அரபு நாட்டின் பழமையான ராசா மசூதியில் சிவலிங்க சிற்பமா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
உலகின் மிக பழமையான ராசா மசூதி ! அரபு நாட்டில் உள்ளது ! இதன் சிறப்பம்சம் என்னவென்றால் சிவலிங்கம் மற்றும் இரண்டு நந்திகள் இதில் பொறிக்கப்பட்டுள்ளதுதான் ! ஜூம் செய்து பார்க்கவும்.
மதிப்பீடு
விளக்கம்
அரபு நாட்டில் உள்ள உலகின் பழமையான ராசா மசூதியில் சிவலிங்கம் மற்றும் நந்தியின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மைத்தன்மையை கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது. 6 மாதங்களுக்கு முன்பு இருந்தே இப்புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு இருக்கிறது. பகிரப்படும் புகைப்படம் குறித்த உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
அரபு நாடுகளில் உள்ள பழமையான மசூதி எனக் குறிப்பிட்டு இருப்பதை போல் புகைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் கட்டிட அமைப்பு அமையவில்லை. பார்ப்பதற்கு பழமையான மசூதி போலும் இல்லை, அரபு நாட்டைப் போலவும் இல்லை. இஸ்லாமிய கட்டிட அமைப்பை கொண்ட கட்டிடமா அல்லது நினைவு சின்னமாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. அதுமட்டுமின்றி, அந்த கட்டிடத்திற்கு பின்னால் மினி வேனில் சிலர் தொங்கிக் கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. அவர்கள் இந்தியர்கள் என்பதை அறிய முடிகிறது.
இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேர்ஜ் சேர்ச் செய்து பார்க்கையில், வைரலாகும் பதிவுகளை தவிர பிற தகவல்கள் கிடைக்கவில்லை. அதேபோல், அரபு நாட்டில் ராசா மசூதி இருக்கிறதா எனத் தேடினால் அப்படி எந்தவொரு மசூதியும் இல்லை என அறிய முடிந்தது. உலகில் உள்ள பழமையான மசூதிகள் தேடினால், டாப் 10 மசூதிகளில் சில சவூதி அரேபியாவில் அமைந்துள்ளன. அவை அனைத்தும் பிரம்மாண்டமான அமைப்பாக இருக்கின்றன.
2016-ம் ஆண்டு மார்ச் tripadvisor இணையதளத்தில், டெல்லி – ஆக்ரா சுற்றுலா சென்றவர்கள் இப்புகைப்படத்தை பதிவேற்றி உள்ளனர். இதன் மூலம் இந்த கட்டிட அமைப்பு இந்தியாவில் உள்ளது என உறுதி செய்ய முடிகிறது. இருப்பினும், புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது மற்றும் அதன் விவரங்கள் குறித்து ஏதும் பகிரவில்லை. மேற்கொண்டு, இக்கட்டிட அமைப்பு குறித்த தரவுகளை கிடைக்கவில்லை.
முடிவு :
நம் தேடலில், உலகின் பழமையான ராசா மசூதியில் சிவலிங்கம் மற்றும் இரண்டு நந்திகளின் சிற்பங்கள் இடம்பெற்று இருப்பதாக பரவும் தகவல் தவறானது என அறிந்து கொள்ள முடிந்தது.