அண்ணாமலை வாழும் காமராஜரா ?.. GoBack AmitShah பதாகையை எடிட் செய்து பரப்பிய பாஜகவினர் !

பரவிய செய்தி
உண்மை! எங்கள் மூதையார்கள் செய்த தவறால் காமராஜரை இழந்தோம்!! மீண்டும் ஒரு தவறை செய்து வாழும் காமராஜர் அண்ணாமலையை இழக்க நான் தயாரில்லை!!! நீங்கள்???
மதிப்பீடு
விளக்கம்
“எங்கள் மூதாதையர்கள் செய்த தவறால் காமராஜரை இழந்தோம்!! மீண்டும் ஒரு தவறை செய்து வாழும் காமராஜர் அண்ணாமலையை இழக்க நான் தயாரில்லை!!! நீங்கள்???” என்ற வாசகங்கள் எழுதிய பாதாகையை குழந்தை கையில் ஏந்தி நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் அப்பதிவுகளில் “தமிழ் மண்ணின் மிக சிறந்த தலைவன். இளம் பிள்ளைகளின் எதிர்காலங்களை மிக சிறப்பாக வழிவகுத்து, தரப்போகின்ற, தமிழ் மண்ணின் மகன். அண்ணன் அண்ணாமலை.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்கையில், இந்தப் புகைப்படம் 2020 நவம்பர் 21 அன்று பரவலாக சமூக வலைதளங்களில் பரவி இருந்ததை பார்க்க முடிந்தது. மேலும் இதன் உண்மையான புகைப்படத்தில் #GoBack Amitshah என்று வாசகம் கொண்ட பதாகையை அந்த சிறுவன் வைத்திருப்பது போன்றும் உள்ளது.
எனவே இது தொடர்பாக தேடுகையில், 2020 நவம்பர் 21 அன்று உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ.67 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக தமிழ்நாடு வந்தார். அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கவே அவர் அப்போது சென்னை வந்ததாகக் கூறப்பட்டாலும், அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்துவதே அவரது பயணத்தின் பிரதான நோக்கம் என்று கூறப்பட்டது. இது தொடர்பான செய்திகளை தினத்தந்தி மற்றும் புதியதலைமுறை பக்கங்களில் காணலாம்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இவர் வருகையை முன்னிட்டு ட்விட்டர், முகநூல் போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் Go Back Amitshah என்று ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு அதன் கீழ் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சார்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நூருல் அமீன் என்பவர் ‘GoBack Amitshah’ என்ற பாதாகையை தன் குழந்தை கையில் ஏந்தி நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் 2020 நவம்பர் 21 அன்று பதிவிட்டுள்ளார். இதனை தற்போது பாஜக கட்சியினர் GoBack Amitshah என்ற வாசகத்திற்கு மாற்றாக அண்ணாமலை குறித்து மார்பிங் செய்து பரப்பி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நூருல் அமீன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய பையனின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என்று குறிப்பிட்டு கண்டன பதிவு ஒன்றை எழுதியுள்ளார். இதற்கு பொதுமக்கள் தரப்பிலும் பல்வேறு எதிர்ப்பு அலைகள் வந்து கொண்டிருக்கின்றன.
முடிவு:
நம் தேடலில், வாழும் காமராஜர் அண்ணாமலை என்ற வாசகங்கள் எழுதிய பாதாகையை சிறுவன் கையில் ஏந்தி நிற்பது போன்று சமூக வலைதளங்களில் பாஜகவினரால் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. அதன் உண்மையான புகைப்படத்தில் #GoBack Amitshah என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.