தமிழ்நாடு குறித்து கர்நாடகாவில் அண்ணாமலை சொன்ன பொய்கள் !

பரவிய செய்தி
திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2000 தருவதாகக் கூறினார்கள். கர்நாடகாவைவிடத் தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டிசல் விலை ரூ.10 அதிகம். ஜல் ஜீவன் திட்டத்தைக் கர்நாடக மாநிலம் 66 சதவீதம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு 50 சதவீதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளது. – அண்ணாமலை
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வருகின்ற 10ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கு பாஜக கட்சியின் தேர்தல் இணை பொறுப்பாளராகத் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அண்ணாமலை ‘தி நியூஸ் மினிட்’ என்னும் பத்திரிக்கைக்கு நேர்காணல் ஒன்றினை அளித்துள்ளார். அந்நேர்காணலில், திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2000 தருவதாகக் கூறியது. கர்நாடகாவிலிருந்து நீங்க தமிழ்நாட்டிற்குச் சென்றால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.10 அதிகமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
மேலும், டபுள் இஞ்சின் அரசு குறித்து நெறியாளர் கேட்ட கேள்விக்கு, ஜல் ஜீவன் திட்டம் 2019 தரவுகளின்படி கர்நாடக மாநிலம் 16 சதவீதமும், தமிழ்நாடு 19 சதவீதமும் நிறைவேற்றி இருந்தது. தற்போது கர்நாடகா 66 சதவீத பணிகளை முடித்துள்ளது. ஆனால், தமிழ்நாடு வெறும் 50 சதவீத பணிகளை மட்டுமே முடித்துள்ளது எனப் பேசியுள்ளார்.
உண்மை என்ன ?
ஜல் ஜீவன் திட்டம் :
2024ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இலக்குடன் ஜல் ஜீவன் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது. மாநில அரசின் பங்களிப்புடன் கிராமங்களின் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் குறித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து தேடினோம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு விருது அளித்துள்ளது. அன்றைய தின தரவுகளின்படி தமிழ்நாட்டில் 69.14 லட்சம் வீடுகளுக்குத் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டம் குறித்து ஒன்றிய அரசின் ‘ஜல் சக்தி’ இணையதளத்திலேயே அனைத்து தகவல்களும் பதியப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 1,25,52,655 குழாய் இணைப்புகளும், கர்நாடக மாநிலத்திற்கு 1,01,16,654 குழாய் இணைப்புகளும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவை விடத் தமிழ்நாட்டின் இலக்கு என்பது சுமார் 24 லட்சம் அதிகம்.
2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாத தரவின்படி குடிநீர் இணைப்பில் தமிழ்நாடு 17.33 சதவீதமும் (21,76,071 இணைப்புகள்), கர்நாடகா 24.23 சதவீதமும் (24,51,220 இணைப்புகள்) நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி (2023, மே) தமிழ்நாட்டில் 64.52 சதவீத இணைப்பு பணிகளும் (80,98,613 இணைப்புகள்), கர்நாடகாவில் 67.79 சதவீத இணைப்பு பணிகளும் (68,58,176 இணைப்புகள்) நிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 50 சதவீதம் பணிகள் மட்டுமே நிறைவேறியுள்ளது என அண்ணாமலை சொன்ன தகவல் உண்மையல்ல.
இரண்டு மாநிலங்களை சதவீத அளவில் ஒப்பிடுகையில் கர்நாடகாவை விடத் தமிழ்நாடு 3.27 சதவீதம் மட்டுமே குறைவு. ஆனால், எண்ணிக்கையில் ஒப்பிடுகையில், 12.40 லட்ச இணைப்புகளைத் தமிழ்நாடு கூடுதலாக வழங்கியுள்ளது என்பதை அறிய முடிகிறது.
ஒன்றியம் மற்றும் மாநிலத்தில் ஒரே கட்சி ஆட்சியிலிருந்தால் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் என அண்ணாமலை கூறுகிறார். ஆனால், பாஜக ஆட்சி செய்யாத தெலங்கானா (53,98,219 இணைப்புகள்), பஞ்சாப் (34,25,723 இணைப்புகள்) போன்ற மாநிலங்களில் 100 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை :
இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.10 வித்தியாசம் உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் விலை அதிகம் எனக் குறிப்பிடுகிறார்.
2023 மே 3ம் தேதி இரண்டு மாநிலங்களின் தலைநகரான சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்தோம். ஒரு லிட்டர் பெட்ரோல் முறையே ரூ.102.63 மற்றும் ரூ.101.94க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டினையும் ஒப்பிடுகையில் வெறும் 69 பைசா மட்டுமே சென்னையில் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அண்ணாமலை கூறுவது போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பார்க்கையில், 104.25 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இதிலும் 10 ரூபாய் வித்தியாசம் இல்லை.
அடுத்ததாக டீசல் விலையை ஒப்பிட்டுப் பார்க்கையில், சென்னையில் ரூ.94.24க்கும், பெங்களூரில் ரூ.87.89க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ரூ.6.35 கூடுதலான விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உரிமைத் தொகை :
“தங்களது கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் அனைத்து மகளிருக்கும் ரூ.2000 அளிப்பதாக திமுக கூறியது. ஆனால் வெற்றி பெற்ற பிறகு தகுதியான பெண்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை என மாற்றிப் பேசுகிறது” என அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை சொல்லுவது போல் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை அளிக்கப்படும் என்ற குறிப்பிட்டிருந்தது. ஆனால், ரூ.2000 என எந்த ஒரு இடத்திலும் அவர்கள் குறிப்பிடவில்லை. அவர்கள் ரூ.1000 அளிக்கப்படும் என்றே கூறியிருந்தனர்.
இத்திட்டம் வருகிற செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்கப்படும் எனக் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் அறிவித்தார். இதற்காக ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவற்றிலிருந்து அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாடு குறித்து தவறான தகவல்களை அண்ணாமலை கர்நாடகா தேர்தல் களத்தில் பேசியிருப்பதை அறிய முடிகிறது.