அகமதாபாத்தில் ஆஸ்திரேலிய பிரதமருக்கு வரவேற்பு அளிக்க உருவாக்கப்பட்ட கண்காட்சியா ?

பரவிய செய்தி
இது சிட்னி அல்லது நியூயார்க் அல்லது லண்டன் நகரில் நடந்த நிகழ்ச்சி அல்ல. குஜராத் மாநிலம் கர்னாவதியில் (அகமதாபாத்) உள்ள சபர்மதி நதிக்கரையில் ஆஸ்திரேலிய பிரதமருக்கு வரவேற்பு அளிக்க உருவாக்கப்பட்ட கண்காட்சி. முழுக்க முழுக்க நமது இந்திய தொழில்நுட்பத்துடன் 5ஜி ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்த கண்கவர் கண்காட்சி நடத்தப்பட்டது.
மதிப்பீடு
விளக்கம்
ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மார்ச் 8ம் தேதி இந்தியாவிற்கு வருகை தந்தார். அவரின் வருகையை முன்னிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரையில் வரவேற்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கண்காட்சி எனக் கூறி 2 நிமிடம் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது சிட்னி அல்லது நியூயார்க் அல்லது லண்டன் நகரில் நடந்த நிகழ்ச்சி அல்ல.
குஜராத் மாநிலம் கர்னாவதியில் (அகமதாபாத்) உள்ள சபர்மதி நதிக்கரையில் ஆஸ்திரேலிய பிரதமருக்கு வரவேற்பு அளிக்க உருவாக்கப்பட்ட கண்காட்சி.
முழுக்க முழுக்க நமது இந்திய தொழில்நுட்பத்துடன் pic.twitter.com/AttHOUq3yQ
— GOPALAKRISHNAN BJP (@Gopalak12365012) March 11, 2023
வைரல் செய்யப்படும் வீடியோவில், ” Unity ” என படேல் அவர்களின் உருவம், வண்ண நிறத்தில் வரும் இந்தியாவின் வரைபடம் உள்ளிட்ட காட்சிகளை அங்குள்ள மக்கள் கண்டு ரசிக்கின்றனர்.
உண்மை என்ன ?
மார்ச் 8ம் தேதி குஜராத் அகமதாபாத் பகுதியில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் புகைப்படத்தை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
A true privilege to pay homage to Gandhi’s legacy at Sabarmati Ashram in Ahmedabad. pic.twitter.com/1yglPVq6LA
— Anthony Albanese (@AlboMP) March 8, 2023
வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து கீவார்த்தைகளைக் கொண்டு தேடுகையில், 2022 அக்டோபர் 1ம் தேதி “Drone show over Sabarmati river ahead of National Games “ எனும் தலைப்பில் இதே வீடியோ யூடியூப் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
2022 செப்டம்பர் 29ம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் வைரல் செய்யப்படும் வீடியோவின் காட்சிகள் இடம்பெற்று உள்ளதை பார்க்கலாம்.
2022 செப்டம்பர் 29ம் தேதி 36வது தேசிய விளையாட்டு நிகழ்வை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து டிரோன் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்கவர் காட்சிகள் நிகழ்ந்து உள்ளன.
மேலும் படிக்க : பிரதமர் மோடியின் கிரிக்கெட் திறமை எனப் பரப்பப்படும் யுவராஜ் சிங் தந்தையின் வீடியோ !
முடிவு :
நம் தேடலில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சபர்மதி நதிக்கரையில் டிரோன் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்கவர் காட்சிகள் ஆஸ்திரேலியப் பிரதமரை வரவேற்க உருவாக்கப்பட்டது அல்ல. அந்த வீடியோ கடந்த ஆண்டு 36வது தேசிய விளையாட்டு நிகழ்வை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.