அரபு நாட்டில் பெண்களை விற்பனை செய்யும் சந்தையா ?| உண்மை என்ன?

பரவிய செய்தி
அரபு நாட்டில் பெண்களை விற்கும் சந்தை. இந்த நிலை நம் தங்க தமிழகத்தில் வர வேண்டுமா ?
மதிப்பீடு
விளக்கம்
அரபு நாட்டில் பெண்களை விற்பனை செய்யும் சந்தை எனக் கூறி முகநூல் பக்கங்களில் பகிரப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான ஷேர்களையும், லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும் பெற்று வைரலாகி வருகிறது. அரபு நாட்டில் நிகழும் கொடுமையை போன்று தமிழகத்தில் நிகழ வேண்டுமா என கேள்வியுடன் இவ்வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
வைரலாகும் வீடியோவில், ” சாலையில் அரபு உடையில் இருக்கும் ஆண்கள் பர்தா அணிந்து இருக்கும் பெண்களை சங்கிலியில் கட்டி வைத்து உள்ளார்கள். ஏலத்தில் இருந்து இளம்பெண்ணை வாங்கிய நபரிடம் சங்கிலியால் கட்டி வைத்த பெண்ணை ஒப்படைகிறார்கள். பின்னர் அல்லாஹு அக்பர் என்ற கோசங்களை எழுப்புகின்றனர். தொடர்ந்து ஏலத்தில் பெண்களை விற்பது போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள்.
ஆனால், வீடியோவின் தொடக்கத்திலேயே பல கேமராக்களின் புகைப்படமெடுக்கும் வெளிச்சம் அடிக்கப்படுகிறது. வீடியோவின் இறுதியில் ஏலம் விடுபவர்களுக்கு எதிராக நிற்பவர்கள் பலரும் கேமராக்கள், செல்போனில் அங்கு நடத்தப்பதை பதிவு செய்கிறார்கள். முக்கிய சாலையில் எடுக்கப்பட்ட வீடியோவில் சுற்றிலும் உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் அவர்களுக்கு பின்னால் சொகுசு பேருந்துகள் செல்வதையும் காண நேரிட்டது.
உண்மை என்ன ?
வைரலாகும் வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்த புகைப்படம் கொண்டு ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்யும் தளத்தின் மூலம் வீடியோ குறித்து தேடிய பொழுது, 2017-ம் ஆண்டில் யூடியூப் சேனலில் ” auctioning women on the street of London ” என்ற தலைப்பில் அதே வீடியோ பதிவாகி இருந்தது நமக்கு கிடைத்தது. லண்டனில் பெண்களை ஏலம் விடுவதாக குறிப்பிட்ட வார்த்தைகளை கொண்டு மேற்கொண்டு தேடிய பொழுது 2014-ம் ஆண்டில் பிபிசி-யில் வெளியான ட்ரெண்டிங் செய்தி கிடைத்தது.
அதில், லண்டனின் லேய்செஸ்டர் சதுக்கத்தில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக குர்திஸ் செயற்பாட்டாளர்கள் பிரச்சாரத்தை மேற்கொன்டு வருகின்றனர். இந்த மாதிரி வீடியோ மூலம் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) பாலியல் அடிமை சந்தையை லண்டனில் நிகழ்த்தி காட்டியுள்ளார்கள். இந்த வீடியோவில் உடல் முழுவதும் மூடப்பட்ட உடை மற்றும் சங்கிலியுடன் இருக்கும் பெண்கள் அனைவரும் நடிகர்கள் என வெளியாகி இருக்கிறது. எனினும், வீடியோவின் 16 நிமிட காட்சி மட்டுமே பிபிசி-யில் வெளியாகி இருக்கிறது.
அதேபோல், Dailymail இணையதளத்தில் ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிரான செயற்பாட்டாளர்கள் பாலியல் அடிமை சந்தையை லண்டனில் நிகழ்த்தி காட்டியதாக தலைப்பிட்டு உள்ளனர். மேலும், அந்த வீடியோவில் நடித்து காட்டிய பெண்களை பிறகு பர்தா உடைகளை அகற்றுவது மற்றும் அவர்களுக்கு பின்னால் லண்டன் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இருப்பதையும் காணலாம்.
2014-ல் ஐஎஸ் பயங்கரவாதிகள் ஈராக் மற்றும் சிரியா எல்லையில் இருக்கும் குர்திஷ் இன மக்களை குறி வைத்து தாக்கினர். யாசிதி பெண்களை கடத்திக் கொண்டு சென்று பாலியல் அடிமையாக நடத்தினர், பெண்களை பாலியல் சந்தையில் விற்பனை செய்தனர். பெண்கள் பாலியல் அடிமைக்கப்பட்டு வந்த கொடூரம் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தது. அதை வெளிப்படுத்தவே லண்டனில் ஐஎஸ் பயங்கரவாதிகள் செய்யும் பெண்கள் பாலியல் அடிமை சந்தை குறித்து தெரு நாடகத்தை நிகழ்த்தி உள்ளார்கள்.
முடிவு :
2014-ம் ஆண்டில் லண்டனில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக பெண்களை பாலியல் அடிமையாக ஏலம் விட்டு நடத்திய நாடகத்தை அரபு நாட்டில் நிகழ்வதாக 2020-ல் சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பியுள்ளனர்.
ஐஎஸ் பயங்கரவாதிகள் பெண்களை பாலியல் அடிமையாக விற்க சந்தை நடத்தியதாக உலக அளவில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதை நேரடியாக குறிப்பிடாமல் அரபு நாடுகளில் பெண்களை விற்கும் சந்தை என்றும், இந்த நிலை தமிழகத்திற்கு வரக்கூடாது என ஐஎஸ் எதிர்ப்பு நாடக வீடியோவை தவறாக பகிர்ந்து வருகின்றனர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.