12 மணி நேரத்திற்கு ஒருமுறை ஏடிஎம்-ல் பணம் எடுக்க வங்கிகள் திட்டமா ?

பரவிய செய்தி
ஒருமுறை ஏடிஎம்-ல் பணம் எடுத்த பிறகு 12 மணி நேரம் கழிந்த பிறகுதான் ஏடிஎம்-ல் பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விரைவில் அறிமுகமாகிறது.
மதிப்பீடு
சுருக்கம்
ஏடிஎம்களில் 6 முதல் 12 மணி நேரங்களில் இடையே இருமுறை மட்டுமே பணப் பரிவர்த்தனை செய்யும் திட்டத்தை செயல்படுத்த வங்கிகள் கமிட்டி முடிவெடுத்துள்ளனர். பெரும்பாலான பண கொள்ளை சம்பவங்கள் இரவு நேரத்தில் மட்டுமே அதிகம் நிகழ்வதால் அதனை குறைக்க தீர்மானித்து வருகின்றனர்.
விளக்கம்
டெல்லியில் நடைபெற்ற ஸ்டேட் லெவெல் பேங்கேர்ஸ் கமிட்டியின் சந்திப்பில் ஏடிஎம் மையங்களில் நிகழும் பண கொள்ளைகளை தடுத்து நிறுத்த புதிய திட்டங்களை உருவாக்குவது குறித்து விவாதித்து உள்ளனர். அதில், போலியான கார்டுகள் மூலம் பணம் எடுப்பது மற்றும் பணக் கொள்ளை போன்ற சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, ஒரு நாளைக்கு எந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் ஏடிஎம் மையங்களுக்கு சென்று பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதிகள் நடைமுறையில் உள்ளது. எனினும், சில முறைகளுக்கு மேல் ஏடிஎம்-ஐ பயன்படுத்தினால் அதற்கான சேவை கட்டணம் பிடிக்கப்படுகிறது. தற்பொழுது எப்பொழுது வேண்டுமானாலும் பணம் எடுக்கும் முறையை மாற்றி 6 மற்றும் 12 மணி நேரத்திற்கு இடையே இருமுறை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
” பெரும்பாலான பண கொள்ளை சம்பவங்கள் இரவு முதல் அதிகாலை வரையிலான இரவு நேரத்தில் மட்டுமே அதிகம் நிகழ்கிறது. இந்த முறையை செயல்படுவதன் மூலம் அதனை தடுக்க உதவும் ” என ஓரியண்டல் பேங்க் ஆப் காமெர்ஸ் உடைய எம்டி மற்றும் சிஇஓ முகேஷ் குமார் ஜெயின் தெரிவித்து இருக்கிறார்.
இந்த திட்டமானது 18 வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பொழுது எடுக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் எப்பொழுது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என்ற நிலை மாறிவிடும். குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டுமே பணத்தை எடுக்க முடியும். இல்லையேல், ஆன்லைன் பரிவர்த்தனைகளை நம்பி இருக்க வேண்டி இருக்கும்.
2018-19-ல் டெல்லியில் நிகழ்ந்த ஏடிஎம் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 179. இந்தியாவில் அதிக மோசடிகள் நிகழும் பகுதியாக டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. 233 சம்பவங்களுடன் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் நடந்த மோசடிகளில் எண்ணிக்கை 980, இது கடந்த ஆண்டு நிகழ்ந்ததை(911) விட அதிகம்.
ஏடிஎம்-களில் போலியான கார்டுகள், பண கொள்ளை குறித்த அச்சுறுத்தல் காரணமாக ஸ்டேட் பேங்க் ஏடிஎம்களில் எடுக்கும் பணத்தின் அளவைக் குறைத்துக் கொண்டது. கனரா வங்கி 10,000-க்கு மேல் எடுக்கும் பொழுது ஓடிபி அனுப்பி சரி பார்க்கிறது.
ஏடிஎம்களில் 6 முதல் 12 மணி நேரங்களில் இருமுறை மட்டுமே பணப் பரிவர்த்தனை செய்யும் திட்டத்தை செயல்படுத்த வங்கிகள் கமிட்டி முடிவெடுத்துள்ளனர். இதனை செயல்படுத்தினால் மீண்டும் மீண்டும் பணம் எடுக்க முடியாத நிலை உருவாக நேரிடும். ஒருவர் பணம் எடுக்கும் பொழுது தேவைக்கு குறைவான தொகை எடுத்து மீண்டும் முயற்சிப்பது அல்லது குறைந்த தொகையாக இருமுறை எடுக்கும் உள்ளிட்டவையை செய்ய முடியாமல் போகக்கூடும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.