அண்ணாமலை மேரி மாதாவை வணங்கிய படத்தில் காமராஜர் சிலையை எடிட் செய்து பரப்பும் பாஜகவினர் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக தலைவர் அண்ணாமலை காமராஜர் சிலையை வணங்குவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் அண்ணாமலையின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அண்ணாமலை மேரி மாதா சிலை முன்பாக வணங்கும் புகைப்படம் ஆகஸ்ட் 13ம் தேதி அண்ணாமலையின் ட்விட்டர் பக்கத்தில் பதிவாகி இருக்கிறது.
இன்று #EnMannEnMakkal பயணத்தின் போது, மிகவும் பிரசித்தி பெற்ற, பல நூற்றாண்டுகள்பழமையான, போர்ச்சுகீசியர் காலத்தில் கட்டப்பட்ட தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்திற்குச் சென்று வழிபட்டோம்.
ஒவ்வொரு ஆண்டும் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் பனிமய மாதா ஆலயத் திருவிழா, கடந்த… pic.twitter.com/t3DEbom31l
— K.Annamalai (@annamalai_k) August 13, 2023
அதில், ” இன்று என் மண் என் மக்கள் பயணத்தின் போது, மிகவும் பிரசித்தி பெற்ற, பல நூற்றாண்டுகள்பழமையான, போர்ச்சுகீசியர் காலத்தில் கட்டப்பட்ட தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்திற்குச் சென்று வழிபட்டோம். ஒவ்வொரு ஆண்டும் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் பனிமய மாதா ஆலயத் திருவிழா, கடந்த வாரம் விமரிசையாக நடைபெற்றது என்பதை அறிந்தும், ஆலயத்தின் தங்கத் தேரை தரிசித்தும் மகிழ்ச்சி அடைந்தோம். உலக மக்கள் அனைவரும் எப்போதும் அமைதியுடனும், சமாதானத்துடனும் மகிழ்ந்திருக்க பிரார்த்தித்துக் கொண்டோம் ” என இடம்பெற்று இருக்கிறது.
அடுத்ததாக, புகைப்படத்தில் உள்ள காமராஜர் சிலையை மட்டும் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2013ம் ஆண்டு commons.wikimedia.org எனும் இணையதளத்தில் அதே காமராஜர் சிலையின் புகைப்படம் பதிவாகி இருக்கிறது.
அதன் கீழே, காமராஜரின் இச்சிலையானது திருமங்கலத்தில் உள்ள பிகேஎன் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ளதாகவும், இப்புகைப்படம் 2011ல் எடுத்ததாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.
அண்ணாமலை நடைபயணத்தின் போது தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்திற்குச் சென்று வழிபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் காமராஜர் சிலையை வைத்து எடிட் செய்து உள்ளனர்.
மேலும் படிக்க : அண்ணாமலையின் யாத்திரையில் பெண்கள் மது அருந்துவதாகப் பரவும் ஆந்திரா வீடியோ !
மேலும் படிக்க : இராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டா திருடும் பாஜகவினர் எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட செய்தி !
முடிவு :
நம் தேடலில், காமராஜர் சிலைக்கு முன்பாக அண்ணாமலை வணங்குவதாக பாஜகவினரால் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. தூத்துக்குடியில் பனிமயமாதா சிலை முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் காமராஜர் சிலை படத்தை எடிட் செய்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.