50 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் அத்திப் பூ எனப் பரவும் பூஞ்சையின் புகைப்படம் !

பரவிய செய்தி
மிகவும் அபூர்வமான விஷயங்களைப் பற்றி நாம் பேசும் போது *அத்திப் பூத்தாற் போல* என்று சொல்வது வழக்கம் தானே அந்த அத்தி மர பூ தான் கீழே இருப்பது 50 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். ஒருவர் தன் வாழ்நாளில் ஒரேயொரு முறைதான் இப்பூவை பார்க்கும் பாக்கியம் கிடைக்கும்.
மதிப்பீடு
விளக்கம்
50 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அத்திப் பூ என மரத்தின் பகுதியில் பூவின் வடிவில் ஓட்டி இருக்கும் ஓர் புகைப்படத்தை கண்டு மகிழுங்கள் எனக் கூறி சமூக வலைதளங்களில் சில ஆண்டுகளாகவே பகிர்ந்து வருகிறார்கள்.
மிகவும் அபூர்வமான விஷயங்களைப் பற்றி நாம் பேசும் போது *அத்திப் பூத்தாற் போல* என்று சொல்வது வழக்கம்
தானே🤔அந்த அத்தி மர பூ தான் கீழே இருப்பது😍
50 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்குமாம்😍 pic.twitter.com/NBhp1JDiE1
— Srinivasan Rahul🏂 (@Srinivtwitz) March 10, 2018
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2016-ல் lokmat எனும் மராத்தி இணையதளத்தில் இதே புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியாகி இருந்தது.
அதில், மகாராஷ்டிரா மாநிலத்தின் மிராஜ் கோட்டை தத்தா கோவில் அருகே சுனில் என்பவரது வீட்டில் உள்ள அம்பர் மரத்தில் அதிசயமாக மஞ்சள் நிறப்பூவை கண்ட பிறகு அதிசயம் நிகழ்ந்ததாக மக்கள் கூட்டம் கூடியது. அந்த மரத்தின் அருகே பெண் ஒருவர் வழிபாடு செய்ய துவங்க பலரும் பூஜை செய்து இருக்கிறார்கள்.
இதை அறிந்து அங்கு வந்த மூடநம்பிக்கை எதிர்ப்பு குழுவின் டாக்டர் பிரதீப் பாட்டீல் உள்ளிட்ட ஆர்வலர்கள், “அது அம்பர் மரத்தின் பூ அல்ல, பூ வடிவில் ஒருவகையான பூஞ்சை ” எனக் கூறி இருக்கிறார்கள். இதுகுறித்து, காவல்துறையிடம் புகார் தெரிவித்ததாகவும் ” கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பகோடா மலரா ?| ஃபேஸ்புக் வதந்தி.
இதற்கு முன்பாக, பல நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய பூக்கள் என பல்வேறு தவறான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன.
மேலும் படிக்க : இமயமலையில் 99 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சிவலிங்க பூவா ?| உண்மை என்ன ?
முடிவு :
நம் தேடலில், 50 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அத்திப் பூ என பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது பூவே அல்ல, அது பூ வடிவிலான பூஞ்சை என்றும், இதை 2016-ல் மகாராஷ்டிராவில் அதிசய பூ என பரபரப்பை ஏற்படுத்தியது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.