தமிழ்நாட்டில் 57% வாக்காளர்கள் 36 வயதுக்கு கீழே இருக்கிறார்கள் என அண்ணாமலை சொன்ன தவறான தகவல்!

பரவிய செய்தி
உங்களுடைய தகவலுக்காக சொல்கிறேன். 57% தமிழக வாக்காளர்கள் 36 வயதிற்கு கீழே இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் அரசியல் கட்சிகள் இணைத்து பார்க்க வேண்டும். இவர்களுடைய மொழி வேறு, இவர்கள் பேசுவது வேறு, அவர்களெல்லாம் இயற்கையாகவே கிளர்ச்சியாளர்கள், அவர்களெல்லாம் இயற்கையாகவே முரட்டுத்தன்மைக் கொண்டவர்கள். அவர்களெல்லாம் சத்தியமாக டிவியே பார்ப்பது கிடையாது. அவர்களெல்லாம் இஸ்டாகிராமில் வாழ்கிறார்கள்.
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களிடம் “உங்களுடைய தகவலுக்காக சொல்கிறேன். 57% தமிழக வாக்காளர்கள் 36 வயதிற்கு கீழே இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் அரசியல் கட்சிகள் இணைத்து பார்க்க வேண்டும். இவர்களுடைய மொழி வேறு, இவர்கள் பேசுவது வேறு, அவர்களெல்லாம் இயற்கையாகவே கிளர்ச்சியாளர்கள், அவர்களெல்லாம் இயற்கையாகவே முரட்டுத்தன்மைக் கொண்டவர்கள். அவர்களெல்லாம் சத்தியமாக டிவியே பார்ப்பது கிடையாது. அவர்களெல்லாம் இஸ்டாகிராமில் வாழ்கிறார்கள்.
டிவியில் நீங்கள் இவ்வளவு காட்டு கத்து கத்தி, பார்ப்பது வெறும் 4% பேர். உங்களுடைய விவாத நிகழ்ச்சிகளை பார்ப்பது வெறும் 2.5% பேர். ஆனால் தனியாக இருக்குற 50% பேருக்கு டிவி கிடையாது, விவாதநிகழ்ச்சி கிடையாது. நீங்க போடுற நிகழ்ச்சிகளை பார்ப்பது கிடையாது. இன்ஸ்டாகிராமில், சமூக ஊடகங்களில் அந்த 55% பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பல்ஸை (pulse) நீங்கள் கருத்துகணிப்பு வைத்தால் அது டிவியில் எல்லாம் தெரியாது. அது ஒரு தனி உலகம். அது ஒரு தனி குரூப். அந்த உலகத்துக்குள் இங்கு உள்நுழைவது தான் அரசியல். இதை தமிழகத்தில் உள்ள நிறைய அரசியல் கட்சிகள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.” என்று பேசியிருந்ததைக் காண முடிந்தது.
உண்மை என்ன?
அண்ணாமலை கூறிய தகவல்கள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில் அவை தவறானவை என்பதை அறிய முடிந்தது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தரப்பில் கடந்த 2021 ஜனவரி 20 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 2021-இல் 5,09,307 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே 2021-இல் தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை – 6,26,74,446. இதில் ஆண்கள் 3,08,38,473 ; பெண்கள் 3,18,28,727 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் – 7,246 பேர் உள்ளனர்.
மேலும், வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்து இந்து தமிழ் திசை 2021ல் வெளியிட்டிருந்த கட்டுரையில், தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74,446 ஆக உயர்ந்துள்ளது. ஆண்களைவிட 9 லட்சத்து 90 ஆயிரத்து 254 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்று குறிப்பிட்டு வயது வாரியான வாக்காளர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டிருந்தனர்.
அதில் 18 முதல் 39 வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை, 2,75,53,063-ஆக இருந்ததைக் காண முடிந்தது. இதன்படி 2021-இல் 39 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் சதவீதம் 43.96 சதவீதங்களுடன் இருக்கின்றனர்.
மேலும் 2023 ஜூன் 13 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள கட்டுரையின் படி, “ தமிழ்நாடு மாநிலத்தில் 6.10 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்ததையடுத்து, வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கப்படும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மே 31ம் தேதி வாக்காளர் பட்டியலை ஒப்பிடும் போது, 6,12,36,696 வாக்காளர்களில் இருந்து 2 லட்சம் பேர் குறைந்துள்ளனர். ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் 6,20,41,179 பேர் இருந்தனர்.வாக்காளர் பட்டியல்கள் https://elections.tn.gov.in இணையதளத்தில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய தரவுகளின் படி கடந்த 2021-இல் 6 கோடியே 26 லட்சத்து 74,446 ஆக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை, தற்போது 6.10 கோடியாக சரிந்துள்ளதையும் காண முடிந்தது. இதன் மூலம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளதால், 36 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 2021-இல் உள்ள எண்ணிக்கையை (43.96%) விட, 2023-இல் குறைந்து தான் காணப்படும் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இந்த எண்ணிக்கை தற்போது 57%-ஆக உள்ளது என்று அண்ணாமலை கூறியிருப்பவை தவறான தகவலே.
மேலும் படிக்க: முதுநிலை மருத்துவ இடங்கள் குறித்து அண்ணாமலை சொன்ன பொய்கள் !
மேலும் படிக்க: முத்துராமலிங்கத் தேவர் அண்ணாவை மன்னிப்பு கேட்க வைத்ததாக அண்ணாமலை பேசிய பொய் !
முடிவு:
நம் தேடலில், தற்போது தமிழ்நாட்டில் “57% வாக்காளர்கள் 36 வயதிற்கு கீழே இருக்கிறார்கள்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ள தரவுகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.