ஆப்பிள் பளபளப்பாக இருக்க பெயிண்ட் அடிப்பதாக தவறாகப் பரவும் சாக்லேட் தயாரிப்பு வீடியோ !

பரவிய செய்தி
ஆப்பிள் சாப்பிடுங்க ப்ரண்ட்ஸ் ஹெல்த்துக்கு ரொம்ப நல்லது… நல்லா பலபலனு இருக்க ஆப்பிளா பார்த்து வாங்கி சாப்பிடுங்க. அதுதான் இந்தமாதிரி பெயிண்ட் அடிச்சி வச்சிருப்பாங்க
மதிப்பீடு
விளக்கம்
ஆப்பிள் பளபளப்பாக இருக்க அதன் மீது பெயிண்ட் அடித்து விற்பனை செய்யப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் உடல் முழுவதற்கும் சூட் மற்றும் முக கவசம் அணிந்த பணியாளர்கள் ஆப்பிள் வடிவில் இருக்கும் பொருள் ஒன்றுக்குச் சிவப்பு பெயிண்ட் அடிக்கின்றனர்.
ஆப்பிள் கலர் 🥱🤔😳pic.twitter.com/GbHVk8mUhe
— Rooster Taurus (@rooster_taurus) July 9, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடுகையில், ரஷ்ய மொழியில் இருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவக் கூடிய வீடியோவை 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவிட்டிருந்தனர். அதில் பயனர் ஒருவர் இந்த ஆப்பிள் வடிவிலான பொருள் அலங்காரப் பொருள் என கமெண்டில் குறிப்பிட்டிருந்தார்.
இதே வீடியோவினை 2021ம் ஆண்டு ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்ற ஹேஷ்டேக்குடன் டிக் டாக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த வீடியோவில் உள்ள பின்னணி இசையானது பரவக் கூடிய வீடியோவில் இருப்பது போன்று இல்லாமல், கிறிஸ்துமஸ் வாழ்த்து இசையுடன் உள்ளது.
அதில் வைரலாகக் கூடிய வீடியோவில் இருக்கும் காட்சிகள் மட்டுமின்றி கூடுதலாக இரண்டு படங்களும் காண்பிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வார்த்தைகள் அச்சிடப்பட்ட ஒரு சிறிய பெட்டியில் அந்த ஆப்பிள் வைக்கப்பட்டுள்ளது.
அப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில் ‘Shopee’ எனும் விற்பனை தளத்தில் ஆப்பிள் வடிவிலான அப்பொருள் இருப்பதும், அதன் வேறு சில படங்களையும் காண முடிந்தது. ஆப்பிள் வடிவிலான வெற்று (empty) சாக்லேட் குடுவைக்குள் சில சிறிய சாக்லேட்டுகள் நிரப்பப்பட்டுள்ளது. இது உண்மையான ஆப்பிள் இல்லை. ஆப்பிள் வடிவத்தில் செய்யப்பட்ட சாக்லேட் உண்மையான ஆப்பிளைப் போன்று தோற்றமளிக்கச் சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
உண்மையான ஆப்பிள்களைப் பயன்படுத்தி கிறிஸ்துமஸ்க்கு மிட்டாய் ஆப்பிள்களைத் தயாரிக்கும் யூடியூப் வீடியோ ஒன்றையும் காண முடிந்தது. அதில் பச்சை நிற ஆப்பிள்களை உணவு வண்ணத்தை (Food color) பயன்படுத்திச் சிவப்பு நிற சாக்லேட் ஆப்பிளாக மாற்றப்படுகிறது.
பரவக்கூடிய வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை. ஆனால் அது செயற்கை ஆப்பிள் இல்லை, சாக்லேட் ஆப்பிள் என்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும் படிக்க : தெர்மாகோல் வைத்து சர்க்கரை தயாரிக்கும் ஆலை பிடிபட்டதாகப் பரப்பப்படும் வதந்தி வீடியோ !
இதற்கு முன்னர் செயற்கை சர்க்கரை, செயற்கை முந்திரி எனப் பல போலிச் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. அதன் உண்மைத் தன்மைகள் குறித்தும் யூடர்னில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : கோவாவில் தயாரித்து விற்பனை செய்யப்படும் டூப்ளிகேட் முந்திரி பருப்பு எனப் பரவும் வதந்தி வீடியோ !
முடிவு :
நம் தேடலில், ஆப்பிள் பளபளப்பாக இருக்கச் சிவப்பு பெயிண்ட் அடிக்கப்படுவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது ஆப்பிள் வடிவில் தயாரிக்கப்படும் சாக்லேட் என்பதை அறிய முடிகிறது.