அடல் சுரங்கப் பாதை எனப் பரவும் தவறான புகைப்படம்| எந்த நாட்டைச் சேர்ந்தது ?

பரவிய செய்தி
சுமார் 10,000 அடி உயரத்தில் 8.8கி. மீட்டர் தூரத்திற்கு குகைக்குள்ளேயே பயணிக்கும் மிக நீண்ட அடல் சுரங்கபாதை இமாசல்பிரதேசத்தின் மணலியை லடாக்கின் லே யுடன் இணைக்கும் சாலை வழி இன்று நாட்டு மக்களுக்கு நமது பிரதமரால் அர்ப்பணிக்கபட்டது.
மதிப்பீடு
விளக்கம்
அக்டோபர் 3-ம் தேதி இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மணாலியில் இருந்து லஹால் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு வரை 9 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்ட “அடல் சுரங்கப் பாதை ” நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப் பாதை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வெளியான சமூக வலைதளப் பதிவுகள், சில செய்தி இணையப் பக்கங்கள் வரை இப்புகைப்படமே பகிரப்பட்டு வந்துள்ளது.
இந்திய அளவிலும் கூட இப்புகைப்படம் செய்தி இணையதளங்கள், சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு உள்ளது. ஆனால், இந்த புகைப்படம் அடல் சுரங்கப் பாதையைச் சேர்ந்தது அல்ல. இப்புகைப்படம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை காணலாம்.
உண்மை என்ன ?
” அடல் சுரங்கப் பாதை ” என பகிரப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், பெரும்பாலான பதிவுகளில் அடல் சுரங்கப் பாதை எனக் காண்பித்தன. ஆனால், www.inspectionservices.net எனும் இணையதளத்தில் ” Devil’s Slide By-Pass Tunnels ” எனும் தலைப்பில் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் சுரங்க பாதை அமைப்புகளை மற்றொரு கோணத்தில் எடுத்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த சுரங்கப் பாதை 2012-ல் கலிஃபோர்னியாவில் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கொண்டு தேடுகையில், 2012 ஆகஸ்ட் 4-ம் தேதி www.cruiserclothing.com எனும் இணையதளத்தில் Inside the devils slide tunnel எனும் தலைப்பில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளின் பல புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில், இந்தியாவில் வைரலான புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சான் ஃப்ரான்ஸிஸ்கோ பெனின்சுலா பகுதியில் அமைந்துள்ள இரட்டை சுரங்கப் பாதை Tom Lantos Tunnels என அழைக்கப்படுகிறது. 2013-ம் ஆண்டில் Tom Lantos Tunnels மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சுரங்கப் பாதையை அமைக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இந்தியாவில் உள்ள அடல் சுரங்கப் பாதை என தவறாகப் பரப்பி வருகிறார்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.