திருவாரூரில் அண்ணாமலைக்கு கூடிய கூட்டம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டதா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
திருவாரூரில் தேரோடும் தெற்கு ரத வீதிக்கு ” கலைஞர் கருணாநிதி ” எனப் பெயர் மாற்றுவதாக திருவாரூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேரோடும் வீதிக்கு கலைஞர் பெயரை மாற்றுவதற்கு பாஜக உள்பட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தெற்கு வீதிக்கு கலைஞர் பெயரை வைக்கும் முடிவை கைவிடக் கோரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசும் போது பெருவாரியான கூட்டம் திரண்டு இருப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பாஜகவினரால் அதிகம் பகிரப்பட்டது.
ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பின்னாடி கூட்டமில்லை, அது ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
தமிழ்நாட்டில் சாலைகள் இல்லாத கிராமங்கள் எவ்வளவோ இருக்கிறது. @CMOTamilnadu கவனம் கொடுத்து அந்த கிராமங்களுக்கு சாலை கொண்டு வந்து அதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவருடைய பெயரைச் வைக்கட்டும்
அரசியல் தலைவர்கள் அடையாளம் கொண்டுவந்து இறை மக்களுடைய நம்பிக்கையை புண்படுத்த வேண்டாம்! pic.twitter.com/sntp8MCDRH
— K.Annamalai (@annamalai_k) May 12, 2022
பாஜக தலைவர் அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில், ” திருவாரூர் தியாகராஜரின் திருத்தேர் பவனி உலகப் பிரசித்தி பெற்றது. தமிழக மக்களின் பாரம்பரியத்தின் மரபுச் சின்னமாக விளங்கும் இந்தத் தேர் உலாவும் சாலையை மரபுச் சின்னமான மாடவீதியில் பெயரை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரில் மாற்றுவது தமிழர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
தமிழ்நாட்டில் சாலைகள் இல்லாத கிராமங்கள் எவ்வளவோ இருக்கிறது. முதல்வர் கவனம் கொடுத்து அந்த கிராமங்களுக்கு சாலை கொண்டு வந்து அதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவருடைய பெயரைச் வைக்கட்டும் அரசியல் தலைவர்கள் அடையாளம் கொண்டுவந்து இறை மக்களுடைய நம்பிக்கையை புண்படுத்த வேண்டாம்! ” என ஆர்பாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.
அண்ணாமலையின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படங்களில் இருபக்கமும் கட்டிடங்கள் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இப்புகைப்படங்கள் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டதா என அறிய fotoforensics தளத்தில் பதிவேற்றி ஆராய்ந்த போது, எடிட் செய்யப்பட்டதாக ஏதும் காண்பிக்கவில்லை.
மேலும், திருவாரூரில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் எடுக்கப்பட்ட வேறு சில புகைப்படங்களை பாஜகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்ததையும் பார்க்க முடிந்து.
அதுமட்டுமின்றி, திருவாரூரில் பாஜக ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலைக்கு சால்வை மற்றும் மாலை அணிவிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவில் சாலையில் இருக்கும் கூட்டம் மேடையில் இருந்து காண்பிக்கப்பட்டு இருப்பதை பார்க்கலாம்.
முடிவு :
நம் தேடலில், திருவாரூரில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மக்கள் இருப்பது போல் ஃபோட்டோஷாப் செய்ததாக பரவும் தகவல் தவறானது. அது உண்மையான கூட்டமே என அறிய முடிகிறது.