அண்ணாமலையின் பஸ் யாத்திரையில் தொண்டர்கள் மது அருந்துவதாகப் பரவும் வேறு மாநில படங்கள் !

பரவிய செய்தி
பஸ் யாத்திரை போகும் போது சரக்கு இல்லனா எப்படி?Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
கடந்த ஜூலை 28 அன்று தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் தனது நடைப்பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் யாத்திரையில் கலந்து கொண்ட பாஜக தொண்டர்கள் மது அருந்துவதாகக் கூறி சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
மேலும் பரவி வரும் அந்த மூன்று புகைப்படங்களில், பாஜக கட்சியின் துண்டுகளை அணிந்துள்ள சிலர் நின்று கொண்டு மது அருந்துவதையும், மது போதையில் சிலர் கீழே விழுந்து கிடப்பதையும் பார்க்க முடிகிறது.
பஸ் யாத்திரை போகும் போது சரக்கு இல்லனா எப்படி? pic.twitter.com/oCm9nmnk2h
— Lavanya Saravanakumar (@SLavanay0238674) August 5, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த புகைப்படங்கள் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டவை அல்ல என்பதை அறிய முடிந்தது.
அதில், முதல் புகைப்படமானது கடந்த 2018ல் இருந்தே சமூக வலைதளங்களில் பரவி வருவதைக் காண முடிந்தது. சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரான புபேஷ் பகேல், 2018 மே 31 அன்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் “வாட்சாப்பில் இந்த புகைப்படம் கிடைத்தது, சத்தீஸ்கர் இன்னும் வளர்ச்சியடையவில்லை” என்பது போல இந்த புகைப்படம் குறித்து வருத்தமாக பதிவு செய்துள்ளதை காண முடிந்தது.
அதேபோன்று மற்ற இரண்டு புகைப்படங்கள் குறித்து தேடியதில், இவை கர்நாடகாவில் எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
கர்நாடக ராஷ்டிர சமிதி கட்சின் தலைவரான ரவி கிருஷ்ண ரெட்டி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்கள் குறித்து 2023 ஏப்ரல் 19 அன்று பதிவு செய்துள்ளார். அதில் “இந்திய தேர்தல் ஆணையம், கர்நாடகாவில் அமைதியான தேர்தலை உறுதி செய்ய எடுத்த இடைவிடாத முயற்சிகளுக்கு மிக்க நன்றி. சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை நடத்துவது உங்கள் கடமையும் அல்ல, உங்கள் அக்கறையும் அல்ல என்பது எங்களுக்கு தெரியும். எனவே, தயவு செய்து கவலைப்படாதீர்கள்.” என்று குறிப்பிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தை விமர்சித்து பதிவிட்டுள்ளதை காண முடிந்தது.
Election Commission of India (@ECISVEEP @SpokespersonECI @ceo_karnataka),
Thank you very much for your relentless efforts to ensure peaceful elections in Karnataka.
Conducting Free and Fair election is neither your duty nor your concern. We know that. So, please don’t bother. pic.twitter.com/bWZ3hegTwY
— Ravi Krishna Reddy (@ravikrishna_r) April 19, 2023
இதே போன்று பரவி வரும் மற்றொரு புகைப்படம், ಸತ್ಯಮೇವ ಜಯತೇ என்ற கர்நாடகாவைச் சேர்ந்த பயனரின் ட்விட்டர் பக்கத்தில் 2023 மே 08 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளதை காண முடிந்தது. அதில், “பாஜக கட்சி தான் குடிமகன்களின் நம்பிக்கை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ಕುಡುಕರಿಗೆ ಬಿಜೆಪಿಯೇ ಭರವಸೆ 🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/w4ZnsWwmR2
— ಸತ್ಯಮೇವ ಜಯತೇ🇮🇳 (@khalli_s) May 8, 2023
Prajabimba என்ற கன்னட ஊடக இணையதளத்திலும் பரவி வரும் இந்த புகைப்படங்கள் கடந்த ஏப்ரலில் பதிவு செய்யப்பட்டுளதைக் காண முடிந்தது. இதன் மூலம் இந்த இரண்டு படங்களும் கர்நாடகாவில் எடுக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
மேலும் படிக்க: அண்ணாமலையின் யாத்திரையில் பெண்கள் மது அருந்துவதாகப் பரவும் ஆந்திரா வீடியோ !
இதற்கு முன்பும் அண்ணாமலையின் பாத யாத்திரைக் குறித்து பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வந்தன. அதனையும் ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: அண்ணாமலையின் பாத யாத்திரை வாகனத்தின் படுக்கை வசதி எனப் பரவும் தவறான புகைப்படம் !
முடிவு:
நம் தேடலில், அண்ணாமலையின் பஸ் யாத்திரையில் தொண்டர்கள் மது அருந்துவதாகப் பரவும் புகைப்படங்கள் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. அவை கர்நாடகா மற்றும் சத்தீஸ்கரில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்கள் என்பதை அறிய முடிகிறது.