சிஏஏ-க்கு எதிரான கூட்டத்திற்கு பணம் வழங்குவதாக பரவும் வீடியோ ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியபோது..
மதிப்பீடு
விளக்கம்
நாரதர் எனும் முகநூல் பக்கத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்களுக்கு பணம் அளிப்பதாக வெளியிட்ட வீடியோ 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று முகநூலில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதிலும் சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அப்படியான போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் என சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வாறான விடீயோக்களில் ஒன்றான இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை அறிய முடிந்தது.
வைரலாகும் வீடியோவில், வரிசையில் வரும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஆண் ஒருவர் பணம் கொடுத்து வருகிறார். வீடியோவில் ராகுல் காந்தி கூட்டத்தில் உரையாற்றுவதையும் கேட்க முடிந்தது. ஆடியோ மட்டுமே !. வீடியோவில் முதலில் நிற்பது முஸ்லீம் பெண், அடுத்ததாக பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதையும் பார்க்க முடிகிறது. மேலும், வரிசையில் இருப்பவர்களின் கையில் காங்கிரஸ் கட்சியின் கொடி, பதாகைகள் இருப்பதை காணலாம்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட்டத்திற்கு பணம் கொடுத்து மக்களை அழைத்து வரும் வீடியோ குறித்து தேடிய பொழுது 2017-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி யூடியூப் சேனலில் வைரலாகும் வீடியோ வெளியாகி இருக்கிறது. ஆனால், அந்த வீடியோவில் ராகுல் காந்தி உரையாற்றும் ஆடியோ இடம்பெறவில்லை.
வீடியோவின் தொடக்கத்தில் முஸ்லீம் பெண் ஒருவரின் கையில் இருக்கும் பதாகையில் ” Ward no 5 (KMC) ” என இடம்பெற்று இருக்கும். KMC என்பதன் விரிவாக்கம் ” Kakching Municipal council ” . கக்சிங்க் நகரம் மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ளது. 2017 மார்ச் 2-ம் தேதி Indian Weapons எனும் யூடியூப் சேனலில் மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வைரல் வீடியோ என இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.
மேற்காணும் வீடியோவிலும் ராகுல் காந்தி உரையாற்றுவது இடம்பெறவில்லை. தற்பொழுது வைரலாகும் வீடியோவில் இடம்பெற்று இருக்கும் ராகுல் காந்தியின் ஆடியோவில் குஜராத் மாநிலம் குறித்து பேசி இருக்கிறார். அது குறித்து தேடுகையில், 2017-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி ராகுல் காந்தி பெயரில் உள்ள யூடியூப் சேனலில், குஜராத் மாநில காந்திநகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய வீடியோ வெளியாகி இருக்கிறது.
மேற்காணும் வீடியோவில் 2.28-வது நிமிடத்தில் இருந்து இடம்பெற்ற உரையே வைரலாகும் வீடியோவில் ஆடியோவாக இடம்பெற்று இருக்கிறது. 2017 மார்ச் மாதம் மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் பணப்பட்டுவாடா செய்த வீடியோ மற்றும் 2017 அக்டோபர் குஜராத் கூட்டத்தில் ராகுதி காந்தி பேசிய ஆடியோவை இணைத்து சிஏஏ எதிர்ப்பு போராட்டத்துடன் தவறான செய்தியைப் பரப்பி வருகிறார்கள் என்பதை தெளிவாய் அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.