நயினார் நாகேந்திரனிடம் சபாநாயகர் அப்பாவு அநாகரிகமாக பேசியதாக பரப்பப்படும் பொய் !

பரவிய செய்தி

சட்ட பேரவையில். நைனார் நாகேந்திரன் : தமிழகத்தில் 7 கோடிக்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன என்கிறார். இடை மறித்து சபாநாயகர், அவைகள் எல்லாம் ஒண்ணுக்கு (சிறுநீர்) இருக்குமே? என்கிறார். இந்த பதில் எதற்காக?? ஒரு சபையில் அமர்ந்து ஒரு அவைத்தலைவர் பேச வேண்டிய பேச்சா இது?? 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாடு சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் இம்மாதம் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெற்றது. அதில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் பேசுகையில் சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டுப் பேசும் வீடியோ ஒன்றினை பாலு முனியப்பன் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். 

Archive twitter link 

அப்பதிவில், நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் 7 கோடிக்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன எனப் பேச ஆரம்பிக்கிறார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு “அவைகள் எல்லாம் ஒண்ணுக்கு (சிறுநீர்) இருக்குமே?” எனப் பேசியுள்ளார். ஒரு அவைத்தலைவர் பேச வேண்டிய பேச்சா இது? என அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பதிவில் தமிழ்நாடு பாஜகவின் டிவிட்டர் பக்கம் டாக் செய்யப்பட்டுள்ளது.

உண்மை என்ன ?

சபாநாயகர் அப்பாவு பேசியது என பாலு முனியப்பன் டிவிட்டர் பக்கத்திலேயே வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் நீர்த்திரை என வாட்டர் மார்க் இருப்பதினை காண முடிந்தது. 

அந்த வீடியோவினை நீர்த்திரை யூடியூப் பக்கத்தில் தேடினோம். 2022 அக்டோபர் 19ம் தேதி ஆடு, எருமை, பசு.. பங்கமாக கலாய்த்த அப்பாவு” என்ற தலைப்பில் நயினார் நாகேந்திரன் மற்றும் அப்பாவு சட்டசபையில் பேசியது  வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் பசு மாடுகள், எருமை மாடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் உட்பட சுமார் 7 கோடிக்கு மேலாகக் கால்நடைகள் உள்ளது எனப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு “அதில் நிறைய உங்களுக்கு இருக்குமே” எனப் பேசுகிறார். அப்போது அரங்கமே சிரிக்கிறது. 

அதன்பிறகு நயினார் நாகேந்திரன் தனது பேச்சை தொடர்ந்தார். தமிழகத்தில் பருவமழை தொடங்க இருப்பதினால் கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பு நடவடிக்கையினை எடுக்கக் கோருகிறார். இதற்கு மீன்வளத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலும் அளித்துள்ளது அந்த வீடியோவில் காண முடிகிறது.

மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சன் நியூஸ் தொலைக்காட்சியின் டிவிட்டர் பக்கத்தில் “மீண்டும் அப்பாவு  VS நயினார் நாகேந்திரன்” என்ற தலைப்பில் அக்டோபர் 19ம் தேதி வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவிலும், “அதுல நெறைய உங்களுக்கு இருக்குமே…’  சிரிப்பலையை ஏற்படுத்திய அப்பாவு!” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 

முடிவு : 

நம் தேடலில், தமிழகத்தில் 7 கோடிக்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன எனச் சட்டசபையில் நயினார் நாகேந்திரன் பேசுகையில் அப்பாவு குறுக்கிட்டு “அவைகள் எல்லாம் ஒண்ணுக்கு (சிறுநீர்) இருக்குமே?” எனப் பேசியதாகப் பரப்பப்படும் தகவல் உண்மை அல்ல. சபாநாயகர் அப்பாவு அதில் நிறைய உங்களுக்கு இருக்குமே” என்றே பேசியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader