நீதிபதி அனிதா சுமந்த் அரசின் அர்ச்சகர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தாரா ?

பரவிய செய்தி

தோல்வியடைந்தது திமுகவின் உத்தரவு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். வழக்கு எண் ; WP 16287 /2021 & WMP 17241 / 2021…நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் இடைக்கால தடை விதித்தார்.

மதிப்பீடு

விளக்கம்

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டத்தின் மூலம் 58 பேருக்கு இந்து சமய அறநிலையத்துறையின் கோவில்களில் பணிபுரிய பணி நியமன ஆணையை வழங்கியது. இதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து பதிவுகள் வெளியாகி வருகிறது.

Advertisement

இந்நிலையில், ” அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. வழக்கு எண் ; WP 16287 /2021 & WMP 17241 / 2021. நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் இடைக்கால தடை விதித்தார் ” என நீதிபதியின் புகைப்படம் மற்றும் நீதிமன்ற உத்தரவு என வெப் காப்பியும் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக வழக்கு குறித்து தேடுகையில், நீதிபதி அனிதா சுமந்த் அரசின் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்ததாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தால் அரசு தரப்பிலும், பிற அரசியல் கட்சிகள், ஊடகங்கள் தரப்பில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும்.

” இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான ஜூலை 6-ம் தேதி விண்ணப்பங்கள் வரவேற்பதாக விளம்பரம் வெளியிடப்பட்டது. இதற்கு ஓராண்டு அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை ரத்து செய்து ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் பி.எஸ்.ஆர் முத்துக்குமார் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

Advertisement

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், ஆகஸ்ட் 25-ம் தேத்திக்குள் பதில் அளிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார் ” என ஆகஸ்ட் 9-ம் தேதி நியூஸ் 18 செய்தியில் வெளியாகி இருக்கிறது.

ஆகஸ்ட் 16-ம் தேதி நக்கீரன் செய்தியில், ” இந்த வழக்கு மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை அந்த அமர்விற்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார். அப்போது நீதிபதி, இதுபோன்ற அர்ச்சகர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகின்றார்கள், முறையாகப் பயிற்சி அளிக்கப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர், முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதாகத் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்கு நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார் ” என வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அய்யனார் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசுகையில், ” அர்ச்சகர்கள் நியமனத்திற்கு நீதிபதி அனிதா சுமந்த் இடைக்கால தடை விதித்ததாக அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. சென்னை உயர்நீதிமன்ற இணையதளத்தில் வழக்கின் விவரங்கள் குறித்து தேடுகையில் வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரிக்க மாற்றப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக மற்றொரு வழக்கு இருப்பதால் இந்த வழக்கையும் தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றி இருக்கிறார். அடுத்த விசாரணை செப்டம்பர் 1-ம் தேதியே வருகிறது. இடைக்கால தடை எனத் தெரிவித்து இருந்தால் நீதிமன்ற ஆணையில் வெளியாகி இருக்கும். ஆனால், அப்படி ஏதும் வெளியாகவில்லை. அர்ச்சகர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள் ” எனத் தெரிவித்து இருந்தார்.

வைரல் செய்யப்படும் வழக்கு எண்களை கொண்டு சென்னை உயர்நீதிமன்ற இணையதளத்தில் தேடுகையில், வழக்கை தலைமை நீதிபதியின் அமர்விற்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு வருவதாக ஆகஸ்ட் 18-ம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற ஆணை என வைரல் செய்யப்படும் பதிவுகளுடன் மேற்காணும் வெப் காப்பியும் இணைக்கப்பட்டு உள்ளது. இதிலும் கூட வழக்கு மாற்றப்பட்டதாகவே கூறப்பட்டு இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் இடைக்கால தடை விதித்ததாக பரப்பப்படும் தகவல் வதந்தியே. அர்ச்சகர் நியமனத்திற்கு எதிரான வழக்கு தொடர்பான விவரங்களில் இடைக்கால தடை பிறப்பித்ததாக இடம்பெறவில்லை, வழக்கு தலைமை நீதிபதியின் அமர்விற்கு மாற்றப்பட்டு இருக்கிறது என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button