திமுக ஆட்சியில் பிரதான் மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் ஊழல் நடந்ததாக தவறான செய்தி பரப்பும் அர்ஜுன் சம்பத்!

பரவிய செய்தி

மத்திய அரசு நிதி தரவில்லை என இங்கே திமுக அரசு கதறவேண்டியது, ஆனால் மத்திய அரசு தரும் நிதி மக்களுக்கு முறையாக சென்று சேருகிறதா என பார்ப்பதே இல்லை.. திமுக ஆட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் அதிகாரிகள் முறைகேடு, இதல்லாம் முதல்வருக்கு நிர்வாகமே தெரியாது எனக்காட்டுகிறது…

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற ஒன்றிய அரசின் ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் திமுக ஆட்சியில் முறைகேடு நடந்துள்ளது என ’இந்து மக்கள் கட்சி’ தலைவர் அர்ஜுன் சம்பத் தனது எக்ஸ் தளத்தில் தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை பலரும் தங்களது சமூக ஊடக பக்கங்களில் வைரலாகப் பதிவு செய்துள்ளதையும் காண முடிகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அர்ஜுன் சம்பத் ‘வீடு வழங்கும் திட்டத்தில் ஊழல்’ என்ற தலைப்பின் கீழ் தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்த்திருந்ததைக் காண முடிந்தது. அதில், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் ஊழலில்  ஈடுபட்ட 50 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது என்கிற தகவல் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த ஊழல் எந்த காலகட்டத்தில் நடந்தது என்ற எந்த விவரமும் அந்த நியூஸ் கார்டில் குறிபிடப்படவில்லை.

இந்த ஊழல் வழக்கு தொடர்பாக தீக்கதிர், தினமணி, தினகரன், இந்து தமிழ் திசை போன்ற ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பதையும் நமது தேடலில் காண முடிந்தது. 

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்னும் வீடுகட்டும் திட்டம்:

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்னும் வீடுகட்டும் திட்டம் 2015 ஆம் ஆண்டு ஏழை, எளிய மக்களுக்கு சொந்த வீடு கட்டித்தர வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு ரூபாய் 2 லட்சத்து 77 ஆயிரத்து 290 ரொக்கமும், கட்டுமானப் பொருட்களும் வழங்கப்படுகிறது.   

இத்திட்டத்தின் கீழ் 2016-2020 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற பணிகளில் ஊழல் நடந்துள்ளதாக தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளை சார்ந்த ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்ந்த 50 அதிகாரிகளின் மீது இலஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். 

மேலும் சமீபத்தில் மே 20-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி ஊராட்சிக்குட்பட்ட சணபத்தூா் என்ற பகுதியில் ரூ.31.66 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக   கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும் இந்துதமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. 

ஊழல் நடந்ததாக குறிப்பிடப்படும் 2016 – 2020 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்தது அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அர்ஜுன் சம்பத் திமுக ஆட்சி காலத்தில் ஊழல் நடந்ததாக தவறான தகவலைப் பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க: பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம் என வாட்ஸ்அப்பில் பரவும் போலியான தகவல்!

மேலும் படிக்க: தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன்களை வழங்கும் ‘பிரதம மந்திரி ஸ்வாநிதி திட்டம்’ !

முடிவு:

நம் தேடலில், பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் திமுக ஆட்சியில் ஊழல் நடந்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக அர்ஜுன் சம்பத் கூறும் தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது. ஊழல் நடந்ததாக குறிப்பிடப்படும் 2016 – 2020 காலக்கட்டத்தில் தமிழ் நாட்டில் அதிமுக தான் ஆட்சியில் இருந்தது.

Please complete the required fields.
Back to top button
loader