தமிழ்நாட்டில் குழந்தையைப் போல உறங்கும் அரிசிக்கொம்பன் யானை எனப் பரவும் பழைய வீடியோ!

பரவிய செய்தி
புல்வெளிகளில் குழந்தையைப் போல உறங்கும் அரிசிக்கொம்பன் யானை!Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் சின்னகனல் எனும் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்த 35 வயதுமிக்க அரிசிக்கொம்பன் (அரிக்கொம்பன்) யானை கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பல அட்டகாசங்களை செய்து அங்குள்ள விளைநிலங்களையும், மக்களையும் தாக்கி வந்தது.
இதன் காரணமாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் முதலில் தேக்கடி வனப்பகுதில் விடப்பட்டது. பின்னர் அங்கிருந்து தப்பியோடிய அது தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முகாமிட்டதன் விளைவாக அங்கு 144 தடை பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே சின்ன ஓவுலாபுரம் பகுதியில் பிடிபட்ட யானை மீண்டும் அங்கிருந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக விடப்பட்டது.
இந்நிலையில் தற்போது அரிசிக்கொம்பன் யானை புல்வெளியில் குழந்தையைப் போல தூங்குகிறது என்று கூறி 29 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து நியூஸ்18 தமிழ்நாடு, பாலிமர், தினமணி, ஒன்இந்தியா தமிழ் மற்றும் சன்நியூஸ் போன்ற பல முக்கிய ஊடகங்களும் இந்த வீடியோவைப் பதிவிட்டு செய்தி வெளியிட்டுள்ளதை காண முடிந்தது.
Archive Link 1; Archive Link 2
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரான (சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் காடுகள் துறை) சுப்ரியா சாஹு நேற்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளதை அறிய முடிந்தது.
அதில், “உருளும் புல்வெளிகளில் ஒரு குழந்தையைப் போல தூங்கும் அரிக்கொம்பன்” என்று குறிப்பிட்டிருந்ததைக் காண முடிந்தது. மேலும் அதில் தமிழ்நாடுவனம், TNDIPRNEWS என்றும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த மே 25 அன்று முதலே சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.
அந்த தேதிகளில் அரிசிக்கொம்பன் யானையானது இடுக்கி மாவட்ட வனப்பகுதிகளில் இருந்துள்ளது என்பதிலிருந்து இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது என்று பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும் இதுகுறித்து தேடியதில், பரவி வரும் வீடியோவின் முழு வீடியோவை வனவிலங்கு புகைப்பட கலைஞரான Subhash Nair என்பவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காண முடிந்தது. அதில், “அன்புள்ள யானை பிரியர்களுக்கு வணக்கம். உங்கள் அனைவரையும் ஏமாற்றியதற்கு மன்னிக்கவும், நான் உங்கள் அரிக்கொம்பன் அல்ல. ஆனாலும் நீங்கள் யானைகளை நேசிப்பவராக இருந்தால் கேரளவனத்தில் கொஞ்சம் அன்பை பொழியலாம்.” என்று வீடியோவில் உள்ள யானை பேசுவது போன்று அவர் பதிவு செய்துள்ளதை காண முடிந்தது.
Hello Dear Elephant lovers, Sorry to disappoint you all, I am not your #Arikomban .. but still you can shower some love on me if you #love #elephants #keralaforest pic.twitter.com/7183uiqH42
— Subhash Nair (@itsmesubhash) June 12, 2023
இதன் மூலம் பரவி வரும் வீடியோவில் இருப்பது அரிசிக்கொம்பன் தான் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் இதுகுறித்து தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சமூக வலைத்தளப்பக்கங்களில் அரிசிக்கொம்பன் குறித்து தேடியதில், நேற்று (ஜூன் 11) ‘அரிசிக்கொம்பன் யானையின் தற்போதைய நிலை‘ என்றுக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
அரிக்கொம்மன் பற்றிய தற்போதைய நிலை#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @supriyasahuias
1/2 pic.twitter.com/c52LeXTnHu— TN DIPR (@TNDIPRNEWS) June 11, 2023
அதில், “தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் பிடிக்கப்பட்ட அரிக்கொம்மன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட மேல் கோதையாரில் உள்ள குட்டியார் அணைப்பகுதியில் விடப்பட்டது. அரிக்கொம்பன் யானையானது தற்பொழுது நல்ல உடல்நலத்துடன் சீரான உணவு மற்றும் நீர் எடுத்துக் கொள்கிறது. யானையின் நடமாட்டத்தினை களக்காடு, அம்பாசமுத்திரம் மற்றும் கன்னியாகுமரி வனக்கோட்ட பணியாளர்கள் இரவு பகலாக கண்காணித்து உயர் அதிகாரிகள், கால்நடை மருத்துவக்குழு, முன் களப் பணியாளர்கள் உள்ளடக்கிய மொத்தம் 6 குழுக்கள் அரிக்கொம்மன் கழுத்தில் பொறுத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தொழில்நுட்பம் மூலம் யானையின் நடமாட்டம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளதைக் காண முடிந்தது.
இதன்மூலம் ரேடியோ காலர் தொழில்நுட்பம் மூலம் அரிசிக்கொம்பன் ஆரம்பத்திலிருந்தே கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் பரவி வரும் வீடியோவில் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் காணப்படவில்லை என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: கேரளாவில் முஸ்லீம் நபர் யானைக்கு இறைச்சி கொடுத்ததாக பரப்பப்படும் வதந்தி வீடியோ!
முடிவு:
நம் தேடலில், புல்வெளிகளில் குழந்தையைப் போல உறங்கும் அரிசிக்கொம்பன் யானை எனப் பரவி வரும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல என்பதையும், இது கேரளாவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.
மேலும் இந்த வீடியோவில் இருப்பது அரிசிக்கொம்பன் யானை தான் என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஆகையால், இந்த வீடியோவை வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான சுப்ரியா சாஹு நீக்கி உள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.