ஆருத்ரா பண மோசடி : பாஜக அமர்பிரசாத் தலைமறைவு உள்பட பரவும் பல்வேறு போலிச் செய்திகள் !

பரவிய செய்தி
அமர் பிரசாத் ரெட்டி தலைமுறைவு.!
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவ மாநில தலைவராக இருப்பவர் அமர்பிரசாத் ரெட்டி. அப்பிரிவில் செயலாளராக இருந்த ஹரிஷ் என்பவர் ஆருத்ரா பண மோசடியில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அமர் பிரசாத், பால் கனகராஜ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் ஹரிஷிடம் இருந்து ரூ.84 கோடி பெற்றதாக தினமலர் நியூஸ் கார்டு ஒன்று திமுகவினரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
ஏன்டா பொறுக்கி @annamalai_k ,
இதோ உன் கட்சியில் பதவி வாங்கவே கோடி கோடியா லஞ்சம் வாங்கி இருக்கீங்களே… நீ அடுத்தவன பத்தி பேச வெட்கமாயில்லை சில்றப்பயலே 🤣🤣🤣 pic.twitter.com/7v4iXIEwxr— Surya Born To Win (@Surya_BornToWin) April 13, 2023
அதேபோல் அமர் பிரசாத்தைப் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை ஆஜராகச் சம்மன் அனுப்பியதாகத் தந்தி டிவி நியூஸ் கார்டும் பரவி வருகிறது. இந்நிலையில் அவர் தலைமறைவாக இருப்பதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரவக் கூடிய ‘தினமலர்’ நியூஸ் கார்டு குறித்து அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடினோம். அப்படி எந்தவொரு நியூஸ் கார்டும் பதிவிடப்படவில்லை. அதேபோல் ‘தந்தி டிவி’ சமூக வலைத்தளத்திலும் தேடினோம்.
ஆருத்ரா கோல்டு தொடர்பாக ஏப்ரல் 11ம் தேதி ‘ஆருத்ரா மோசடி – பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்’ என்ற தலைப்பில் நியூஸ் காடு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு: பாஜக நிர்வாகிகள் அலெக்ஸ், சுதாகருக்கு சம்மன். பொது மக்களிடம் ஏமாற்றிய பணத்தை கொடுத்து பாஜகவில் பொறுப்பு வாங்கியதாக ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர் ஹரீஷ் பகீர் வாக்குமூலம். ஹரீஷின் வாக்குமூலத்தை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு பிரிவு போலீசார் சம்மன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தவிர ஆருத்ரா மோசடியில் அமர் பிரசாதிற்கு தொடர்பு இருப்பதாக எந்த நியூஸ் கார்டும் தந்தி டிவி பக்கத்தில் இல்லை. மேற்கொண்டு அவரை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது தொடர்பாக ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா எனத் தேடினோம். அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.
Dai rascal, you think I am a Useless Dravidian Stock? I am a Proud Hindutva Stock. https://t.co/eJeZxylwx5
— Amar Prasad Reddy (@amarprasadreddy) April 12, 2023
இது தொடர்பாக மேற்கொண்டு தேடியதில், ஷஃபீக் என்பவர் ‘அமர் பிரசாத் ரொட்டி தலைமறைவு.!’ என டிவிட்டரில் பதிவிட்டதற்கு, பதில் அளித்து அமர் பிரசாத் நேற்றைய தினம் (ஏப்ரல், 12) டிவீட் செய்துள்ளார். அதில், “you think I am a Useless Dravidian Stock? I am a Proud Hindutva Stock” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை ஆருத்ரா கோல்டு நிறுவனத்திடம் இருந்து 100 கோடி ரூபாய் பெற்றதாக, அக்கட்சியைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி கூறியதாகத் தினமலர் நியூஸ் கார்டு ஒன்றை திமுகவினர் பரப்பி வருகின்றனர். இது போலியானது என அவரே தனது பேஸ்புக் பக்கத்தில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி பதிவிட்டுள்ளார்.
ஆருத்ரா மோசடி :
‘ஆருத்ரா கோல்டு டிரேடிங்’ என்னும் நிறுவனம் தங்களிடம் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36,000 வரை வட்டி வழங்கப்படும் எனக் கவர்ச்சிகரமான விளம்பரங்களை அளித்தது. இதனை நம்பி பொதுமக்கள் பலரும் முதலீடு செய்தனர். ஆனால், அந்நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்ததையடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் தமிழ்நாடு காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவு 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது.
விசாரணையில் அந்நிறுவனம் ரூ.2,438 கோடிக்கு மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் இயக்குநரும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியுமான ஹரிஷ் என்பவரைக் கடந்த மார்ச் 23ம் தேதி கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இவர் முன்னதாக பா.ஜ.கவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தான் பாஜகவில் பொறுப்பு வாங்குவதற்கு மோசடி பணத்திலிருந்து சிலருக்குப் பங்கு கொடுத்ததாகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை பா.ஜ.க நிர்வாகி சுதாகர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அமர் பிரசாத் பெயர் இல்லை.
முடிவு :
நம் தேடலில், ஆருத்ரா மோசடியில் அமர்பிரசாதிற்கு தொடர்பு இருப்பதாக ஹரிஷ் கூறினார் எனப் பரவும் தினமலர், தந்தி நியூஸ் கார்டு மற்றும் அவர் தலைமறைவு என திமுகவினர் பரப்பும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.