அண்ணாமலையின் பாத யாத்திரை வாகனத்தின் படுக்கை வசதி எனப் பரவும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி
இப்ப பாத யாத்திரை போறேன்னா.. வேண்டாம் படுக்கை யாத்திரை போ னு சொகுசு வண்டி வச்சு அனுப்புறாங்க.. வாழ்றான்யா ஆடு..
மதிப்பீடு
விளக்கம்
ஒன்றிய பாஜக அரசின் 9 ஆண்டுக் கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும், தமிழ்நாட்டின் ஊழலுக்கு எதிராகவும் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்றைய தினம் இராமேஸ்வரத்தில் தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
Nothing…guys!
A BJP man going on a rally in TamilNadu
This is his vehicle designed for his travel.He is a state head for BJP,secured votes below NOTA in the MLA election& lost deposit.
All Youtube channels after him for his nuisance value.
But look at him!
What a life! pic.twitter.com/AoHRmLL8yl
— We Dravidians (@WeDravidians) July 27, 2023
அண்ணாமலை பாதயாத்திரை வாகனம் வெளித்தோற்றம்,மற்றும் உட்புற வசதிகள்.
மினி 5 star ஹோட்டல் ரூம் வசதி.ரைட்ரா….#என்வீடியோ_என்ஆடியோ pic.twitter.com/oSn6K2io47
— Shafeeq 2.0 (@itz_safeeq) July 27, 2023
இந்த நடைப்பயணத்திற்கான பிரச்சார வாகனத்தையும் தமிழ்நாடு பாஜக சார்பில் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் உள்ளே படுக்கைகளுடன் கொண்ட வசதி இருப்பதாகப் புகைப்படம் ஒன்றினை திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயண நிகழ்ச்சிக்குத் தயார் செய்யப்பட்டுள்ள வாகனத்தின் புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்தோம்.
கேரளாவை மையமாகக் கொண்டு வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப வாகனங்களை வடிவமைத்துக் கொடுக்கும் ‘கல்புரபரம்பில்’ (Kalapuraparambil) என்னும் நிறுவனம் இயங்கி வருகிறது. அவர்களின் ‘Vehicle modification’ என்னும் இணையதளத்தில் ஒரு வீடியோவின் முகப்பு படமாகப் பரவக் கூடிய புகைப்படம் உள்ளது. அந்த வீடியோ 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவிடப்பட்டுள்ளது.
அண்ணாமலையின் நடைப்பயணம் நேற்றைய தினம்தான் (ஜூலை 28ம் தேதி) தொடங்கப்பட்டது. இதிலிருந்து பரவக் கூடிய புகைப்படம் அண்ணாமலையின் நடைப்பயண வாகனத்திற்குள் எடுக்கப்பட்டது அல்ல என்பதை அறிய முடிகிறது. மேற்கொண்டு பாஜகவின் வாகனம் குறித்தும், அதற்குள் இருக்கும் வசதிகள் குறித்தும் ஏதேனும் செய்திகள் வெளியாகியுள்ளதா எனத் தேடினோம்.
‘நியூஸ் 18 தமிழ்நாடு’ அந்த வாகனத்தைப் பற்றி வீடியோவுடம் தங்களது யூடியூப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அமித்ஷா அந்த வாகனத்தில் பயணம் செய்ய உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என அச்செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றைக் கொண்டு அண்ணாமலை நடைப்பயண வாகனம் எனப் பரவும் படம் 2018ம் ஆண்டு முதலே இணையத்தில் உள்ளது என்பதையும், அது அண்ணாமலையின் வாகனத்திற்குள்ளே எடுக்கப்பட்டது இல்லை என்பதையும் அறிய முடிகிறது. அதே நேரத்தில் அவரது வாகனத்திற்குள்ளே எந்த மாதிரியான வசதிகள் உள்ளது என எந்த ஒரு செய்தியும் புகைப்படமும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் படிக்க : ராகுல் காந்தியின் யாத்திரைக்கு பயன்படுத்தப்படும் கேரவன் என பாஜகவினர் பரப்பும் தவறான படங்கள் !
இதே போன்று ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது பரப்பப்பட்ட போலி செய்திகள் குறித்த உண்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
முடிவு :
நம் தேடலில், அண்ணாமலை நடைப்பயண பிரச்சார வாகனத்தில் உள்ள வசதி எனப் பரவும் புகைப்படம் 2018ம் ஆண்டு முதலே இணையத்தில் உள்ளது. அது தற்போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை அறிய முடிகிறது.