலைகள் அங்கே வைக்கப்படும். தமிழ்ப் புலவர்களின் சிலைகள் வைக்கப்படும். தமிழ்ப் புலவர் திருவள்ளுவர் சிலை அங்கே வைக்கப்படும்” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் “அண்ணாமலை ஒரு மனநோயாளி ” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகக் கூறி தந்தி டிவியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அண்ணாமலை ஒரு லூசு! அண்ணாமலை ஒரு கிறுக்கன்! அண்ணாமலை ஒரு பைத்தியம்! சொல்லத் தைரியம் இருக்கா செய்யக்குமார்ஜீ! பயம்! அந்த பயம் இருக்கட்டும்! இல்லைன்னா மோடி ரெய்டு விடுவார்! எடப்பாடி உள்ளே போவார்! pic.twitter.com/XTd7k1xO0K
— Jasmine Fernando (@Jasmine01737661) November 8, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் தேடியதில், ஜெயகுமார் பெயரில் பரவி வரும் நியூஸ்கார்டு போலியானது என்பதை உறுதி செய்ய முடிந்தது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏதாவது பேசியிருக்கிறாரா எனத் தேடுகையில், சத்யம் தொலைக்காட்சி நேற்று (அக்டோபர் 08 அன்று) ஜெயக்குமார் அளித்த பேட்டி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் “அண்ணாமலை ஸ்ரீரங்கம் கோவில் முன்பு உள்ள பெரியார் சிலை அகற்றப்படும் என்று சொல்லியிருக்கிறாரே?” என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் “தலைவர்களின் புகழ்கள் போற்றப்படவேண்டும். ஆனால் தலைவர்களின் புகழை சிதைப்பவர்கள், அதாவது நீங்கள் சொல்வது போல அண்ணாமலை இவ்வாறு பேசினால், பின்னடைவையே சந்திப்பார்” என்று பேசியிருந்தார்.
ஆனால் இதில் பரவி வரும் நியூஸ் கார்டில் இருப்பது போல “அண்ணாமலை ஒரு மனநோயாளி, தூக்கத்தில் கனவு காண்பது இயல்பு. ஆனால் நடைப்பயணத்தில் நடக்கும்போதே கனவு காண்பது அரிய வகை நோய். அண்ணாமலை ஒரு மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது” என்றெல்லாம் அவர் எந்த இடத்திலும் பேசவில்லை.
இதுகுறித்து தந்திடிவின் ஃபேஸ்புக் பக்கத்திலும் ஆய்வு செய்ததில், அவர்கள் ஜெயக்குமார் பேட்டியளித்தது தொடர்பாக அக்டோபர் 08 அன்று எந்த நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை. மாறாக தந்திடிவியின் மாதிரி நியூஸ்கார்டை சிலர் எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறனர்.
மேலும் படிக்க: நீட் விலக்கு இயக்கத்தில் கையெழுத்திட மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகப் பரப்பப்படும் போலி நியூஸ் கார்டுகள் !
மேலும் படிக்க: அதிமுகவினர் மகளிர் உதவித்தொகையை வாங்க கூடாது என பழனிச்சாமி கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
முடிவு:
நம் தேடலில், அண்ணாமலை ஒரு மனநோயாளி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவி வரும் தந்திடிவியின் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.