ஏடிஎம் அட்டை வைத்திருப்பவர் விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம் கிடைக்குமா ?

பரவிய செய்தி

ஏடிஎம் அட்டை வைத்திருப்போர் விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம். தற்போது ஏடிஎம் அட்டை இல்லாதவர்களே இருக்க முடியாது. ஆனால், அந்த அட்டை வைத்திருப்பவர்கள் எதிர்பாராமல் விபத்தில் இறந்துவிட்டால் அவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்கப்படுகிறது. எந்த வங்கியின் அட்டை வைத்து இருக்கிறோமோ அந்த வங்கி மூலம் இத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது பலருக்கு தெரியவில்லை.

இதேபோல், வங்கிகளில் ரூ.12-க்கு காப்பீடு செய்து இருந்தாலும் விபத்தில் உயிரிழந்தால் ரூ.1 லட்சமும், ரூ.330-க்கு காப்பீடு செய்து இருந்தால் ரூ.5 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படுகிறது.

மதிப்பீடு

விளக்கம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில், எந்த வங்கியின் ஏடிஎம் அட்டை வைத்திருந்தாலும் விபத்தில் உயிரிழந்தால் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட நிதிசார் கல்வி மைய ஆலோசகர் எம்எஸ்ஏ காம்பரம் தெரிவித்ததாக செய்தித்தாளில் வெளியான செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.

Advertisement

2017-ல் PIB-யில் வெளியான தகவலில், ” அனைத்து ரூபே ஏடிஎம் அட்டை வைத்திருப்பவர்கள் விபத்தில் மரணம் மற்றும் நிரந்தர இயலாமைக்கான காப்பீட்டு பாதுகாப்பிற்கு பொருந்துவார்கள். ரூபே கிளாசிக் அட்டை வைத்திருப்பவர்கள் ரூ 1 லட்சம் கவருக்கும், ரூபே பிரீமியம் அட்டை வைத்திருப்பவர்கள் ரூ.2 லட்சக் கவருக்கும் தகுதி உடையவர்கள். இதற்கான இன்சூரன்ஸ் பிரீமியம் நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா வழங்கப்படும் என்றும், இந்த தகவல் மத்திய நிதித்துறையின் இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் நாடாளுமன்றத்தில் அளித்த பதில் ” என வெளியாகி இருக்கிறது.

2016-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி தினமலரில் வெளியான செய்தியில், ” பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டமானது நாட்டில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ஒரு வங்கி கணக்காவது தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது. நீலகிரியில் திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு இருந்தாலும் வங்கியின் ஏடிஎம் அட்டையை பலர் பெறாமல் உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூபே கார்டு வைத்திருப்பவர்களுக்கு விபத்தின் மூலம் இறப்பு அல்லது முழு ஊனம் ஏற்பட்டால் 1 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை வழங்கப்படும். இந்த இலவச காப்பீடு வசதியை பெற தங்கள் கார்டை ஒரு முறையாவது ஏடிஎம் மையத்தில் உபயோகித்து இருக்க வேண்டும் என ” வெளியாகி இருக்கிறது.

2019 டிசம்பர் 21-ம் தேதி வெளியான செய்தியில், ” கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் விபத்தில் உயிரிழந்தார். இந்தியன் வங்கியின் ரூபே ஏடிஎம் காப்பீடு மூலம் சிவகுமாரின் வாரிசான கிருஷ்ணவேணிக்கு ரூ.2 லட்சத்துக்கான காப்பீட்டுத் தொகை காசோலையாக அளிக்கப்பட்டது ” என வெளியாகி இருக்கிறது.

Advertisement

இது தொடர்பாக தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிபவரிடம் கேட்ட பொழுது, ரூபே கார்டுகளுக்கு அந்த காப்பீட்டு வசதி இருப்பதாகவும், பிற அட்டை வைத்திருப்பவர்கள் காப்பீட்டு தொடர்பாக உள்ள தனி நடைமுறையை வங்கியில் சென்று மேற்கொள்ளலாம் எனக் கூறினார்.

ரூபே ஏடிஎம் அட்டை வைத்திருப்பவர்களுக்கு விபத்தில் ஏற்படும் இழப்புக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது என கிடைத்த தகவல்கள் எடுத்துரைக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விவரங்களை, ரூபே ஏடிஎம் அட்டை வைத்திருப்பவர்கள் தங்களின் வங்கிகளுக்கு நேரடியாக சென்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

பெரும்பாலும் வைத்திருக்கக்கூடிய Master, VISA உள்ளிட்ட பிற ஏடிஎம் அட்டைத்தாரர்கள் விபத்தில் இறந்தால் அல்லது உடல் ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் இலவச காப்பீட்டு தொகை வழங்கப்படுவது தொடர்பாக தகவல்கள் இல்லை.

ரூபே அட்டைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பணபரிமாற்ற கேட்வே. உள்நாட்டைச் சேர்ந்த ரூபே அட்டைகளை பிரபலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொன்டு வருகிறது. அதில் ஒன்றாக, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தில் வங்கி கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூபே அட்டைகளை வழங்கி உள்ளது. இந்திய மக்கள் வெளிநாட்டு நிறுவன அட்டைகளின் பயன்பாட்டை குறைத்து ரூபே அட்டைகளை உபயோகிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

ரூ12-க்கு விபத்து காப்பீடு :  

2015-ல் பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா (தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி) மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (ஆயுள் காப்பீட்டு பாலிசி) ஆகிய இரண்டு இன்சூரன்ஸ் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. வங்கியில் கணக்குடையவர்கள் இவ்விரு திட்டங்களிலும் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் விபத்தில் இறந்தவர்கள் காப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்படும். இதற்காக ஆண்டிற்கு ரூ.12 வீதம் வங்கியின் மூலம் செலுத்த வேண்டும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீட்டுக்கு பிரீமியம் தொகையாக ரூ.330 வங்கியின் மூலம் செலுத்த வேண்டும். இரண்டிலும் இழப்பீடாக ரூ.2 லட்சம் கிடைக்கும் என ஆர்பிஐ இணையதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

மத்திய அரசின் விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டத்தை பெற விருப்பமுள்ளவர்கள், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு நேரடியாக சென்று விரிவான பதில்களையும், திட்டத்தில் இணைவது குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button