அர்ஜுன் சம்பத்தின் தம்பி விபச்சார விடுதி நடத்தியதால் கைது எனப் பரவும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
கோவை செல்வபுரத்தில் விபச்சார விடுதி நடத்திய இந்து மக்கள் கட்சியின் மாநில உறுப்பினரும் அர்ஜுன் சம்பத்தின் தம்பியுமான கணேசமூர்த்தி என்பவர் கைது…
மதிப்பீடு
விளக்கம்
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் தம்பி கணேசமூர்த்தி கோவை செல்வபுரத்தில் விபச்சார விடுதி நடத்தி வந்த நிலையில் அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
அடேய் சம்பத்தூ என்னடா இது @Indumakalktchi pic.twitter.com/1x0fMfCUIr
— ஆதிரன் ❤️ (@Aathiraj8586) August 7, 2023
உண்மை என்ன ?
கணேசமூர்த்தி என்பவர் விபச்சார விடுதி நடத்தி கைது செய்யப்பட்டது தொடர்பாகப் பரவும் நியூஸ் கார்டு குறித்துத் தேடியதில், அது 2022ம் ஆண்டு முதல் பரவி வருவதை அறிய முடிந்தது. இடதுசாரியான பேராசிரியர் சுந்தரவள்ளி இதே நியூஸ் கார்டினை 2022, ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
😂😂😂😂 அர்ஜுன் சம்பத் அண்ணா இப்படி அசிங்கப்படுறீங்களே அண்ணா… pic.twitter.com/sIeaALyUSO
— Dr. sundaravalli (@Sundara10269992) August 2, 2022
அதில், ‘30.07.22’ என்ற தேதியும் ‘ShortNewsTN’ என்ற ஊடகத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையை மையமாகக் கொண்டு செயல்படும் அவ்வூடகத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் தேடியதில் அப்படி எந்த நியூஸ் கார்டையும் அவர்கள் வெளியிடவில்லை என்பதைக் காண முடிந்தது.
மேற்கொண்டு அந்த நியூஸ் கார்டில் உள்ள புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில் ஷாட் நியூஸ் இணையதளத்தில் 2022, ஜனவரி மாதம் 26ம் தேதி ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘மாதாந்தம் முன்றரை கோடி வாடகை செலுத்தப்பட்டு நடத்தப்பட்ட விபச்சார விடுதி கொள்ளுப்பிட்டியில் சுற்றிவலைக்கப்பட்டதில் பல பெண்கள் கைது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் இந்து மக்கள் கட்சி என்றோ, கணேசமூர்த்தி என்றோ எந்த இடத்திலும் இல்லை.
மேலும் இதே போன்ற தகவலைக் கொண்ட கதிர் நியூஸ் கார்டு ஒன்றும் கடந்த ஆண்டில் சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளது. அது போலி செய்தி என அவர்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதே போல் கணேசமூர்த்தி கைது செய்ததாக பரவும் தகவலை போல வேறு வேறு ஏதேனும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதா எனத் தேடியதில், அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
பொய் செய்திகளை நம்பாதீர்கள் #fakenews #fakealert pic.twitter.com/PhE6YXXejH
— Kathir News (@KathirNews) August 1, 2022
இவற்றிலிருந்து அர்ஜுன் சம்பத்தின் தம்பி கணேசமூர்த்தி பற்றி பரவும் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
கோவை செல்வபுரத்தில் விபச்சார விடுதி நடத்திய இந்து மக்கள் கட்சியின் மாநில உறுப்பினரும் அர்ஜுன் சம்பத்தின் தம்பியுமான கணேசமூர்த்தியைக் காவல் துறையினர் கைது செய்ததாகப் பரவும் நியூஸ் கார்டு உண்மை அல்ல. அது போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நமது தேடலில் அறிய முடிகிறது.