This article is from Dec 01, 2017

ஆஸ்திரேலியாவில் தேசிய மொழியா தமிழ் மொழி அறிவிப்பா ?

பரவிய செய்தி

ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்துள்ளனர் .

மதிப்பீடு

விளக்கம்

ஸ்திரேலிய நாட்டில் தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் அதிகளவில் செய்திகள் பரவி வருகின்றன. அதேபோன்று, தமிழை பள்ளிகளில் இரண்டாம் மொழியாகவும், தமிழை ஆட்சி மொழியாக அறிவித்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் நீண்ட காலமாக பரப்பப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவின் தேசிய பாடத்திட்டத்தில் தமிழை சேர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் பார்லிமெண்ட்டில் கோரிக்கை மட்டுமே எழுந்தது. ஆஸ்திரேலியாவின் பார்லிமெண்ட் உறுப்பினரான ஹீயுஜ் மெக்டெர்மட் என்பவர் நியூசவுத் வேல்ஸ் பார்லிமெண்ட்டில் தமிழ் மொழி குறித்த கோரிக்கையை கல்வி அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமாக முன் வைத்துள்ளார் .

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான வெட்வோர்த்வில்லேவில் இருந்து உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டவர் ஹீயுஜ் மெக்டெர்மட் . இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள கிர்ராவின் பள்ளியில் வைத்து சனிக்கிழமைகளில் தமிழ் படிக்கும் வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த வகுப்புகளில் 650 க்கு அதிகமான மாணவர்கள் படித்து வந்துள்ளனர்.

இந்தியா , ஸ்ரீலங்கா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வர்த்தகம் மற்றும் வணிகத் தொடர்பின் முன்னேற்றத்தில் தமிழ் மொழியானது முக்கிய பங்காற்றுகிறது என்று நாடாளுமன்ற கூட்டத்தில் ஹீயுஜ் உரையாற்றி இருந்தார் . தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேறிவரும் ஓர் மாநிலம். சர்வதேச முதலீடுகள் மற்றும் வர்த்தக தொடர்புகளுக்கு தமிழ் மொழி அவசியம் என்றும் கூறியுள்ளார் .

ஆஸ்திரேலிய மாணவர்கள் தமிழ் மொழியை கற்பதன் மூலம் , தமிழர்களின் கலாசாரத்தையும் , பண்பாட்டையும் அறிய இயலும் . மேலும் தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல , அது ஒரு செழுமைமிக்க கலாசாரம் என்று கூறினார். தமிழின் அருமையை உணர்ந்து , தமிழை ஆஸ்திரேலியாவின் தேசிய பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் ஹீயுஜ் மெக்டெர்மட். இதற்க்கு அங்குள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் நன்றியையும், பாராட்டுகளையும் இருந்தனர்.

Updated : 

பள்ளிகளில் தமிழ் :

தமிழ் மொழியை பள்ளி பாடத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேசிய மொழியாகவும், இரண்டாம் மொழியாகவும் இணைத்து உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றனர். migrationtranslators என்ற இணையதளத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள மொழிகள் குறித்த தகவல் இடம்பெற்று இருக்கிறது.

அதில், எம்.பி ஹீயுஜ் மெக்டெர்மட் கோரிக்கையானது தவறாக திரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆஸ்திரேலியாவில் தமிழ் தேசிய மொழி இல்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் பகுதி வாரியாக வசிக்கும் தமிழ் மக்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் எனும் பகுதியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 2019 செப்டம்பர் செய்தியில், NSW(நியூசவுத் வேல்ஸ்) பகுதியில் உள்ள பள்ளியில் 2020-ல் முதல் தமிழ் மொழி கற்பிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. NSW பள்ளிகளில் தமிழ் மற்றும் மாசிடோனியன் உள்ளிட்ட பல புதிய மொழிகளை அடுத்த ஆண்டு முதல் கற்றுக் கொடுக்க உள்ளனர். இதில், ஹிந்தி, பஞ்சாபி, பெர்சியன் உள்ளிட்ட மொழிகளும் அடங்கும்.

தமிழ் செய்திகளில், சமூக வலைதளங்களில் ஆஸ்திரேலிய பள்ளிகளில் இரண்டாம் மொழியாக தமிழ் சேர்க்கப்பட உள்ளதாக பரவி வருகிறது. தமிழ் உடன் பல மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.

மலேசியாவில் 1957 ஆம் ஆண்டில் இருந்தே தமிழ்வழிக் கல்வி பயிற்றுவித்து வருகின்றனர். மலேசியாவில் மொத்தம் 524 தமிழ்வழிப் பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு :

நமக்கு கிடைத்த தகவல்களின் படி, ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவிக்கவில்லை. நீண்டகாலமாகவே தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்ததாக வதந்திகள் பரவி வருகிறது. அதேபோன்று, தமிழை இரண்டாம் மொழியாகவும் அறிவிக்கவில்லை.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூசவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழ் மொழி உள்பட பல மொழிகள் பயிற்றுவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. பள்ளிகளில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையே அங்கு முதன்மையானதாக இருக்கிறது. அதை விடுத்து வதந்திகளை பரப்ப வேண்டாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader