ஏடிஎம் திருட்டை தடுக்க “Cancel” பட்டனை இருமுறை அழுத்த ஆர்.பி.ஐ அறிவுறுத்தியதா ?

பரவிய செய்தி
ஆர்.பி.ஐ-யின் விழிப்புணர்வுத் தகவல் . ஏடிஎம் கார்டை சொருகுவதற்கு முன் ஏடிஎம்-யின் கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்த வேண்டும். இவ்வாறு செய்வதனால் உங்கள் PIN குறியீட்டை திருட யாராவது key பேடை அமைத்து இருந்தால் , இது அந்த அமைப்பை ரத்து செய்யும்.
மதிப்பீடு
விளக்கம்
ஏடிஎம் இயந்திரங்களில் கீ பேட் போன்றவற்றை அமைத்து ஏடிஎம் கொள்ளையில் ஈடுபவர்களில் இருந்து தப்பிக்க, ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை பயன்படுத்தும் முன்பாக கேன்சல் பட்டனை இருமுறை அழுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு தகவலை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளதாகவும் , இதனை உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறுமாறும், பொதுநலம் கருதி கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை வெளியிடுவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
ஏடிஎம் இயந்திரத்தின் பயன்பாடு குறித்து மக்களுக்கு அச்சம் இருந்து வருவதால், இதன் உண்மைத்தன்மையை குறித்து ஆராய்ந்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.
உண்மை என்ன ?
ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தும் முன்பு கேன்சல் பட்டனை இருமுறை அழுத்த வேண்டும் என்ற தகவல் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேடிய பொழுது அத்தகைய விழிப்புணர்வு தகவல்கள் இடம்பெற்ற அறிக்கைகள் ஏதும் வெளியாகவில்லை.
ஆர்.பி.ஐ அறிக்கை வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் மட்டுமே மேற்கண்ட விழிப்புணர்வு தகவல் வைரலாகி வருகிறது. ஆர்.பி.ஐ வெளியிட்டதாக கூறும் தகவல் எப்படி பொய்யானதோ , அதேபோன்று அந்த விழிப்புணர்வு தகவலும் பொருத்தமானது இல்லை என்றே கூற வேண்டும்.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கி அட்டைகள் தயாரிப்பு நிறுவனமான Manipal Technologies limited தரப்பில், திருட்டில் இருந்து பாதுகாக்க ” கேன்சல் ” பட்டனை இருமுறை அழுத்த வேண்டும் என்பது அவசியமற்றது என கூறப்படுகிறது .
மேலும் படிக்க :ஏ.டி.எம்களில் Cancel பட்டனை இருமுறை அழுத்தி தகவல் திருட்டை தடுக்கலாமா ?
இதற்கு முன்பாக, 2018-ல் இதே தகவலை வேறு மாதிரியான வடிவில் பரப்பி இருந்தனர். அப்பொழுதே, இத்தகவலை வதந்தி என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : ஏ.டி.எம் எண்ணை தலைகீழாக அழுத்தினால் போலீஸ் வருமா ?
அடுத்தது, ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தும் பொழுது திருடர்கள் பிடித்துக் கொண்டால் ஏடிஎம் எண்ணை தலைகீழாக அழுத்தி காவல்துறைக்கு எச்சரிக்கை செய்யலாம் என வதந்திகள் பரவி இருந்தன.
ஏடிஎம் பயன்படுத்துபவர்கள் கேன்சல் பட்டனை இருமுறை அழுத்த வேண்டும் எனக் கூறும் தகவல் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி இருந்த தவறான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.