ஆடிட்டர் குருமூர்த்தியின் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த மாறுபட்ட கருத்துகள்!

பரவிய செய்தி
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி, ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கியது 1996-ல் தொடங்கியது என்றும், தற்போது திட்டத்திற்கு எதிராகப் போராடும் கட்சிகளே அதற்கு அனுமதியளித்தவை என்று கூறியுள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் தனது ட்விட்டரில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது குறித்த மாறுபட்ட தகவல்களையும், கருத்துகளையும் கூறி நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார்.
விளக்கம்
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி அவர்கள் தனது ட்விட்டர் கணக்கில், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் 1996 ஆம் ஆண்டு தொடங்கியதாகவும், அப்போதைய ஆலங்குடி எம்.எல்ஏ கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜசேகர் ஆவார். அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் நடைபெற்றது என்று பதிவிட்டிருந்தார்.
அனுமதி அளித்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர் என்று கூறியிருப்பார். இந்த பதிவின் எதிரொலியாக அவரது கணக்கில் பல்வேறு விளக்கங்கள் மற்றும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆடிட்டராக இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்து தவறானக் கருத்தை தெரிவித்து வருவதாக குருமூர்த்தியின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குருமூர்த்தி கூறியது போன்று 1996-ல் சட்ட சபை உறுப்பினர் ராஜசேகர் அல்ல, அது சிவகங்கை தொகுதியும் இல்லை என்று முழு விவரமும் அளிக்கப்பட்டது. அதன் பின்னரே தனது ட்விட்டர் கணக்கில் கூறிய வருடம் 1996 இல்லை 2006, வருடம் மட்டும் தவறாகப் பதிவிட்டதாகவும் மற்ற விவரங்கள் அனைத்தும் சரி என்று பதிவிட்டிருந்தார்.
இதனைப் பற்றிய விவரம் வேண்டுவோர் விக்கிபீடியாவில் காவிரி டெல்டா Coal bed- மீத்தேன் Project என்று பார்க்கவும் என்று மற்றொரு பதிவில் கூறியுள்ளார்.
வருடத்தை மாற்றிக் கூறினாலும் அந்த வருடத்தில் மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் மற்றும் திமுக உடைய கூட்டணிதான். மேலும், ஆலங்குடி எம்.எல்.ஏ கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜசேகர் மற்றும் சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப,சிதம்பரம்.
இது ஒருபுறம் இருக்க நெடுவாசல் திட்டத்திற்கு அனுமதி அளித்தது காங்கிரஸ், திமுக கட்சி. அதனை அதிமுக அரசு சஸ்பென்ட் செய்தது, மோடி அரசு 2016-ல் திட்டத்தை வாபஸ் செய்தது என்றும் மற்றொரு பதிவில் கூறியுள்ளார்.
ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நெடுவாசல் திட்டத்தை வாபஸ் பெற்றதாக கூறியது முற்றிலும் தவறானது ஆகும். 2016- ல் நரேந்திர மோடி தலைமையிலான cabinet committee on Economic affairs, 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியளித்தது. இந்த அனுமதியின் மூலம் தனியார் நிறுவனங்கள் 15 வருடங்களுக்கு எண்ணெய் மற்றும் இயற்கை வாயு எடுக்கும் பணியில் ஈடுபடுவர். இந்த 31 இடங்களில் நெடுவாசல் கிராமமும் இடம்பெற்றுள்ளது.
அடுத்து, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, காவிரி டெல்டா coal-bed மீத்தேன் ப்ராஜெக்ட் பற்றி விக்கிபீடியாவில் பார்க்க சொல்வது எந்த வகையில் பொருந்தும். இதற்கு, மீத்தேன் திட்டத்திற்கும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் தொடர்பு உள்ளதாகவும், மீத்தேன் திட்டத்தின் விரிவுதான் ஹைட்ரோ கார்பன் என்று அவரே தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.
இரண்டிற்கும் தொடர்பு உள்ளதாக இருந்தால் எதற்காக மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்க வேண்டும், ஒருவேளை காங்கிரஸ், திமுக கட்சிகள் மக்களுக்கு எதிரானத் திட்டத்தை கொண்டு வந்ததாக இருந்தாலும் அதை ஏன் ஆளும் மத்திய அரசு தொடர வேண்டும்.
மறுபுறம், மீத்தேன் திட்டம் மட்டுமே ஆபத்தானது, ஹைட்ரோ கார்பன் திட்டம் வெறும் எண்ணெய் மற்றும் வாயு எடுக்கும் திட்டம் மட்டுமே என்று இடதுசாரி இணையதளத்தில் கூறியுள்ளதாக திசை திருப்பியுள்ளார்.
எதற்காக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கியது காங்கிரஸ் ,திமுக என்று கூற வேண்டும். பிறகு ஏன் மீத்தேன் திட்டம் பற்றி பேச வேண்டும். இறுதியாக மீத்தேன் திட்டம் மட்டுமே ஆபத்தானது ஹைட்ரோ கார்பன் ஆபத்தானது இல்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு மாறுபட்ட கருத்துகளை கூறி ட்விட்டரில் நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி. தவறான தகவல்களை கூறி மத்திய அரசின் மீது நல்லெண்ணம் உருவாக்க முனைகின்றனர் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட்ட நந்தினி :
மதுக்கடைகளை அகற்றவும், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு எதிராக போராடி வரும் மதுரையை சேர்ந்த நந்தினி, ” தமிழக அரசை மறைமுகமாக இயக்கி வரும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தியால் தமிழகத்தில் அசாதாரண சூழல் உருவாகிறது. எனவே, அவரது செயல்பாட்டைக் கண்டித்து சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டை தனது தந்தையுடன் முற்றுகையிட போவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட சென்ற போது இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
ஹைட்ரோ கார்பன் பற்றி மாறுபட்ட கருத்துகளை கூறிய ஆடிட்டர் குருமூர்த்தி ராமேஸ்வரத்தில் 1000 தூண்கள் ஒரு புள்ளியில் முடிவடைவதகக் கூறிய தவறான செய்தியையும் படிக்க : https://goo.gl/1HDKMS