இராணுவ தேர்வு கேள்வித்தாளை திருடி விற்ற 18 ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கைதா ?

பரவிய செய்தி
இராணுவத் தேர்விலும் ஊழல் ! திருடிய கேள்விதாளை 10 கோடிக்கு விற்ற 18 ஆர்எஸ்எஸ் திருடர்கள் !
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் இந்திய இராணுவ தேர்விலும் ஊழல் நடந்து இருப்பதாகவும், இராணுவ தேர்வின் கேள்வித்தாளை திருடி 10 கோடிக்கு விற்ற 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக இந்த மீம் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
அதில், ” இந்திய இராணுவத் தேர்வுக்கான கேள்வித்தாளை திருடி 10 கோடிக்கு விற்றதாக மாராட்டியம் மாநிலம் மற்றும் கோவாவை சேர்ந்த 18 RSS உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தானே மாநகர காவல்துறையின் தலைவர் நித்தீன் தாக்கரே இதைத் தெரிவித்தார். மேலும் தேர்வு எழுதிய 350 நபர்களும் பிடிபட்டுள்ளனர். கேள்வித்தாள்களை தலா 2 லட்சத்திற்கு விற்றதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர் ” என இடம்பெற்றுள்ளது.
உண்மை என்ன ?
இராணுவத் தேர்வு கேள்வித்தாளை திருடி விற்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேடுகையில், 2017-ம் ஆண்டில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து எகனாமிக் டைம்ஸ்,தி ஹிந்து பிசினஸ்லைன் உள்ளிட்ட ஆங்கில செய்திகள் மற்றும் தினத்தந்தி, மாலைமலர் போன்ற தமிழ் செய்திகள் என பலவற்றில் வெளியாகி இருக்கிறது. ஆனால், கைது செய்யப்பட்டவர்கள் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் என எங்கும் குறிப்பிடப்படவில்லை.
” மராட்டியம், கோவா மாநிலங்களில் ராணுவ தேர்வுக்கான கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியானது. இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, துணை ராணுவ அதிகாரி மற்றும் 3 இடைத்தரகர்கள் உள்பட 18 பேரை தானே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், வினாத்தாள்களை வைத்திருந்ததாக 350 மாணவர்களை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர் ” என செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வைரலாகும் பதிவில் கூறியது போன்று நித்தீன் தாக்கரே தானே மாநகர காவல்துறையின் தலைவர் அல்ல, குற்றப்பிரிவின் மூத்த காவல் அதிகாரி ஆவார்.
ஒருவேளை கைது செய்யப்பட்டவர்களில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் இருந்திருந்தால் இந்திய அளவில் தலைப்பு செய்தியாக மாறியதோடு, அரசியல் வட்டாரங்களில் எதிர்ப்புகள் பெரிதாய் கிளம்பி இருக்கும்.
முடிவு :
நம் தேடலில், 2017-ல் இராணுவ தேர்வின் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானது. உண்மையாக நிகழ்ந்த சம்பவத்துடன் ஆர்எஸ்எஸ் பெயரை இணைத்து வேண்டுமென்றே யாரோ பரப்பிய தவறான செய்தி என அறியமுடிகிறது .