கீழடி அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு.

பரவிய செய்தி
கீழடி அகழாய்வில் முக்கிய பங்காற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை அமெரிக்காவில் நடக்க உள்ள தமிழ் சங்க கூட்டமைப்பின் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி மறுத்துள்ளது இந்திய தொல்பொருள் ஆய்வு துறை.
மதிப்பீடு
சுருக்கம்
அமெரிக்க தமிழ் சங்க கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தனது அகழாய்வு பணி குறித்து சொற்பொழிவாற்றுவதற்கு அமெரிக்கா செல்ல அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
கீழடி அகழ்வாராய்ச்சி பண்டைய பழந்தமிழ் மக்களின் நாகரீக வாழ்கையை உலகறியச் செய்த வரலாற்று பொக்கிஷம். சங்க இலக்கியங்களில் கூறும் பதிவுகள் அனைத்தும் மெய்யாகும் விதத்தில் ஆதாரங்கள் கீழடியில் கிடைத்தன. கீழடியில் 2015-ல் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு தொடங்கிய அகழ்வாராய்ச்சியில் 5,300க்கும் அதிகமான பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
கீழடி ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களில் 2 மாதிரிகள் மட்டுமே கார்பன் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதன் முடிவில் இரண்டு மாதிரிகளும் 2200 ஆண்டுகள் பழமையானவை என்பது நிரூபணமாகியது. இது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு அதிர்ச்சியையும் அளித்தது என்பதை அனைவரும் அறிவோம்.
ஒரு செயல் நன்றாக சென்று கொண்டு இருந்தால் அதை தடுக்க எதிர்வினை செயல்பாடு உருவாகும். அதுபோலவே, தீவிர ஈடுபாடுடன் கீழடி ஆய்வை மேற்கொண்டு வந்த அகழாய்வு அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் 2017-ல் அஸ்ஸாமில் உள்ள கவ்காத்திக்கு பணி இடமாற்றம் செய்யபட்டார். இதன் பிறகு தமிழக தொல்லியல் துறை சார்பில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றும், நான்காம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் பெரிதாக செய்திகள் வெளியாகாமல் இருந்தன.
சென்ற ஆண்டில் கீழடி அகழாய்வு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஏனெனில், 2 ஆண்டுகளாக கீழடி அகழாய்வை சிறப்பாக மேற்கொண்டு வந்த அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அஸ்ஸாமில் நினைவு சின்னப் பராமரிப்பு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது, 3-ம் கட்ட ஆய்விற்கான அனுமதி வழங்குவதை மத்திய அரசு காலம் தாழ்த்தியது என பல பிரச்சனைகள் இருந்தன.
இந்நிலையில், வட அமெரிக்காவின் தமிழ் சங்க கூட்டமைப்பின் சார்பாக நடக்க உள்ள ஆண்டு விழாவில் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள 50 தமிழ் சங்கங்கள் இந்த கூட்டமைப்பில் உள்ளன. இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகள் ஜூன் 29-ம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
ஏப்ரல் 2-ம் தேதி, தமிழ் சங்க கூட்டமைப்பின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், “நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்குமாறும், மன்றத்தின் விவாதத்தில் கலந்து கொள்ளுமாறும் மற்றும் தமிழ்நாட்டில் நடத்திய அகழாய்வு பற்றிய சொற்பொழிவாற்ற வேண்டும்” என்று அணுகி இருந்தனர்.
இதையடுத்து, ஏப்ரல் 26-ம் தேதி அமர்நாத் ராமகிருஷ்ணன் இந்திய தொல்பொருள் துறையின்(ASI) துணை இயக்குனருக்கு, அமெரிக்காவில் நடக்கும் நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி வழங்குமாறு கடிதம் அனுப்பினார். ஆனால், இதற்கான பதில் 25-ம் தேதியே அளிக்கப்பட்டது. ASI-யின் துணை இயக்குனர் தாரா சந்தர் கூறுகையில், நான் நேரிடையாகவே கூறுகிறேன், இந்த தகுதிவாய்ந்த அதிகாரம் உங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை ” என்று கூறினார்.
” எந்தவித காரணமின்றி அனுமதி மறுத்துள்ளது ASI. நான் செல்வதற்கு ஏன் அனுமதிக்க மறுத்தார்கள் என எனக்கு தெரியாது. இது பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் ” தெரிவித்துள்ளார்.
இந்திய தொல்பொருள் துறையின் செயல் குறித்து கூட்டமைப்பின் உறுப்பினர் பி.பி.ராமகிருஷ்ணன் கூறுகையில், “ அமெரிக்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் 5000-க்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர். அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த அகழாய்வு குறித்து பல விசயங்களை அறிந்து கொள்ள இருந்த அரிய வாய்ப்பை இழந்து விட்டோம்.
நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுத்த ASI-யின் செயலில் நோக்கம் உள்ளதாக பாரம்பரிய ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் “ மதச்சார்பற்ற சமூகம் ” அங்கு வாழ்ந்ததை நிரூபித்துள்ளது. “ மத்திய அரசில் இருக்கும் சில அதிகாரப் பிரிவுகள் இந்த அகழாய்வு வேத கலச்சாரத்திற்கு எதிராக செல்வதை பார்க்கின்றனர்”. இங்கு கிடைத்த பொருட்களில் ஒன்றில் கூட கடவுள் மற்றும் மதம் சார்ந்த குறியீடுகள் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
கீழடியில் மொழி அடையாளத்தை மட்டுமே கொண்ட மதச்சார்பற்ற சமூகம் வரலாற்றை மாற்றும் விதத்தில் அமைந்து விட்டது என்று தமிழ் மக்கள் நன்றாகவே அறிந்து விட்டனர். அகழாய்வில் தொய்வு, அதிகாரிகள் மாற்றம், ஆராய்ச்சி பற்றி உலக மக்களுக்கு தெரிந்து விடக் கூடாது என அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு என மண்ணைக் கொண்டு மூடி மறைக்க நினைத்தாலும் விதையானது ஒரு நாள் மண்ணை முட்டிக் கொண்டு விண்ணை பார்த்து விருட்சமாக மாறியே தீரும்.
கீழடியில் கிடைத்த பொருட்கள் 2200 ஆண்டுகள் பழமையானவை
கீழடியில் நான்காம் கட்ட அகழாய்விற்கு நீதிமன்றம் உத்தரவு