This article is from Apr 30, 2021

ஹோமியோபதி மருந்தான ஆஸ்பிடோஸ்பெர்மா ஆக்சிஜன் அளவை அதிகரிக்குமா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

ஆக்சிஜன் அளவு குறையும் போது, ஆக்சிஜனை பெற காத்திருக்க வேண்டியது இல்லை. ஆஸ்பிடோஸ்பெர்மா கியூ 20 துளிகளை ஒரு கப் தண்ணீரில் கலந்து எடுத்துக் கொள்ளவும். உடனடியாக ஆக்சிஜன் அளவு உயர்ந்து சரியாகி விடும். இது ஒரு ஹோமியோபதி மருந்து. ஆக்சிஜனை தேடி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

மதிப்பீடு

விளக்கம்

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பொதுமக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். மருத்துவமனைகளில் கூட ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பலர் உயிரிழந்து இருக்கிறார்கள். எங்காவது ஆக்சிஜன் கிடைக்காத என மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், ஒருவருக்கு ஆக்சிஜன் அளவு குறையும் போது, ஆக்சிஜன் சிலிண்டரை தேடி நேரத்தை வீணடிக்காமல் ஆஸ்பிடோஸ்பெர்மா கியூ எனும் ஹோமியோபதி மருந்தினை தண்ணீரில் கலந்து எடுத்துக் கொண்டால் உடனடியாக ஆக்சிஜன் அளவு உயர்ந்து சரியாகி விடும் என மருந்தின் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்துமாறு வாசகர் தரப்பிலும் கேட்கப்பட்டது.

உண்மை என்ன ?

ஆஸ்பிடோஸ்பெர்மா கியூ மருந்து ஆக்சிஜன் அளவை அதிகரிக்க செய்கிறதா எனத் தேடுகையில், ஆஸ்பிடோஸ்பெர்மா கியூ குறித்து ஹோமியோபதி மருத்துவர் அஞ்சு நந்தா அளித்த தகவல் இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.

” ஆஸ்பிடோஸ்பெர்மா கியூ ஆனது கார்டியாக் ஆஸ்துமா மருத்துவ நிலையிலும், சில சமயங்களில் நுரையீரல் ஆஸ்துமா நிலையில் ஆஸ்துமா அறிகுறிகளை நிவர்த்தி செய்வதற்கும் மற்றும் சுவாசக்குழாய் தூண்டுதலாகவும் செயல்படுகிறது. இது மார்பில் உள்ள நெரிசலை நீக்கி சிறந்த சுவாசத்தை ஊக்குவிக்கிறது. இது தற்காலிகமாக நுரையீரலால் எடுத்துக்கொள்ளும் ஆக்சிஜனை அதிகரிக்கிறது. ஆனால், இது சிக்கலான நிலையில் இருக்கும் நோயாளிக்கு தேவைப்படும் ஆக்சிஜன் எடுத்துக்கொள்வதற்கு மாற்றாக இல்லை. இதை ஹோமியோபதி மருத்துவரைக் கலந்து ஆலோசித்த பின்னரே கொடுக்க வேண்டும், சுயமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படவில்லை ” என மருத்துவர் கூறியுள்ளார்.

மேலும் அறிந்து கொள்ள ஹோமியோபதி மருத்துவர் வித்யா அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, ” ஆஸ்பிடோஸ்பெர்மா கியூ, கோவிட்-19 நோயாளிகளுக்கு காய்ச்சல் அல்லது இருமல் குறிப்பாக மூச்சுத்திணறலுடன் இருக்கும் போது ஒரு அடிப்படை ஆதரவு மருந்தாக பயன்படுத்தப்பட வேண்டும். ஆஸ்பிடோஸ்பெர்மா நுரையீரலின் திறனை மேம்படுத்துகிறது மற்றும் தற்காலிகமாக இரத்தத்தின் ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. இது சிக்கலான சூழ்நிலையில் நோயாளிக்கு தேவைப்படும் மருத்துவமனை அளவிலான ஆக்சிஜன் வழங்குவதலுக்கு மாற்றாக இல்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.

Twitter link

Press Information Bureau உடைய ட்விட்டர் பக்கத்தில், ” ஆஸ்பிடோஸ்பெர்மா கியூ பற்றி பரவும் இக்கூற்று தவறானது. கொரோனா நோய்த்தொற்றில் ஆக்சிஜன் அளவை சமநிலைப்படுத்துவதற்கு மாற்றாக இதைப் பயன்படுத்த முடியாது ” என இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

முடிவு :

ஹோமியோபதி மருந்தான ஆஸ்பிடோஸ்பெர்மா கியூ ஆனது ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதில் நிரந்தர தீர்வல்ல. இந்த மருந்து குறைந்த நேரத்திற்கே உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும். ஆனால், அது தொடர்ந்து நிலையாக இருக்காது. இதை கொரோனா நிலையில் ஆக்சிஜன் அளவை சமநிலைப்படுத்த மாற்றாக பயன்படுத்த முடியாது.

கொரோனா பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதாக பரவும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி பயன்படுத்த வேண்டாம். ஹோமியோபதி மருந்தோ அல்லது பிற மருந்துகளோ மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

Please complete the required fields.




Back to top button
loader