1938ல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடந்ததே தெரியாமல் கலைஞர் பற்றி பாஜகவினர் பரப்பும் பொய் தகவல் !

பரவிய செய்தி
எனது தந்தை கருணாநிதி தனது 14-வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார் டெல்லி மேல்சபையில் கனிமொழி எம்.பி. பேச்சு. கருணாநிதி பிறந்தது ஜூன் 3, 1924. அவருக்கு 14 வயது என்றால் 1938. அப்போது இந்தியா சுதந்திர நாடே அல்ல. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது 1965ல்…. அப்போது கருணாநிதியின் வயது 36. திரும்பவும் மேலே இருக்கும் போஸ்ட்டை படிங்க!
மதிப்பீடு
விளக்கம்
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரைப் பற்றிய பல செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதைக் காண முடிகிறது.
இந்நிலையில், ‘”எனது தந்தை கருணாநிதி தனது 14-வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார்’ என டெல்லியில் கனிமொழி எம்.பி. பேசியுள்ளார். ஆனால் கருணாநிதி பிறந்தது ஜூன் 3, 1924. 1938-இல் தான் அவருக்கு 14 வயது ஆகியிருக்கும், அப்போது இந்தியா சுதந்திரமே அடையவில்லை. மேலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது 1965-இல். அப்போது கருணாநிதியின் வயது 36″ என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
1950 வாக்கில்தானே கருணாநிதி சென்னைக்கே வந்தார்? அது எப்படி அவருக்கு 14 வயசு அப்போ? pic.twitter.com/mkxGlpG8uy
— Roaming Raman 🚩🚩 உங்கள் ரோரா🚩 (@roamingraman) August 2, 2023
இந்த செய்தியை சரவண பிரசாத் உட்பட பாஜக ஆதரவாளர்கள் பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், கலைஞரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து தற்போது பரவி வரும் இந்த செய்தி, கடந்த 2013-இல் இருந்தே சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது.
எனவே இதன் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய நாம் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் காலநிலைகள் குறித்து முதலில் அறிய வேண்டியுள்ளது.
-
-
- முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் – 1937-1938
- இரண்டாவது இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் – 1948
- மூன்றாவது இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் – 1965
- நான்காவது இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் – 1986
-
இதன் மூலம் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் 1965-இல் நடந்தது என்பது போல சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளன. முதல் போராட்டம் இராஜாஜி சென்னை மாகாணத்தின் (அப்போதைய தமிழ்நாடு) முதல்வராக 1937-இல் பதவியேற்ற போதும், இரண்டாவது போராட்டம் 1948-இல் ஓ.பி.ராமசாமி செட்டியார் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த போதும் நடைபெற்றுள்ளது.
முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டமும் கலைஞரும் :
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் வந்ததன் விளைவாக 1920-இல் நடைபெற்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. இதன் விளைவாக ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி, 1936 வரை ஆட்சி செய்தது. பின்னர் 1937-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி இராஜாஜி தலைமையில் சென்னை மாகாணத்தில் தனது மந்திரிசபையை அமைத்தது.
அப்போதைய கல்வி அமைச்சராகவும் இருந்த இராஜாஜி ஹிந்தியை கட்டாயப் பாடமாக அறிவித்தார். இதற்கு சென்னை மாகாணம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது தன்னுடைய 14 வது வயதில் திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்புப் படித்துகொண்டிருந்த கலைஞர், இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் தொடர்ந்து கலந்துகொண்டுள்ளார். இந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்த தவறிய ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை 1939-ல் பதவி விலகியது. பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிரிட்டிஷ் அரசு, 1940-ம் ஆண்டு, பிப்ரவரி 21-ல் ‘இந்தி கட்டாயம்’ என்ற உத்தரவைத் திரும்பப் பெற்றது.
இந்த செய்திகளை எழுத்தாளர் தஞ்சை நலங்கிள்ளியின் ஆராய்ச்சி நூலான “HINDI IMPOSITION PAPERS Volume 3 – History of Anti-Hindi Imposition Agitations in Tamil Nadu” என்ற ஆங்கில நூலில் காண முடிந்தது.
அதில், “இந்தப் போராட்டத்தில் வெறும் 14 வயது கொண்ட சிறுவன் ஒருவன் கலந்துகொண்டான். இந்தித் திணிப்புக்கு எதிரான அவரது முதல் எதிர்ப்பு போராட்டம் அது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தி திணிப்புக்கு எதிரான பல போராட்டங்களில் கலந்து கொண்டார். இருபத்தி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அமோக வெற்றியில் தமிழ்நாடு மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். 1938ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்த அந்த 14 வயது சிறுவன் வேறு யாருமல்ல, முத்துவேல் கருணாநிதிதான்.” என்று அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று மைதிலி ராசேந்திரன் எழுதியுள்ள “கலைஞரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம்” என்ற நூலிலும் முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலைஞரின் பங்கு குறித்து ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளது.
அதில் பக்க எண் 13-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலைஞர் என்ற தலைப்பின் கீழ், “அன்று, இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு சைதாப்பேட்டையில் மறைமலையடிகள் தலைமையில் நடந்தேறியது. இப்போராட்டத்தில் பெரியார் தலைமையில் அறிஞர் அண்ணா, கி.ஆ.பெ., சோமசுந்தர பாரதியார், மூவலூர் இராமாமிர்தம் போன்ற பலர் வகுத்து நின்றனர்.
இந்தச் சூழலில் பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சுகளால் தமிழகத்து இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் கிளர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை ஆங்காங்கு நடத்தி வந்திருக்கின்றனர். அம்மாணவர்களுள் திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு (இரண்டாம் பாரம்) படித்துக் கொண்டிருந்த கலைஞரும் ஒருவராகி இந்தி எதிர்ப்பின் முதல் கட்டப் போராட்டதிலேயே முனைந்து நின்றிருக்கிறார். ஊர்வல வழியில் பள்ளிக்கூட இந்தி ஆசிரியரிடமே கலைஞர் இந்தி எதிர்ப்புத் துண்டறிக்கையைக் கொடுத்திருக்கிறார்.
அதே போன்று இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் துவக்கமாக 1948 செப்டம்பர் 15 அன்று கலைஞரின் திருமணத்தின் போது, உயர்நிலைப்பள்ளியில் அடையாள மறியல் செய்வதற்காக இந்தி எதிர்ப்பு ஊர்வலம் அவர் வீட்டு வழியாக வந்துள்ளது. தன்னுடைய திருமணத்தின் போதும் அந்த ஊர்வலத்தோடு சேர்ந்து கொண்டு அவரும் புறப்பட்டுள்ளார்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 1976ல் ஆட்சிக் கலைக்கப்பட்ட பிறகே திமுக எமர்ஜென்சியை எதிர்த்ததாக மாரிதாஸ் சொன்ன பொய் !
முடிவு :
நம் தேடலில் 1938-இல் கலைஞர் தன்னுடைய 14-வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்ததே 1965-இல் தான் என சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் தவறானவை. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதில் கலைஞர் கலந்து கொண்டுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.