‘சொந்த பந்தங்களிடம் தலை காட்ட முடியவில்லை’ என அண்ணாமலை மனைவி கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை நண்பர்கள் பணத்தில் அண்ணாமலை குடும்பம் நடத்திவரும் நிலையில் மனைவி அகிலா பேட்டி.
மதிப்பீடு
விளக்கம்
பாஜக தலைவர் அண்ணாமலை சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, தனக்கு மாதம் 7 முதல் 8 லட்ச ரூபாய் செலவாவதாகவும், அதனை நண்பர்களை வைத்துச் சமாளித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலையின் மனைவி அகிலா பேட்டி அளித்ததாகத் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றினை திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், “சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை நண்பர்கள் பணத்தில் அண்ணாமலை குடும்பம் நடத்திவரும் நிலையில் மனைவி அகிலா பேட்டி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டில் ‘30.06.2023’ என்ற தேதி உள்ளது. இதனைக் கொண்டு அந்த தேதியில் தந்தி டிவி அப்படி ஏதேனும் நியூஸ் கார்டினை வெளியிட்டுள்ளதா என அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடினோம். அப்படி எந்த செய்தியையும் அவர்கள் பதிவிடவில்லை.
அண்ணாமலையின் மனைவி அகிலா கூறியதாகப் பரவக் கூடிய தகவல் குறித்து வேறு ஏதேனும் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளதா என இணையத்தில் தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
இந்த செய்தி தந்தி தொலைக்காட்சி வாயிலாக பகிரப்படவில்லை#FakeNews | #ThanthiTV pic.twitter.com/GC6eOLEY15
— Thanthi TV (@ThanthiTV) June 30, 2023
மேற்கொண்டு இது பற்றித் தேடியதில், பரவக் கூடிய நியூஸ் கார்டுக்கு மறுப்பு தெரிவித்து தந்தி டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ‘இந்த செய்தி தந்தி தொலைக்காட்சி வாயிலாக பகிரப்படவில்லை’ எனக் கூறியுள்ளனர். இவற்றிலிருந்து அண்ணாமலை மனைவி அகிலா பேட்டி எனப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை மனைவி கூறியதாகப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு உண்மை அல்ல. அது போலியாக எடிட் செய்து பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.