பிரியாணியில் கருத்தடை மாத்திரை என பழைய வன்ம வதந்தியை பேசிய அர்ஜுன் சம்பத் !

பரவிய செய்தி
இலங்கையில் தமிழ் மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வேண்டுமென்றே பிரியாணி கடைகளைத் திறந்து அதில் கருத்தடை மாத்திரைகளை கலந்து விற்று இலங்கைத் தமிழர்களுடைய வம்சத்தையே அழிக்க முயற்சி பண்ணான். அங்கு கைது பண்ணி வழக்கு போட்டு உள்ளனர். இது ஒருவிதமான ஜிகாத் – அர்ஜுன் சம்பத்
மதிப்பீடு
விளக்கம்
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி ஒன்றில் புரட்டாசி மாத விரதம், மாட்டிறைச்சி, சென்னையில் பிரியாணி விற்பனை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது (2.10நிமிடம்), ” இலங்கையில் தமிழ் மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வேண்டுமென்றே பிரியாணி கடைகளைத் திறந்து அதில் கருத்தடை மாத்திரைகளை கலந்து விற்று இலங்கைத் தமிழர்களுடைய வம்சத்தையே அழிக்க முயற்சி பண்ணான். அங்கு கைது பண்ணி வழக்கு போட்டு உள்ளனர். இது ஒருவிதமான ஜிகாத் ” எனப் பேசி இருக்கிறார்.
அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி இந்து மக்கள் கட்சியின் யூடியூப் சேனல் மட்டுமின்றி அவரின் பேட்டியை பதிவு செய்த யூடியூப் சேனல்களிலும் வெளியாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
அர்ஜுன் சம்பத் தன் பேட்டியில் கூறிய தகவல் வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் பரவிய முஸ்லீம்கள் மற்றும் பிரியாணிக்கு எதிரான போலிச் செய்திகள் மற்றும் இலங்கையில் கலவரத்தை ஏற்படுத்திய வதந்தி மட்டுமே. இந்த வதந்தி தொடர்பாக பல கட்டுரைகளை நாம் வெளியிட்டு இருக்கிறோம்.
1. இலங்கையில் முஸ்லீம்கள் உணவகத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டதா ?
2018-ல் இலங்கை அம்பரா எனும் பகுதியில் முஸ்லீம்கள் உணவகத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து உள்ளனர் என வதந்திகள் பரவி முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களிடையே மோதல் உருவாகியது. குற்றாம்சாட்டப்பட்ட உணவகத்தை அடித்து நொறுக்கியதோடு, கடைக்கு தீயிட்டு கொளுத்தினர்.
ஆனால், முஸ்லீம் உணவகத்தில் இருந்தது ஸ்டார்ச் என இலங்கையின் சிறந்த மருத்துவ குழு உறுதிப்படுத்தினார்கள். மேலும், அது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்தனர்.
2. முஸ்லீம் கடை பிரியாணியில் கருத்தடை மாத்திரைகளா ?| மருத்துவர் கூறும் தகவல்.
இந்துக்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்த முஸ்லீம் உணவக பிரியாணியில் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் வதந்தி, ஆதாரமில்லாத செய்தியை பரப்பி மத வெறுப்புணர்வை உருவாக்க முயல்கிறார்கள் என மருத்துவரின் விளக்கத்துடன் விரிவான கட்டுரையை கடந்த ஆண்டில் நாம் வெளியிட்டு இருந்தோம்.
3. முஸ்லீம் மருத்துவர் 4,000 இந்து பெண்களுக்கு கருத்தடை செய்ததாக வதந்தி !
இதேபோல், இலங்கையில் முஸ்லீம் மருத்துவர் தன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 4,000 இந்து பெண்களின் கருப்பையை அகற்றிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக வதந்தியை பரப்பினர்.
முடிவு :
நம் தேடலில், இலங்கை தமிழர் பகுதியில் முஸ்லீம் உணவக பிரியாணியில் கருத்தடை மாத்திரைகளை கலந்ததாக அர்ஜுன் சம்பத் கூறிய தகவல் வதந்தியே. இதற்கு முன்பாக, சிங்கள மற்றும் இந்துக்களுக்கு பிரியாணியில் கருத்தடை கலந்ததாக பரவிய வதந்தியை மீண்டும் பேசி இருக்கிறார் என அறிய முடிகிறது.