This article is from Feb 28, 2022

வாட்ஸ் அப் வதந்தி தகவலுக்கு பரிசு கொடுத்த தினமலர் !

பரவிய செய்தி

நீங்கள் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும்போது, திடீரென ஒரு திருடன் வந்து உங்களிடம் பணம் எடுத்து தருமாறு மிரட்டினால், உங்கள் பின் நம்பரை தலைகீழாக டைப் செய்யவும். அதாவது 123 என்றால் 321 என்று டைப் செய்யும்போது உங்கள் பணம் வெளியே வரும்; ஆனால், பாதியிலேயே சிக்கிக் கொள்ளும். உடனே, காவல் நிலையத்திற்கு தகவல் சென்று விடும். எல்லா ஏ.டி.எம்.மிலும் இவ்வசதி உண்டு. திருடனுக்கு ஆயிரம் ஐடியா தோன்றினால், அதை பாதுகாப்பவனுக்கு பத்தாயிரம் ஐடியா தோன்றாதா !

மதிப்பீடு

விளக்கம்

தினமலர் நாளிதழின் பிப்ரவரி 27-ம் தேதி வாரமலர் புத்தகத்தில் ” இது உங்கள் இடம் ” எனும் பகுதியில் திருட்டைத் தவிர்க்க ஏடிஎம் எண்ணை தலைகீழாக பயன்படுத்துமாறு கூறும் இத்தகவல் வெளியாகி இருக்கிறது.

திருடர்களிடம் இருந்து தப்பிக்க ஏ.டி.எம் எண்களை தலைகீழாக பயன்படுத்தினால் போலீஸ் வரும் எனப் பரவும் தகவல் வாட்ஸ் அப் வதந்தி என்றும், அவை கட்டுக்கதைகளே என கடந்த 2017-ம் ஆண்டிலேயே நாம் மீம்ஸ் மற்றும் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.

மேலும் படிக்க : ஏ.டி.எம் எண்ணை தலைகீழாக அழுத்தினால் போலீஸ் வருமா ?

ஆரம்பத்தில் இந்த தகவல் உண்மையா என்று அறிய வங்கிகளுக்கு பல மெயில்கள் அனுப்பப்பட்டது. நடைமுறையில் இதுபோன்ற எந்தவொரு பாதுகாப்பு அம்சமும் ஏற்படுத்தப்படவில்லை, ஏ.டி.எம் எண்களை தலைகீழாக பயன்படுத்துங்கள் என்று வரும் செய்திகள் அனைத்தும் கட்டுக்கதைகளே. மேலும் எந்தவொரு ஏ.டி.எம்களில் அவசர தலைகீழ் பின் தொழில்நுட்பம் பயன்படுத்தவில்லை என்றும், மிகக்குறைந்த ஏ.டி.எம்களில் மட்டுமே எச்சரிக்கை பட்டன்கள் உள்ளன என்றும் FTC-யின் அறிக்கை கூறுகிறது.

திருட்டைத் தவிர்க்க ஏ.டி.எம் எண்களை தலைகீழாக பயன்படுத்துமாறு கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் இந்த தவறான தகவல் பரவிக் கொண்டே தான் இருக்கிறது.

இப்படி இருக்கையில், தவறான தகவலை தினமலர் நாளிதழ் தன்னுடைய வாரமலரில் பதிவிட்டது மட்டுமின்றி மூன்றாம் பரிசாக ரூ.1500 என சீல் வைத்திருப்பது கொடுமையிலும் கொடுமையாக இருக்கிறது.

Please complete the required fields.




Back to top button
loader