சூர்யாவை செருப்பால் அடித்தால் பணம் தருவதாக பரவுவது பொய்யான தகவல்-அர்ஜுன் சம்பத்

பரவிய செய்தி
அர்ஜுன் சம்பத் : நடிகர் சூர்யாவை செருப்பால் அடிப்பவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு தருவேன்.
நடிகர் சூர்யா : என்னை அடிப்பதால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுக்கு அளிக்க தயார்
மதிப்பீடு
விளக்கம்
நீட் தேர்வை ” மனுநீதி”, மகாபாரதம் உடன் தொடர்புப்படுத்தி நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையின் விளைவாக வலதுசாரி ஆதரவாளர்கள் சூர்யாவின் மீது கண்டனங்களைத் தெரிவித்தும், சமூக வலைதளங்களில் வசைப்பாடியும் வந்தனர்.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ” நடிகர் சூர்யாவை செருப்பால் அடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தருவதாக அறிவித்துள்ளார் ” என்கிற தகவல் வெளியாகிய உடன் அர்ஜுன் சம்பத்திற்கு எதிரான பதிவுகள் வரத் தொடங்கின. இதையடுத்து, அர்ஜுன் சம்பத் அறிவிப்பிற்கு எதிராக, ” 1 லட்சம் அளிப்பதாக இருந்தால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுக்கு அளிக்க தயார் ” என நடிகர் சூர்யா பதில் அளித்து உள்ளதாகவும் பரவத் தொடங்கியது.
ஒரு பொய்யான செய்தியை நம்ப வைத்து சூர்யாவரை கொண்டு சென்று பதிலுரைக்கவைத்து இன்னும் அதனை வலைத்தளங்களில் விவாதிக்க வைப்பது
மாணவ தற்கொலைகளை திமுக ஊக்குவிக்கிறது என்ற மக்கள் கருத்தினை திசை திருப்புவதற்கு தான்
R S பாரதி ஊடகங்கள் மண்டை மீதுள்ள கொண்டையை மறைக்க மறந்து விடுகின்றது
— Arjun Sampath (@imkarjunsampath) September 19, 2020
இப்படி பரவியத் தகவலுக்கு அர்ஜுன் சம்பத் தரப்பில் இருந்தே மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ” ஒரு பொய்யான செய்தியை நம்ப வைத்து சூர்யாவரை கொண்டு சென்று பதிலுரைக்கவைத்து இன்னும் அதனை வலைத்தளங்களில் விவாதிக்க வைப்பது மாணவ தற்கொலைகளை திமுக ஊக்குவிக்கிறது என்ற மக்கள் கருத்தினை திசை திருப்புவதற்கு தான் R S பாரதி ஊடகங்கள் மண்டை மீதுள்ள கொண்டையை மறைக்க மறந்து விடுகின்றது ” என அர்ஜுன் சம்பத் உடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
Checked with him. He didn’t say this.
Strongly condemn statements of this sort. Legal action to be taken against anybody who provokes the public!
Discussion and debate is the only way forward. Difference of opinion makes us stronger as a nation. https://t.co/SKPGF3FLPa
— K.Annamalai (@annamalai_k) September 19, 2020
தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை உடைய ட்விட்டர் பக்கத்திலும் ஒன்இந்தியா தமிழ் செய்தியை பகிர்ந்து கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
Oneindia removed this atrocity literature of fake news. pic.twitter.com/2huO94vfn4
— Indu Makkal Katchi – இந்து மக்கள் கட்சி ( Off ) (@Indumakalktchi) September 19, 2020
அர்ஜுன் சம்பத் உடைய பதில், அண்ணாமலை பதிவு ஆகியவற்றை இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். அதில், ஒன்இந்தியா தமிழ் பொய்யான செய்தியை பரப்பி வருவதாகவும் செய்தியின் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளனர்.
நேற்று இச்செய்தியை ஒன்இந்தியா தமிழ் இணையதளம் வெளியிட்ட பிறகே வைரலாகத் தொடங்கியது. தற்போது அந்த செய்தியை ஒன்இந்தியா நீக்கி உள்ளது. இன்று வெளியிட்ட செய்தியில், இந்து மக்கள் கட்சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளனர். எனினும், இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் என்பதை அர்ஜுன் சம்பத் மறுக்கவில்லை என ஒன்இந்தியா செய்தியில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அர்ஜுன் சம்பத் கூறியதாக பரவிய செய்திக்கு நடிகர் சூர்யா தரப்பில் பதில் அளிக்கப்பட்டதா என உறுதியாக தெரியவில்லை. ஏனெனில், அவரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் அப்படி எந்தவொரு கருத்தும் பதிவிடவில்லை மற்றும் செய்திகளிலும் வெளியாகவில்லை. சூர்யாவிற்கு எதிரான கருத்து என்பதால் அவருக்காக உருவாக்கப்பட்ட கருத்தாக இருக்கக்கூடும்.
எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.. https://t.co/qR32iviTfO
— Suriya Sivakumar (@Suriya_offl) August 11, 2020
இதற்கு முன்பாக கூட, ” தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற” என வெளியிட்ட ட்வீட் பதிவை ஆகஸ்ட் மாதம் சூர்யா பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் தருவதாக தான் அறிவிக்கவில்லை என அர்ஜுன் சம்பத் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அர்ஜுன் சம்பத் கூறியதாக பரவிய தகவலுக்கு நடிகர் சூர்யா பதில் அளித்தார் என்பதற்கு ஆதாரமில்லை என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
Update :
அர்ஜுன் சம்பத் இப்படியொரு அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தர்மா என்பவர் அளித்த பேட்டியில், நடிகர் சூர்யாவை செருப்பால் அடிப்பவர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் 1 லட்சம் ரூபாய் பரிசு மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறார். அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. அவருடைய அறிவிப்பை அர்ஜுன் சம்பத் அறிவிப்பு என பரப்பி இருக்கிறார்கள்.