அண்ணாமலையின் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
தவிர்க்கமுடியாத காரணங்களால் பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை ரத்து – தமிழக பாஜக
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பாத யாத்திரை எனக் கூறிவிட்டு பெரும்பாலும் வாகனத்தில் செல்கிறார் என்கிற விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையிலும் தனது யாத்திரையைத் தொடர்ந்த வண்ணம் உள்ளார்.
இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை ரத்து செய்யப்படுவதாகத் தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது என ‘நியூஸ் ஜெ’ பெயரிடப்பட்ட கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய நியூஸ் கார்டு குறித்து சமூக வலைத்தளங்களில் தேடியதில் அதே தகவல் கொண்ட பல பதிவுகள் நேற்றைய தினத்தில் இருந்து (ஆகஸ்ட்,10) பரவுவதை காண முடிந்தது. ஆனால், அவை நியூஸ் ஜெ பெயரில் இல்லை. மாறாக அப்பதிவுகளில் வெறும் தகவல் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
தவிர்க்கமுடியாத காரணங்களால் பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை ரத்து- தமிழக பாஜக
நீ தமிழ்நாட்டை 30 முறை சுத்திவந்தாலும் உன் மூஞ்சிக்கு ஒரு பயலும் ஓட்டு போட மாட்டான்கனு உளவுத்துறை ரிப்போர்ட் குடுத்துடுச்சு நீ போய் பஸ்ஸ செட்ல நிறுத்திட்டு ஆடு மேய்க்க போனு அமித்ஷா சொல்லிருப்பாரோ pic.twitter.com/ziEZVuTkcJ
— 🔥சில் வண்டு🔥 (@peran_periyar) August 10, 2023
மேலும் பரவக் கூடிய நியூஸ் கார்டில் எப்போது வெளியிடப்பட்டது எனத் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே நியூஸ் ஜெ-வின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். அப்படி எந்த கார்டும் அவர்கள் பக்கத்தில் இல்லை.
மேற்கொண்டு தேடியதில், பரவக் கூடிய நியூஸ் கார்டு வடிவத்திலேயே கடந்த 8ம் தேதி ஆவின் தயிர் விலை ஏற்றம் குறித்து வெளியிடப்பட்டிருந்த கார்டினை காண முடிந்தது. அதில், ‘ஆவினில் முன்னறிவிப்பு இன்றி தயிர் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி’ என்று உள்ளது. அந்த கார்டில் அண்ணாமலை குறித்த செய்தியைப் போலியாக எடிட் செய்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
யாத்திரை தொடர்பான புகைப்படங்களை அண்ணாமலை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இன்றைய தினமும் (ஆகஸ்ட், 11) சாத்தூரில் அவர் மக்களைச் சந்தித்த படங்களை பதிவு செய்துள்ளார். ஆனால், நேற்றைய தினத்தில் இருந்தே யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. இவற்றில் இருந்து இது தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது.
இன்றைய #EnMannEnMakkal பயணம், 2000 ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த, முற்கால பாண்டிய மன்னன் மாற வல்லபனின் காலத்தில் சாத்தனூர் என்றழைக்கப்பட்ட சாத்தூரில் சிறப்பாக நடந்ததில் மகிழ்ச்சி.
கர்ம வீரர் காமராஜரை மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் தமிழக முதல்வராகவும்… pic.twitter.com/rlc5xBMibe
— K.Annamalai (@annamalai_k) August 11, 2023
இதேபோல் யாத்திரையை ரத்து செய்யக் கோரி பாஜக டெல்லி தலைமை அண்ணாமலையிடம் அறிவுறுத்தியுள்ளது. இனி யாத்திரை நடைபெறாது என்ற தகவல்கள் பரவியது. ஆனால், மீண்டும் யாத்திரை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க : அண்ணாமலையின் பாத யாத்திரை வாகனத்தின் படுக்கை வசதி எனப் பரவும் தவறான புகைப்படம் !
இதற்கு முன்னர் அண்ணாமலையின் யாத்திரை தொடர்பாகப் பரப்பப்பட்ட போலிச் செய்திகள் குறித்த உண்மைகளையும் யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : அண்ணாமலையின் யாத்திரையில் பெண்கள் மது அருந்துவதாகப் பரவும் ஆந்திரா வீடியோ !
முடிவு :
நம் தேடலில், அண்ணாமலையின் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாகப் பரவும் நியூஸ் ஜெ-வின் கார்டு உண்மையானது அல்ல. அது போலியாக எடிட் செய்யப்பட்டது. பாஜக தரப்பிலும் அப்படி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. யாத்திரை தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது என்பதை அறிய முடிகிறது.