பாஜகவில் இணையும் போதே அண்ணாமலை ரஃபேல் வாட்ச் கட்டியிருந்தாரா ?

பரவிய செய்தி
அண்ணாமலை. அது எப்படிடா 2020 கட்சியில் சேரும் போதும், பசுமை விகடனுக்கு பேட்டி கொடுக்க போதும் 2021 வாங்கிய வாட்ச் கட்டி கொண்டு இருக்கிறாய்.
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள வாட்ச் குறித்து, 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான் கட்டியுள்ள வாட்ச் ரஃபேல் விமான பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது எனக் கூறினார்.
மேலும், அந்த வாட்ச் வாங்கியதற்கான பில்லை ஏப்ரல் மாதம் வெளியிடுவதாகவும். அதனுடன் சேர்த்து திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவதாகக் கூறியிருந்தார். அதன்படி கடந்த 14ம் தேதி வாட்ச் ரசீதை வெளியிட்டார். அது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
வாட்ச் எப்ப வாங்குன
அண்ணாமலை-27-05- 2021 ங்க
நீ கட்சில சேர்ந்த நாளன்றும் (25-08-2020), பசுமை விகடனில் வந்த நாளன்றும் (25-07-2020) இந்த வாட்ச்ச கட்டிருக்கியேடா நீனு..?
– இப்ப என்ன உங்களுக்கு 2020 ல வாங்கின மாதிரி பில்லு வேணும் அவ்ளோதான?
அடேய்ய் 😁😁 pic.twitter.com/GklM32TtZr
— Prabhu Chandran (பாச.பிரபு) (@PasaPrabhu) April 16, 2023
வாட்ச் எப்ப வாங்குன @annamalai_k -27-05- 2021 ங்க
நீ கட்சில சேர்ந்த நாளன்றும் (25-08-2020), பசுமை விகடனில் வந்த நாளன்றும் (25-07-2020) இந்த வாட்ச்ச கட்டிருக்கியேடா நீனு..?
– இப்ப என்ன உங்களுக்கு 2020 ல வாங்கின மாதிரி பில்லு வேணும் அவ்ளோதான?
அடேய்ய் 😁😁 pic.twitter.com/FFoOn2Eh8t
— Er சந்திரசேகர் (@ErCHANDRASEKAR6) April 16, 2023
இந்நிலையில், 2021ம் ஆண்டு ரஃபேல் வாட்ச் வாங்கியதாக அண்ணாமலை கூறுகிறார். ஆனால், 2020ம் ஆண்டு ஜூலை மாதம் பசுமை விகடனுக்கு நேர்காணல் அளிக்கும் போதும், 2020 ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணையும் போதும் ரஃபேல் வாட்ச் தான் கட்டியுள்ளார் என இரண்டு புகைப்படங்களை திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
அண்ணாமலை வாட்ச் குறித்து திமுகவினர் பரப்பக்கூடிய புகைப்படங்களில் ஆட்டுக்குட்டியுடன் அண்ணாமலை இருக்கும் படம் பசுமை விகடன் நேர்காணல் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஜூலை மாதம் பசுமை விகடனுக்கு அண்ணாமலை அளித்த நேர்காணல் புகைப்படங்களை ஆய்வு செய்தோம்.
அதில், அண்ணாமலை கட்டியுள்ள வாட்ச் வட்ட வடிவில் உள்ளது. ஆனால், அண்ணாமலை தற்போது கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் சதுர வடிவத்தில் இருப்பதைக் காண முடிகிறது. அந்த வாட்சினை வெளியிட்ட பெல் அண்ட் ரோஸ் இணையதளத்தில் தேடினோம். அதிலும், ரஃபேல் வாட்சின் வெளிப்புறம் சதுர வடிவத்திலும், அதன் உள்பகுதி வட்ட வடிவத்திலும் உள்ளது.

அதே போல் அண்ணாமலை 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார். அப்போது பாஜக தலைவர் ஜேபி நட்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்துத் தேடுகையில், அதிலும் அவர் வட்ட வடிவிலான வாட்சினையே கட்டியுள்ளார். இவற்றிலிருந்து 2020ம் ஆண்டு முதலே அண்ணாமலை ரஃபேல் வாட்ச் கட்டியுள்ளார் என திமுகவினர் பரப்பும் தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது.
ரஃபேல் வாட்ச் பில்லிலுள்ள குளறுபடிகள் :
அண்ணாமலையிடம் உள்ள வாட்ச் குறித்து முதன் முதலில் 2022ம் ஆண்டு டிசம்பரில் செய்தியாளர் கேட்டபோது, தன்னிடமுள்ள வாட்ச் ரஃபேல் விமான பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. மொத்தம் 500 வாட்ச்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தன்னிடம் இருப்பது 149வது வாட்ச் எனக் கூறினார். ஆனால், தற்போது வெளியிட்ட பில்லில் 147வது வாட்ச் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, அந்த 147வது வாட்சினை கோயம்புத்தூரைச் சேர்ந்த சேரலாதன் என்பவர் 2021, மார்ச் 21ம் தேதி Zimson என்னும் நிறுவனத்திடம் 4,50,000 ரூபாய்க்கு வாங்கினார். அதனை 3 மாதங்கள் கழித்து 2021, மே 27ம் தேதி 3 லட்ச ரூபாய் பணமாகக் கொடுத்து வாங்கினேன் எனக் கூறியுள்ளார். மேலும், சேரலாதன் வாங்கிய பில்லினையும், அவரிடம் இருந்து அண்ணாமலை வாங்கிய பில்லினையும் வெளியிட்டுள்ளார்.
சேரலாதன் பில்லில் ‘BRO394CBL147’ என வாட்சின் வரிசை எண் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அண்ணாமலையின் பில்லில் ‘BRO394DAR147’ என வேறு எண் உள்ளது.
2022ம் ஆண்டு உங்களிடம் இருப்பது 149வது வாட்ச் எனக் கூறினீர்கள், ஆனால், பில்லில் 147 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று செய்தியாளர் ஒருவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு, “வாட்சினை கழட்டி அதில் அழுக்கு சேர்ந்துள்ளது. எழுத்து சிறியதாக உள்ளது. அதனால் மேடையில் தவறாகக் கூறியுள்ளேன். வாட்சில் 147 என்றுதான் உள்ளது” எனத் தனது வாட்சினை செய்தியாளரிடம் காண்பித்தார். ஆனால், வாட்ச் குறித்த சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடி இல்லை.
முடிவு :
நம் தேடலில், 2020ம் ஆண்டே அண்ணாமலை ரஃபேல் வாட்ச் கட்டியிருந்தார் என திமுகவினர் பரப்பும் புகைப்படத்தில் இருப்பது ரஃபேல் வாட்ச் இல்லை என்பதை அறிய முடிகிறது.